சேயோன் குன்றம்

மலையைப் பின்னணியாகக் கொண்ட  மணிநீலம் பூத்த குறிஞ்சிக் கவிதை இது.
சேயோன் குன்றம்

மலையைப் பின்னணியாகக் கொண்ட  மணிநீலம் பூத்த குறிஞ்சிக் கவிதை இது. தலைவன், தலைவியைக் காணச் செல்லும்போது அழகிய மலர் அல்லது தழையைத் தன் அன்பின் அடையாளமாகக் கொண்டு செல்வது சங்ககால வழக்கம். அதைத் தோழி மூலம் தலைவியிடம் சேர்த்துவிடுவான். இதற்குக் "கையுறையளித்தல்' என்று பெயர்.

தோழி அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யலாம். அவ்வாறு தோழி ஒருத்தி, தலைவன் தந்த கையுறையை மறுத்த செய்தியை புலவர் திப்புத் தோளாரது கவிதை காட்டுகிறது. அதே நேரத்தில், இக்கவிதையில் முருகன் அரக்கர்களை சூரசம்ஹாரம் செய்த நிகழ்வையும் எடுத்துரைக்கிறது.

அப்பாவி தலைவன் ஒருவன் ஒரேயொரு செங்காந்தள் மலரை எடுத்துவந்து தலைவியிடம் கொடுக்குமாறு வேண்டுகிறான். அதற்கு, "தாங்கள் வாழும் மலையில் என்னவெல்லாம் உண்டு' என்பதைப் பட்டியலிட்டுச் சொல்லிக் காட்டுகிறாள் தோழி.

"செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே (குறுந்-1)

செங்களம்

முருகப்பெருமான், கொடிய சூரன் முதலிய அரக்கர்களைக் கொன்று அழித்தவன். அவ்வாறு அவன் அழித்த போர்க்களம் முழுதும் ரத்த வெள்ளத்தால் செந்நிறக் களமாகியது. 

செவ்வம்பு 

முருகன் கையேந்திய அம்பும் எதிரிகள் உடலைத் துளைத்து ஊடுருவியதால் செந்நிறத் தோற்றம் பெற்றது. 

செங்கோட்டு யானை

அம்முருகன் ஊர்ந்து வந்த யானையானது தந்தங்களால் பகைவர்களைக் குத்திக் கொன்றதால் அவையும் குருதி படிந்துசிவந்து விளங்கின.

செஞ்சேயோன்

போர்க் கடவுளாகிய முருகனேகூட செந்நிறம் வாய்ந்த தோற்றங் கொண்டவன் என்பதால்தானே "சேயோன்' என்றழைக்கப்படுகிறான்! 

குருதிப்பூ (குலைக் காந்தட்டு)

குறிஞ்சித் தலைவன் முருகன் வாழும் எங்கள் மலையும் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாய் நிறைந்திருப்பதால், குருதி படிந்ததுபோல செந்நிற மலர்களால் காட்சியளிக்கின்றது. இத்தகைய மலையில் வாழும் தலைவியைக் காண வந்த தலைவன் கையுறையாக ஒரே ஒரு செங்காந்தள் மலர் எடுத்துவந்து தோழியிடம் தந்தான். அதைப் பார்த்த குறும்பு மிகுந்த தோழியின் பேச்சுதான் மேற்கண்டது. 

முருகப்பெருமானின் போர்க்கோலத்தைச் சிவந்த நிறம் கொண்டு அலங்கரித்த தோழி, மலையில் காந்தள் மலரின் சிவப்பைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் "குருதிப்பூ' என்கிறாள். போர்க்களம் நிறைந்து கிடக்கும் ரத்தத்தைக் குருதி என்று கூறாமல் மலரைக் குருதிப்பூ என்றது முரண்நயம்.

ஓர் அகப்பாடலில் புறச் செய்தியைப் பெய்து பேசிய தோழியின் நுண்ணறிவு சிறப்பானது; சிந்திக்கத்தக்கது. 

இப்பாடலில் எப்போதும் போல் முருகனின் அழகினைக் குறித்துப் பேசாமல் சினத்துடன் நின்றமை, அஞ்சாமையுடன் எதிரிகளை வென்றது, யானையின் கொம்பில் எதிரணியினை மாட்டி வீழ்த்தியது, வேலின் நுனியில் குருதிக்கறை 
படிந்திருக்க சேயோன் காட்சியளித்தமை என்று எவ்விடமும் குருதிப்புனல் கொப்பளித்து நிற்கின்றது. ஆனால், தோழி அவற்றையெல்லாம் "குருதி' என்ற சொல்லால் சுட்டாது செம்மை, சிவப்பு என்ற சொல்லினால் சுட்டினாள். ஆனால், காந்தள் மலரின் மென்மையைச் சுட்ட வேண்டிய இடத்தில் "குருதிப்பூ' என்று வீரவுணர்வுடன் கூறுகிறாள்.

"எதிரிகளைக் கொன்று போர்க்களத்தையே செங்களமாக்கிய முருகன் வாழும் குன்று இது. அவன் கையிலிருப்பதும் செங்கோலம்பு. அவன் ஊர்தியும் செங்கோட்டு யானை. இவ்வளவு ஏன், அவனே சிவந்தநிறச் சேயோன்தானே! இப்படி எங்கும் செந்நிறமாக விளங்கும் மலையில் வாழும் எங்களுக்கு நீ செங்காந்தள் மலரைப் பரிசாய்த் தருகிறாயே! எங்கள் மலையெங்கும் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாக மலர்ந்திருப்பதை நீ பார்த்தாயா?' என்று கேட்கிறாள்.

தம் மலைக் கடவுளாகிய முருகனின் வடிவத்தைப் பாராட்டுவதால் சமயக் கவிதையாகவும்; தம் எதிரிகளை முருகன் நொறுக்கிய முறையை விவரிப்பதால் போர்க் கவிதையாகவும்; அன்பிற்குரியவளுக்குக் கையுறைமலர் அளிக்க வந்த தலைவன் தென்படுவதால் அகப்பொருள் கவிதையாகவும்- மூவகைச் சூழல்கள் காணப்பட்டு, கவி கற்போர்க்கு இன்பம் ஊட்டுகின்றது.
-முனைவர் இரா.மணிமேகலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com