பழமொழி நானூறு - முன்றுறையரையனார்
By | Published On : 17th January 2021 12:28 PM | Last Updated : 17th January 2021 12:28 PM | அ+அ அ- |

உடை மதிப்பு தரும்
அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை
உண்டி வினவுவார் இல் (பாடல்-185)
படுத்து உறங்குவதற்கு ஓர் இடம் இல்லாத வறியராக இருந்தபோதும் நன்றாக உடுத்து வருபவர்களைப் பார்த்துப் "பசிக்கு உணவு உண்கிறீர்களோ?' என்று கேட்பவர் யாருமில்லை. அதனால், வீட்டினிடத்தே அழிவு மிகுதியாயிருந்த காலத்தும் ஒருவர் எப்படியாயினும் தம் புறத்தோற்றத்தினால் பொலிவுற்று விளங்குதல் நன்று. உயர்குடிப் பிறந்தவர் எத்துணை வறுமை வந்தபோதும் பிறர் அதனைக் கண்டு தம்மீது கருணை கொள்ளுமாறு தம்மைத் தாழ்த்திக் கொள்ளமாட்டார் என்பது கருத்து. "உடுத்தாரை உண்டி வினவுவார் இல்' என்பது பழமொழி.