சைவக் கோளரி விடையேறி வந்த விடை!

திருக்கோயில் கருவறையில் ஒலித்த "தமிழ்மறை' கருவறைக்கு வெளியே நின்று ஒலிக்கக் காரணம் என்ன?
சைவக் கோளரி விடையேறி வந்த விடை!


திருக்கோயில் கருவறையில் ஒலித்த "தமிழ்மறை' கருவறைக்கு வெளியே நின்று ஒலிக்கக் காரணம் என்ன?  நிறைமொழி மாந்தர்களாகிய அன்றைய ஆதி அந்தணர்களின் வாய்வழி வந்த தமிழ்மறை என்னவாயிற்று?  இந்த வினாக்களுக்கெல்லாம் வெள்ளை விடை அளிக்க உதித்தவர்தான் சைவ உலகம் "சைவக் கோளரி' என்று பெருமிதம் தோன்ற அழைக்கும் ஆளுடைய பிள்ளையார் - திருஞானசம்பந்தர். சீர்காழிப் பெரும்பதியில் சிவபாத இருதயர் என்ற கவுணியர் குல ஆதி சைவர்க்கும் பகவதி அம்மையாருக்கும் பிறந்த பிள்ளையே அவர்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை பாலி, சம்ஸ்கிருதம், பிராகிருத மொழி பேசிய களப்பிரர்கள் ஆட்சியில், தமிழகம் "இருண்ட காலம்' என்றே குறிக்கப்பட்டுள்ளது. தமிழில் முற்றுமாகக் கலந்துவிட்டது சம்ஸ்கிருதம்.  அதனால், தமிழ் மறைகள் திருக்கோயில் கருவறைகளுக்கு வெளியே நின்று ஓதப்பட்டன, பெரும்பாலான திருக்கோயில்களில் வழிபாடு முற்றும் அற்றுப்போயின. அதனால் கோயில்கள் தாமே இற்று வீழ்ந்தன. 

தமிழ் வழிபாடு இன்றிப் பல கோயில்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.  அந்த இடங்களில் சமணப் பள்ளிகள் கட்டமைக்கப்பட்டன.  தமிழகம் எங்கும் சமணர்களும் சாக்கியரும் தங்களுடைய மடங்களை நிறுவியதால், தமிழ் இசை வழிபாடு கருவறைக்கு வெளியே தள்ளப்பட்டது.

ஆளுடைய பிள்ளையாரை சீர்காழிப் பதியில் சிவச் செம்பொருள் திரு அவதாரம் செய்யவைத்த காரணத்தை, தெய்வச் சேக்கிழார் பதியும் அழகே அழகு!

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க
பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயல்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைகொண்டு திருத்தொண்டு பரவுவாம்' 
(பெ.பு.)

இந்தப் பதிவில், "வேதநெறி தழைத்தோங்க' என்பதால் வேத அருநெறியும், "மிகு சைவத் துறை விளங்க' என்பதால் பதிகப் பெருவழியும்,  "பூத பரம்பரை பொலிய' என்பதால் மெலிந்த சைவம் பொலிவுறப் போகிறது என்றும் பதிவிட்டு, இனி தமிழ் இசையால் பரவும் வழிபாடு வெளிப்படத் தொடங்கும் என்றும் தெய்வச் சேக்கிழார் பதிவிட்டுள்ளார் என்றே சைவ உலகம் மகிழும்.  

ஆளுடைய பிள்ளையார் புனிதவாய் திறந்து அழுததாம்.  மனிதவாய் எதற்கு அழும்?  உணவுக்கும், உடைக்கும், உறையுளுக்கும் அழும்.  அழும்போதே வாய் குவியும், குழறும், கூம்பும், சாம்பும். ஆனால்,  ஞானப்பால் உண்ட "பாலறாவாய்' மலர்ந்து அழுததாம் பிள்ளை.

அந்த ஞானசம்பந்தப் பிள்ளை தன் மூன்றாவது அகவையில் பாடிய முதல் பாட்டு, சமண, சாக்கியர் தருக்கங்களுக்கு "வெள்ளை விடை' தருவதாய் அமையும் வகையில் விடையேறி வந்து ஞானப் பாலூட்டிய பரம்பொருளைத் தம் ஒற்றை விரல் காட்டி,

"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனை  நாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மானிவ னன்றே' 
(1-1-1)

எனும் பாட்டால் விடையேறி வந்து "வெள்ளை விடை' காட்டினார் திருஞானசம்பந்தர்.

"இறைமைக்கு உருவமில்லை, இருந்தால் காட்டுங்கள்' என்று தருக்க முறையில் வாதிடும் சமண, சாக்கிய சமயத்தார்க்கு விடை சொல்லமாட்டாது தமிழகச் சமயங்களான சைவமும், வைணவமும் மறுகின.  பெண்ணோடு கூடி வாழும் இல்லறம், இன்ப வீடாகிய மேல் உலகத்து - நிருவாணத்துக்குத் தடை என்றும்; இசை, நாடகம், கூத்து முதலான கலைகள் புலனடக்கத்துக்குப் பெரிய தடை என்றும்; பெண் பிறவி எடுத்தோர் ஆண் பிறப்பெடுத்துத் துறவறம் முயன்றாலேயே விண்ணுலக வாழ்வை - நிருவாணத்தைப் பெறமுடியும் என்றும்; துறவறமே வீட்டின்ப வாழ்வுக்குத் தக்க வழி என்னும் சமண, சாக்கியர்கள் சங்கம் வைத்துத் தம் கொள்கைகளை நிலைநாட்டத் தலைப்பட்டார்கள்.

இவற்றை எதிர்கொள்ள சைவ, வைணவ உலகம் அகப்பொருள் துறையான  தலைவன் - தலைவி பாவனையில், இறைவன் - தலைவன், உயிர் - தலைவி என்னும் பக்தி இயக்கத்தைத் தமிழகத்தில் நிலைநிறுத்தத் தொடங்கின.  அதன் பின்னர் தமிழ் இசை வழிபாட்டை நடைமுறைப்படுத்தியது சைவ சமயம்.

ஆளுடைய பிள்ளையாரின் வாழ்க்கையில் மூன்றாம் அகவை முதல் பதினாறாம் ஆண்டு வரை நிகழ உள்ள சிறப்பு நிகழ்வுகளைக் காட்டுவார்போல், 

"தோடுடைய செவியன்' என்ற தம் முதல் பாட்டிலேயே பதிகிறார் பதிக வேந்தரான தமிழ் ஞானசம்பந்தர்.

இந்த முதல் பாட்டால், விண்ணக வீட்டின்ப வாழ்வைப் பெற துறவறமே வழி என்ற சமணர் கொள்கையையும், இறைமைக்கு உருவம் இல்லை, இருந்தால் காட்டுங்கள் என்ற அவர்களின் வாதத்தையும் எதிர்கொள்வதைப்போல "தோடுடைய செவியன் இவனன்றே' என்று சுட்டிக்காட்டி மங்கை நல்லாளின் தோடு - சிவனின் இடக்காதில் காட்டி,  இந்த மண்ணிலேயே வீட்டின்பம் காணலாகும் காட்சி - இவனன்றே' என்று முக்திநாதரைக் காட்டுகின்றார் திருஞானசம்பந்தர்.

முதலில் அவர் கண்டது தோடு - வெள்ளை,  ஏறி வந்த விடை - எருது - வெள்ளை, சூடிவந்த மதியும் (நிலாவும்) வெள்ளை, பூசி வந்த சுடலைப் பொடி - திருநீறும் வெள்ளை என்று காட்டுவார் "வாகீச கலாநிதி' கி.வா.ஜகந்நாதன்.

"தமிழோடு இசைப்பாடல் மறந்தறியாத்' திருஞானசம்பந்தர்க்கு இறைவன் பொற்றாளம் அளித்துப் பாடிப் பரவும் பதிகப் பெருவழியைக் காட்ட இருக்கிறார் என்னும் குறிப்பும் - செவிவழி ஊறிவரும் இசையைத் தலந்தோறும் பாடலால் பாடிப் பரவியுள்ளார் என்ற குறிப்பும், "தோடுடைய செவியன்' என்றதால் அறியலாம்.

பரசமயத்தாரின் பொய்யுரைகளைப்  பொடிப்பொடியாக்குவார் இவர் என்பதைப் பின்னர் நிகழப்போகும் பாண்டியனின் வெப்பு நோயைக் "காடுடைய சுடலைப் பொடியால் தீர்ப்பார்' என்னும் குறிப்பைக் காட்டுவார்போல "பொடி பூசி' என்னும் தொடரால் முன்னுரைத்த திருஞானசம்பந்தரான தமிழ் விரகர், "மந்திரமாவது நீறு' என்று இசைத்து, திருநீற்றுப் பொடியினைப் பாண்டியனின் உடல்மேல் பூசி, கூன் பாண்டியனான அவனை நிமிர்த்தி, "நின்ற சீர் நெடுமாறன்' ஆக்குவார் என்ற குறிப்பும் தோன்ற இந்த முதற்பாட்டு இறையருளால் வெளிப்பட்டது.

இவ்வண்ணம் சமண, சாக்கியர்கள் கொள்கைகளை வெட்டி வீழ்த்தியதால், சமய உலகம் ஆளுடைய பிள்ளையாரை, "சைவ சமயக் கோளரி' என்றே அழைத்து நிமிர்ந்தது. விடையேறி வந்து காட்சி நல்கிய அம்மையப்பர் அருளை இம்மண்ணில் நிலை நாட்டவே "வெள்ளை விடை'  நல்கினார் திருஞானசம்பந்தர்.

விடையேறிவந்து, வெள்ளை விடை நல்கிய அம்மையப்பரைப் பாடி, சைவக் கோளரியாய் வீறு நடையிட்ட திருஞானசம்பந்தரால் இசைத்தமிழ் வழிபாடு தமிழகக் கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டது தமிழோடு! அவர்தம் பதிகங்கள் இல்லையேல் தமிழகத்தில் தமிழ் ஏது? தமிழினத்தின் இருப்புதான் ஏது?
"தமிழ்ச் செம்மல்' 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com