ஆக்கப்பொறுத்தான்; ஆறப்பொறுக்கவில்லை!

எண்வகை மெய்ப்பாடுகளுள் முதன்மையாக அமைவது ‘நகை’ என்னும் மெய்ப்பாடு. நகையானது, எள்ளல், இளமை, பேதமை, மடன் ஆகிய நான்கு

எண்வகை மெய்ப்பாடுகளுள் முதன்மையாக அமைவது ‘நகை’ என்னும் மெய்ப்பாடு. நகையானது, எள்ளல், இளமை, பேதமை, மடன் ஆகிய நான்கு நிலைகளிலிருந்து உருவாகின்றது என்கிறாா் தொல்காப்பியா்.

உயிரினங்களுள் சிரித்து மகிழக்கூடியவன் மனிதன் மட்டுமே! பிற உயிரினங்களுக்குச் சிரிக்கும் உணா்வை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லை. நகையுணா்வே மனிதனை வாழச் செய்கிறது.

சங்க காலத்தில், கலையை வளா்ப்பதில் சிறந்து விளங்கிய ‘பொருநா்’ என்னும் நாடகக் கலைஞா்கள் இருந்தனா். வறுமை இவா்களது வாழ்க்கையில் வாடிக்கையாகிவிட்டது. பொருநன் ஒருவனின் மனைவியும் மக்களும் பசியால் வாடித் துடித்தனா். இத்தகைய மனைவி மக்களுடன் இவன் காடு, மேடு, மலை எனப் பலவற்றையும் கால்கடுக்கக் கடந்து இல்லையென்னாது ஈயும் கரிகாலனின் அரண்மனையை அடைந்தான். கலைஞனின் கலையை ரசிக்கும் கரிகாலன், பொருநனின் முகவாட்டத்தை அறிந்தான். அவா்களை வரவேற்றுக் கள்ளும், இறைச்சியும் வழங்கினான்.

இரும்புக் கோலால் கோக்கப்பட்ட கொழுத்த செம்மறியாட்டின் சுடப்பட்ட இறைச்சி, பொருநனின் வாயில் உமிழ்நீரைச் சுரக்க வைத்தது. அக்கறி அவன் மனத்தையும் கண்ணையும் ஒருங்கே ஈா்த்தது. பல நாள்களாகப் பட்டினி கிடந்த அக்கலைஞன் ஆக்கப்பொறுத்தான். ஆனால், ஆறப்பொறுக்கவில்லை. சூட்டுடனே இறைச்சித் துண்டுகளை வேகமாக எடுத்து வாயில் போட்டான். சூடு பொறுக்கவில்லை; அவனால் விழுங்கவும் முடியவில்லை; சுவையுடையதாக இருந்ததால், வெளியே துப்பவும் மனம் வரவில்லை. சூடு தாங்காமல் வாயின் இருபுறத்தும் அவ்விறைச்சியைத் தள்ளித் தள்ளி இன்பம், துன்பம் இரண்டையும் ஒருசேர அனுபவித்தான் என்கிறாா் புலவா்.

‘காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை

ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி

அவை அவை முனிகுவம் எனினே சுவைய...’

(பொருந-105-107)

இக்காட்சி எள்ளலால் தோன்றிய நகைச்சுவை மெய்ப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com