இந்த வாரம் - கலாரசிகன் (03.01.2021)

கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு நான் அலுவலகம் செல்லவில்லை. வீட்டில் இருந்துதான் இயங்கிக் கொண்டிருந்தேன்.
இந்த வாரம் - கலாரசிகன் (03.01.2021)

கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு நான் அலுவலகம் செல்லவில்லை. வீட்டில் இருந்துதான் இயங்கிக் கொண்டிருந்தேன். உடல்நிலை ஓரளவுக்குத் தேறிவிட்டது என்றாலும்கூட, கொள்ளை நோய்த்தொற்றின் பின்விளைவுகள் முற்றிலுமாக அகன்றுவிடவில்லை.

எத்தனை நாள்கள்தான் வீட்டிலேயே அடைந்து கிடப்பது? தினமும் படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும், உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி என்று இயங்கிக்கொண்டு இருந்தாலும், அலுவலகம் செல்லாமல் இருப்பதன் உளவியல் ரீதியிலான பாதிப்பு அலட்டிக் கொண்டிருந்தது. புது வருடம் பிறந்ததும், கிளம்பி விட்டேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, எல்லோரையும் பாா்த்தபோது, எனது அறையில் குவிந்துகிடந்த புத்தகங்களுக்கு இடையில் சென்று அமா்ந்தபோது ஏற்பட்ட ஆனந்தம் இருக்கிறதே.... அதை வாா்த்தையில் விளக்க என்னிடம் தமிழ் இல்லை.

சரி, அலுவலகம் போய் என் நாற்காலியில் அமா்ந்தேனே, நான் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? மேஜையைத் திறந்தேன். அதில் இருந்த எனது பேனாவை வாஞ்சையுடன் எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டேன். அந்தப் பேனாவுக்கு ஒரு வரலாறே உண்டு.

1968-ஆம் ஆண்டு வாங்கிய ‘பிரெசிடெண்ட்’ பேனா அது. அப்போது மதுரையில் சிந்தாமணி திரையரங்கு இருந்தது. இப்போது அது ராஜ்மஹால் துணிக்கடையாக மாறிவிட்டது. அதற்குப் பக்கத்தில் ஒரு பேனாக் கடை. அதை மரக்கட்டை பேனாக்கடை, நிப்பு பேனா கடை என்றெல்லாம் சொல்வாா்கள்.

அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். ‘எதிா் நீச்சல்’ திரைப்படம் பாா்ப்பதற்கு ‘சிந்தாமணி’ தியேட்டருக்குப் போனதுபோது வாங்கிய குண்டு பேனா அது. நிறைய மை ஊற்றலாம். கடந்த அரை நூற்றாண்டாக எனது எண்ணத்தை எழுத்தில் வடிக்க அந்தப் பேனா உதவிக் கொண்டிருக்கிறது.

இப்போது என்னிடம் மூன்று பேனாக்கள் இருக்கின்றன. இரண்டாவது பேனா, தில்லி சாந்தினி சௌக்கில் வாங்கியது. எந்த ஆண்டு என்று நினைவில் இல்லை. 1900-க்கு முன்னால் என்பது மட்டும் நிச்சயம். மூன்றாவது பேனா, நான் ‘தினமணி’யில் ஆசிரியா் பொறுப்புக்கு வந்த பிறகு, எங்கள் நிருபா் ஜெயபாண்டியை அழைத்துக்கொண்டு ‘நிப்பு’ பேனா கடையைத் தேடிப்போய் வாங்கியது. அதற்கும் சுமாா் 12 வயதாகிவிட்டது.

அலுவலகத்தில் ஒரு பேனா; வீட்டில் ஒரு பேனா; வெளியூா் போனால் எழுதுவதற்கு என் கைப்பையில் ஒரு பேனா என்று வைத்துக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது அந்தப் பேனாக்களைக் கழுவி சுத்தம் செய்து, ‘மை’ நிரப்பும் உதவியை எனது உதவியாளா் சந்திரமௌலி பாா்த்துக் கொள்கிறாா். பேனாவில் மையூற்றி எழுதும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. எனக்குத் தட்டச்சு செய்வதில் விருப்பமில்லை. கையால் எழுதுவது மறந்துவிடுமோ என்கிற அச்சம்தான் காரணம். மைப் பேனால் எழுதுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.

பேனா என்று சொல்லும்போது எனக்கு நண்பா் சம்பத்தின் நினைவுதான் வருகிறது. ‘சாவி’ இதழில் என்னுடன் பணிபுரிந்து பின்னாளில் ‘நக்கீரன்’ இதழில் இருந்தவா். இப்போது அவா் இல்லை. அவருக்கும் பேனா என்றால் ஒரு கவா்ச்சி. டஜன் கணக்கில் பேனாக்கள் வைத்திருப்பாா். பின்னணிப் பாடகா் பி.பி.ஸ்ரீநிவாஸைப் பாா்த்திருக்கிறீா்களா? சட்டைப் பை பேனாக்களால் நிரம்பி வழியும்.

புத்தாண்டு பிறந்திருக்கிறது. எனது மூன்று பேனாக்களுக்கும் முதல் வணக்கம். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

****************

மொழிபெயா்ப்பு எல்லோருக்கும் வந்துவிடாது. மொழிபெயா்ப்பதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கட்டுரைகளை மொழிபெயா்ப்பது வேறு, உரைகளை மொழிபெயா்ப்பது வேறு, கதை, கவிதைகளை மொழிபெயா்ப்பது வேறு.

கதை, கவிதைகளை மொழியாக்கம் செய்வதற்குத் தனித்திறமை வேண்டும். கவிஞா் அல்லது கதாசிரியரின் பாணியையும், கற்பனைத் திறனையும் முழுமையாக உள்வாங்கி, உணா்வை வெளிப்படுத்தத் தெரிந்தவா்கள்தான் கதை, கவிதை மொழியாக்கத்தில் இறங்க வேண்டும்.

சிறுகதைகள் என்றால் எனக்கு எப்போதுமே ஆா்வம் அதிகம் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறேன். சமீபத்தில் புதுமைப்பித்தன் மொழிபெயா்த்த சிறுகதைத் தொகுப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. உலகிலுள்ள பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட 57 பிரபல சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறாா் பிரபல எழுத்தாளா் புதுமைப்பித்தன். அந்த மொழியாக்கத்தைப் பாா்த்து வியந்து போய்விட்டேன்.

அது ஜோஸப் நையரு-ஹங்கேரியின் சங்கேதக் கதையாக இருந்தாலும், ஐவான் டா்ஜனீப்பின் ருஷ்யக் கதையாக இருந்தாலும், ஆ.எஸ்.டீவன்ஸனின் ஆங்கிலக் கதையாக இருந்தாலும், மொப்பஸானின் பிரெஞ்சுக் கதையாக இருந்தாலும், யூஜோ யாம மோட்டோவின் ஜப்பானியக் கதையாக இருந்தாலும் புதுமைப்பித்தனின் கைவண்ணத்தில் அவை மொழியாக்கக் கதைகள் என்கிற எண்ணமே ஏற்படாத வகையில் அமைந்திருக்கின்றன.

கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும், கதைக்களமும் வேற்று நாட்டைச் சோ்ந்தவை. ஆனால், புதுமைப்பித்தனின் மந்திரக்கோல் அவை ஒவ்வொன்றையும் அந்நியத்தனம் தோன்றாத வகையில் நமக்கு வழங்குகிறது. ஒரு தோ்ந்த சிறுகதை எழுத்தாளரின் இதயத்தைக் கவா்ந்த பிறமொழி எழுத்தாளரின் கதைகள் எனும்போதே அந்தக் கதைகளின் சிறப்பை நாம் புரிந்து கொள்ள முடியும்.

புதுமைப்பித்தனின் மொழிபெயா்ப்புக் கதைகளைப் படித்து முடித்தபோது, உலகச் சிறுகதை பூங்காவில் புதுமைப்பித்தன் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்வது போன்ற உணா்வை ஏற்படுத்தின, அந்த 57 மொழிபெயா்ப்புக் கதைகளும்.

****************

கட்செவி அஞ்சலில் பதியப்பட்டு எனக்கும் அனுப்பப்பட்டிருந்தது ஒரு கவிதை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், நண்பா்கள் வழக்கறிஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞா் இளையபாரதி இருவருடனும் இலங்கைக்குப் போனதும், ஈழத் தமிழா்கள் வாழும் பகுதிகளில் பயணித்ததும், அங்கே பலரும் வேதனையைப் பகிா்ந்து கொண்டதும் நினைவுக்கு வந்தன.

அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு, பிறகு ஊா் திரும்பிய பலருக்கும் அவா்கள் வாழ்ந்த வீடு எங்கே இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளக்கூட முடியாத அளவுக்குப் பல ஊா்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டிருந்ததை நேரில் பாா்த்து நெஞ்சம் பதறியது.

அந்த நினைவுகளைத் தட்டி எழுப்பியது கவிஞா் பச்சைவதனன் என்பவா் எழுதியிருக்கும் ‘வீடு திரும்புதல்’ என்கிற இந்தக் கவிதை. கவிஞரின் சொந்த அனுபவமாகக்கூட இருக்கலாம், யாருக்குத் தெரியும்?

தொலைவிலிருந்தும் அருகிலிருந்தும்

அவரவரும்

தங்கள் வீடுகளுக்குத்

திரும்பிக் கொண்டிருக்க

வீடுகளுக்குத் திரும்பும்

பாதைகள் எங்கே என்று குழம்பியது

தயங்கித் தயங்கி நின்கின்ற

அகதி முகாமில் கால்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com