முகப்பு வார இதழ்கள் தமிழ்மணி
இலக்கியங்களில் வாலாம்பிகை!
By -கல்லாடர் பொன்.சுந்தர வேலாயுதன் | Published On : 14th March 2021 12:00 AM | Last Updated : 14th March 2021 12:00 AM | அ+அ அ- |

அதி அற்புதமான தேவி, குழந்தை பெயரில் விளங்கும் பாலாதிரிபுரிசுந்தரி என்று போற்றப்படும் வாலாம்பிகை. நம் பரத கண்டத்தில் விளங்கும் பதினெண்(18) புராணங்களில் "பிரம்மானந்த புராணம்' என்பதும் ஒன்று. அதில் இவ்வாலையைப் (வாலைக்குமரி) பற்றிய வரலாற்றில் உள்ள அனைத்தையும் வாசித்து அறியலாம்.
அகத்தியரும், சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும் மற்றும் மகாகவி பாரதியாரும் போற்றிய வாலைக்குமரி - வாலைப் பெண்தான் இந்த வாலாம்பிகை.
நம் பரத கண்டத்தின் தென்கோடியாகிய தமிழகத்தில் சுற்றுலாத் தலமாக விளங்குவது கன்னியாகுமரி. இங்குப் பருவ வயது பெண் குழந்தையின் வடிவத்தில் உள்ள (கன்னியாகுமரி) பார்வதி தேவியானவள், ஸ்ரீவாலாம்பிகை எனப் போற்றி அழைக்கப்படுகிறாள். அவளுக்கு அங்குக் கோயிலும் உண்டு. இது இந்தியாவிலுள்ள சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அன்றியும், குமரிக்கண்டத்திற்கு முற்பட்ட தலம் இது. இதுபோன்று "வாலாம்பிகை' என்ற பெயரிலும் மற்றும் சக்தி பீடங்களாக ஆங்காங்கே சில கோயில்கள் உள்ளன. இவ்வாலையை,
"தங்கநிற வடிவான சக்திவாலை
தாரகமாம் மானசுழி நடுவுமாகி'
(ஞான தீட்சாவிதி)
என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். வாலாம்பிகை வழிபாட்டின் ஒரு பகுதி, "திரியாட்சர மந்திர வழிபாடு'. வாலாம்பிகை வழிபாட்டில் ஒருமுக காமாட்சி அம்மன் விளக்கு வைத்து, நெய் வார்த்து, ஒளியைப் பிரகாசிக்கச் செய்வர். இதற்குப் "பதிபூஜை' என்றும், "கன்னியர் வழிபாடு' என்றும் மேலோர் கூறுவர்.
"வாலையின் அட்சரம் மூன்றாகும் - அதை
வாய்கொண்டு சொல்பவ ரார்காணும் (ஞானக்கும்மி)
பாலில் கற்கண்டு, பழம், தேன் முதலியவற்றை வைத்துத் தாம்பூலத்தோடு நிவேதனப் பொருளாகத் தர்பாசனமிட்டு பிரணவி, பகவதி, வாலாம்பிகை, புவனேஸ்வரி, திரிபுரசுந்தரி எனத் தம் ஒருமை மனத்தால் கூவி, திரியாட்சரமாகிய "ஓம் ஐம் க்லீம் செளம்' என இதயக் கமலத்திலேயே கும்பிட்டு, படிகமணி அல்லது உருத்திராக்க மணியால் 108, 1008 என்னும் எண்ணிக்கையில் (உருவேற்றுதல் என்பர்) ஆராதிப்பர்.
இவ்வகை திரியாட்சர வழிபாடு சித்தியானவர் மகிமைபூண்டவர் ஆவார். அவர்கள் "ஓம்/ ஐம் க்லீம் செளம்/ செளம் க்லீம் ஐம்' என அஷ்டாட்சர வழிபாட்டை விருத்தி செய்வார்கள். இவ்வாறு விருத்தி அடைந்தவர்கள் நவாட்சர வழிபாடாகிய "ஓம் / ஐம் க்லீம் செளம்/ செளம் க்லீம் ஐம் ஐம் க்லீம் செளம்' என வழிபடுவார்கள்.
அப்போது மேன்மை பொருந்திய அவ்வாலாம்பிகையும் பிரகாசிப்பாள். உபாசகன் (சாதகன்) வாயில் தாம்பூலம் உமிழ்வாள். அதனைத் திருமூலர் தம் திருமந்திரத்தில் நமக்குப் புகட்டுகிறார்.
"உறங்கு மளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கலை யாவென் றுபாயஞ்செய் தாளே'
(திருமந்.1107)
"பிரணவியாகிய மனோன்மணியை நான் தியானித்து யோக உறக்கம் கொள்ளும்போது, அதனை ஒலிக்கின்ற வளையலை அணிந்த கையால் என் கழுத்தை நன்றாகத் தழுவி, விளங்குகின்ற ஒளியோடு கூடிய அவளுடைய எச்சிலை (சக்தியை) எனது வாயில் உமிழ்ந்து "உறங்காதே' என்று கூறி, தூங்காமல் தூங்கும் உறக்கத்தை (யோகம்) அருளினாள்' என்பது இப்பாடலின் பொருள். மற்றொரு பாடலில்,
"ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே யினிதிருந் தாளே' - என்கிறார்.
"ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் ஒலியாவாள் அவள். அதனால்தான் அவளை ஓங்காரி என்பர். அவள் பெண்; சிவத்தின் சரிபாதி; வாலை; குழந்தை; உலகுக்கே தாய்! ஆனால் அவள் கன்னி! அவள் நீங்காத பச்சை நிறத்தை உடையவள். சிவம் செம்மை நிறம் உடையது. நாம் தவம் செய்து வரும்போது தியானத்தில், யோகத்தில் பச்சை நிறம் தோன்றும்! இதைத்தான் திருமூலர் எடுத்துரைத்துள்ளார்.
திருக்குறளில் "கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் கடவுளர் சிலரைத் திருவள்ளுவப் பெருந்தகை குறிப்பால் உணர்த்துவதைப் போல, வாலாம்பிகை பற்றியும் குறிப்பாக ஒரு குறளில் குறிப்பிட்டுள்ளார். இது ஞானிகள், யோகிகளின் கருத்து.
"அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு' (குறள்:757)
உலகவர்க்குப் பொதுப் பொருள்: அன்பு பெற்றெடுத்த அருள் என்ற குழந்தை, பொருளென்ற செல்வச் செவிலியால் வளர்ந்து நிலைபெறும். ஆனால்,
ஞானிகளின் அகப்பொருள் விளக்கமாவது:
அருள் என்னும் அன்பீன் குழவி - அண்ட அண்டங்களாகிய பிரபஞ்சங்களை இயக்கும் "அருள்' என்னும் பிரணவம், "அன்பு' என்ற குணரகித குழந்தையாம் (வாலாம்பிகை, ஆதிசக்தி, ஆதிபரை, ஜகதாம்பிகை, வேதவல்லி);
பொருள் என்னும் - தாய் வயிற்றில் பிறவாதும், நம்மால் அளவிடற்கரிய பொருளைத் தன்னகத்தே பெற்றுள்ள இறையாகிய பிரபஞ்ச சக்தி;
செல்வச் செவிலியால் உண்டு - இறையே (பிரணவம்) குருவாக எழுந்தருளி, மாணவனுக்கு சாகாக் கல்வியை உபதேசித்த மாத்திரத்தில் மாணவன் செவியில் பிரணவ (ஓம்) தொனி ஏற்பட்டு, அவ்வோசையால் வடிவெடுத்து வெளிப்படும் "செவிலித் தாய்' வாலாம்பிகை; இதுதான் பிறிதோரிடத்தில்
"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்' என்று (குறள்: 411)
அமைந்துள்ளது.
தாய் - அன்பு; குழவி (குழந்தை) அருள்; செவிலி -செல்வம் என்னும் வளர்ப்புத்தாய், அக்காள், வளர்த்தாய், செவிலித்தாய், முன்பிறந்தாள்.