கருணா"கர' யானைகள்!

உயிரிரக்கம் என்பது மனிதனுக்கு இன்றியமையாது இருக்க வேண்டிய ஒரு குணம். அஃறிணை உயிரினங்கள்கூடக் கருணை கொண்டுள்ளதை நம்மால் காணவும், அறியவும் முடிகிறது.
கருணா"கர' யானைகள்!


உயிரிரக்கம் என்பது மனிதனுக்கு இன்றியமையாது இருக்க வேண்டிய ஒரு குணம். அஃறிணை உயிரினங்கள்கூடக் கருணை கொண்டுள்ளதை நம்மால் காணவும், அறியவும் முடிகிறது. சங்க இலக்கியங்களில் இதற்கான சான்றுகள் பல உள்ளன. 

தாவர உண்ணிகளான காட்டு விலங்குகளுள் மிக வலிமையும், பெருமையும் உடையது யானை. ஆதலால், இது கடவுள் நிலையில் வைத்து வணங்கப்படுகிறது. இதன் பாசமும், கருணையும், நுண்ணறிவும் மெச்சத்தக்கன. 

யானையின் செயல்கள் வருணிக்கப்படும் சங்க இலக்கியங்களுள் ஒன்று குறுந்தொகை. இதில், தோழி கூற்றாக வரும் கபிலரின் பாடல் (பா.225) குறிப்பிடத்தக்கது. பிடியாகிய பெண் யானையொன்று தனது கன்றின் மீது காட்டும் அன்பைப் புலப்படுத்துகின்றது அப்பாடல்.

தலைவன் பொருள் ஈட்டச் செல்கிறான். இதை எண்ணித் தலைவி வருந்துகிறாள். இது கண்ட தோழி, "தலைவனே! தலைவியை விட்டுப் பிரிந்து செல்லும் நீ, காலம் நீட்டிக்காமல் விரைவில் மீண்டு வருதல் வேண்டும்' எனக் கேட்டுக் கொள்கிறாள். அதுவும், "தனக்குக் கேடுவந்தபொழுது வலிய வந்து பிறர் உதவியதால் அரசு கட்டில் ஏறிய மன்னன் ஒருவன், அத்தகையோரை எவ்வாறு மறக்கலாகாதோ, அவ்வாறே தலைவியை நீ மறக்கலாகாது' என்றும் கூறி வேண்டுகிறாள்.

குறிஞ்சி நிலத்தவனான அவனின் சிறப்பையும், அந்நிலத்தில் உள்ள பெண் யானையின் சிறப்பையும் பேசுகிறாள். அதாவது, குறிஞ்சிக் குறவர்கள் தம் வீட்டின் பெரிய முற்றத்தில் "தினை'யைக் கொட்டி வைத்திருப்பர். அங்கு வரும் யானைகள் அவற்றை விருப்பமுடன் உண்ணும் நிகழ்வும் அங்கு நடக்கும். 

தோழியால் இங்குச் சுட்டப்படும் பெண் யானை, தனது கன்று பசியால் வருந்தாதவாறு அதற்குத் தனது மடியிலுள்ள பாலினை ஊட்டிக்கொண்டே தானும் தனக்கு வேண்டிய தினையை துதிக்கையால் எடுத்து உண்கிறது. பெண் யானை தன் பசியைப் போக்குவது மட்டுமின்றி,  தன் கன்றுக்குப் பால் அறாது ஊற வேண்டும் என்பதற்காகவும் தினையை உண்கிறது என்ற அதன் கருணை,  தாய்ப்பாசம் இங்கு வெளிப்படுகிறது.

கன்றுதன் பயமுலை மாந்த, முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல்நாட !
கெட்டிடத்து உவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந்து அமையாய் ஆயின், மென்சீர்க்
கலிமயில் கலாவத்தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கே!

மற்றொரு பாடல் (307),  ஆண் யானையின் பாசக் கருணையைப் பேசுகிறது. தலைவியின் கூற்றுப் பாடலான இதை இயற்றியவர் கடம்பனூர்ச் சாண்டிலியனார். தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாமையால் வருந்துகிறாள். இதுகண்ட தோழி, "நீ ஆற்றியிருத்தலே நன்று' என்று அவளைக் கடிந்துரைக்கிறாள். இதற்கு விடையளிக்கிறாள் தலைவி. 

ஆண் யானையின் துணையாகிய பிடி பசியால் துன்புறுகிறது. அதைக் கண்டு வருந்திய ஆண் யானை, அங்கே உயர்ந்து வளர்ந்து நின்ற "யா' மரத்தைத் தன் தந்தத்தால் குத்தி, உலர்ந்து போயிருந்த அதன் பட்டையைச் சுவைத்துப் பார்க்கிறது. அதிலே, சுவையுமில்லை; ஈரப்பசையுமில்லை;  இதை தன் துணையாகிய பிடி எவ்வாறு தின்று பசியாற முடியும் என்றெண்ணி வருந்துகிறதாம்.

அத்துடன் நில்லாமல், அந்த "யா' மரத்தின் உச்சியில் காணப்படும் பசிய தழைகளைப் பார்த்து ஏங்கி, ஓங்கி முழங்குகிறதாம். "அத்தகைய பாலை நிலத்தே சென்ற தலைவர் நம்மை மறந்துவிட்டனரோ' என்று கூறி அஞ்சுகிறாள் தலைவி.

மேற்சுட்டிய பாடல்களால் "கருணாகரம்' வாய்ந்த யானைகளின் அன்பு புலனாகிறது. "ஒரு கை' யானைக்குக் கருணையுண்டு என்பது "பொருந்தும் கருத்து'. "இரு கை' மனிதனுக்குக் கருணை இல்லையோ? என்பது ஐயுற்று "வருந்தும் கருத்து'! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com