இந்த வாரம் கலாரசிகன்

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் எண்ணிலடங்காத எழுத்தாளுமைகள் தமிழகத்தில் வலம் வந்தனர்.
இந்த வாரம் கலாரசிகன்

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் எண்ணிலடங்காத எழுத்தாளுமைகள் தமிழகத்தில் வலம் வந்தனர். அதிலும் புதினங்கள் படைத்தவர்களின் பட்டியல் மிக மிக நீளம். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு என்று தனியான பாணியும், வித்தியாசமான மொழிநடையும் இருந்தது.

கல்கிக்குப் பிறகு சமூக, வரலாற்றுப் புதினங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்தது. படைப்பாளிகள் போட்டி போட்டுக்கொண்டு எழுதித் தள்ளினார்கள் என்றால், வாசகர்களும் முண்டி அடித்துக்கொண்டு சிறுகதைகளையும், நாவல்களையும் வாசித்த காலமது. மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, அகிலன், லா.ச.ராமாமிருதம் என்று தங்களது படைப்புகளால் வாசகர்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் ஏராளம். அநுத்தமா, லட்சுமி, சூடாமணி என்று பெண் எழுத்தாளர்களும் கோலோச்சிய காலமது.

அப்படியொரு காலகட்டத்தில் தனக்கென்று வேறுபட்ட கதைக் களனுடன் வாசகர்களைக் கிரங்கடித்தவர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது ஏதாவது ஒரு படைப்பை தற்செயலாக ஒருவர் படிக்க நேர்ந்தது என்றால், அதன் பிறகு பித்துப் பிடித்தாற்போல அவர் எழுதிய ஏனைய படைப்புகளைத் தேடி அலைந்து வாசித்தார்கள் என்பதிலிருந்து அந்த எழுத்தாளுமையின் மேதைமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

தி.ஜானகிராமன் குறித்து எத்தனையோ ஆய்வுகளும், கட்டுரைகளும், அவருடன் நெருங்கிப் பழகிய அல்லது அவரது சமகாலத்தவர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. தி.ஜானகிராமனின் மரப்பசு, மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி முதலிய நாவல்கள் இன்றுவரை எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகவும், நவீன இலக்கிய ஆய்வாளர்களுக்குத் தரவுகளாகவும் பயன்படுகின்றன.

""மாறி வரும் சமூகத்தில், ஆண்-பெண் உறவில் ஏற்படும் விரிசலே ஜானகிராமனின் படைப்புகளில் கையாளப்படும் பிரதான விஷயப்பொருள் ஆகும். ஆண்-பெண் உறவு பற்றிய பாரம்பரிய சமூக நெறிமுறைகள் உடைந்து வருவதை அவர்தம் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தினார்'' என்பது எம்.ஏ. நுஃமானின் பார்வை. அடிப்படையான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் திரும்பத் திரும்ப எழுதினாலும்கூட, பாலின வெளிபேதத்தைக் கடந்து உயிர் என்ற உள் விரிவை நோக்கி நகர்ந்தவர் தி.ஜானகிராமன் என்பதுதான் உண்மை.

இது தி.ஜானகிராமனின் பிறந்த நூற்றாண்டு. இன்றைய தலைமுறையினர் அவரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை 102 விமர்சனக் கட்டுரைகளின் மூலம் "ஜானகிராமம்' என்கிற புத்தகமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார் முனைவர் கல்யாணராமன். அவர் தற்போது ராமேசுவரத்திலுள்ள பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர்.

இன்றைய இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், பெண்ணியவாதிகள், இடதுசாரி சிந்தனையாளர்கள் முதலிய தம்முள் முரண்படும் பலதரப்பினரின் பார்வையில் தி.ஜானகிராமன் குறித்த பதிவுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்திருப்பது இந்தத் தொகுப்பின் தனித்துவம்.

தி.ஜானகிராமன் குறித்த கடுமையான விமர்சனங்களும், மேன்மையான மதிப்பீடுகளும், காலம் கடந்து விஞ்சி நிற்கும் தனித்துவங்களும் "ஜானகிராமம்' என்கிற கட்டுரைத் தொகுப்பில் கல்யாணராமனால் தொகுக்கப்பட்டிருக்கிறது. காலச்சுவடு வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பு தி.ஜானகிராமன் குறித்த இன்றைய தலைமுறையின் பார்வை.


தனி மனித சுதந்திரம் (பர்சனல் லிபர்ட்டி), தன்மறைப்புநிலை (ப்ரைவசி) என்பதெல்லாம் ஏட்டளவில்தானே தவிர இணைய தொழில்நுட்பம் வந்த பிறகு அர்த்தமற்றவை ஆகிவிட்டன. இணைய தொழில்நுட்பமும், இணைய வழி செயலிகளும் அனைவரையும் சிந்தனை அடிமைகளாக மாற்றியிருக்கின்றன.

அது முகநூலோ, சுட்டுரையோ, கட்செவி அஞ்சலோ, யூடியூபோ எதுவாக இருந்தாலும் அதிலிருந்து பயனாளிகளின் தகவல்களைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரியாமல் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அது கணினியோ, அறிதிறன் பேசியோ எதுவாக இருந்தாலும் அதை இணையவழி பயன்படுத்துபவர்கள் பல நிறுவனங்களின் அடிமைகள். பயன்படுத்துவோர் குறித்த தகவல்களின் மூலம் ஒருவரைத் தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முடியும். தேவையே இல்லை என்றாலும்கூட குறிப்பிட்ட பொருள்களை வாங்க வைக்க முடியும். மன நிலையை மாற்ற முடியும்.

கேம் பிரிட்ஜ் அனாலிட்டா ஊழலில் தொடங்கி, தற்போது மத்திய அரசுக்கும், சுட்டுரை (ட்விட்டர்) நிறுவனத்துக்கும் இடையே நடைபெறும் பிரச்னை வரை பின்னணியில் இருப்பவை கார்ப்பரேட் நிறுவனங்கள். ஒவ்வொரு பயனாளிகள் குறித்தும் சில ஆயிரம் தகவல்களை செயலிகளின் மூலம் அந்த நிறுவனங்கள் திரட்டுகின்றன.

போலிச் செய்திகள் பரவுவதற்கும், அதை மக்கள் நம்புவதற்கும், அதை மேலும் பரப்புவதற்கும் அந்த நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன. அதன் மூலம் முடிவெடுக்காத வாக்காளர்கள், வாடிக்கையாளர்களின் மனதை மாற்றும் பணியில் அவை இறங்குகின்றன. திட்டமிட்டு போலிச் செய்திகளைப் பரப்புவதற்காகவே பல இணையதளங்கள், வலைப்பூக்கள், யூடியூப் சேனல்கள் உள்ளன. அவர்கள் அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்.

உளவியலும், எண்மத் தொழில்நுட்பமும் (டிஜிட்டல் டெக்னாலஜி) இணையும்போது அது அபாயக் கூட்டணியாகிறது என்பதை விளக்குகிறது வினோத்குமார் ஆறுமுகம் எழுதியிருக்கும் "டிஜிட்டல் மாஃபியா' என்கிற புத்தகம். "நீங்கள் டிஜிட்டல் உலகில் சோதனை எலிகள்' என்கிறார் அவர்.
முகநூல், வலைப்பூ, சுட்டுரை, கட்செவி அஞ்சல் என்று கணினியிலும், அறிதிறன் பேசியிலும் பொன்னான பொழுதையெல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்துத் தெளிவு பெற வேண்டிய புத்தகம் இது.


எனக்கு கவிஞர் நிர்மலா சுரேஷ் அறிமுகம் கிடையாது. தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும், 1991-இல் திமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளராகவும்தான் தெரியும்.

அவரது மறைவு குறித்து இரங்கல் செய்தியை வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்செவி அஞ்சல் பதிவாக வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் நிர்மலா சுரேஷ் சிலாகித்திருந்த ஹைக்கூ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அன்பழகன் ஜி எழுதிய அந்த ஹைக்கூவில் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையை யார் மறுத்துவிட முடியும்?

தகன மேடைக்கு அருகில்தான் காத்திருப்போர் அறை..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com