இன்றில்லை என்பது பெருமையா?

நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்பெருமை உடைத்திவ் வுலகு'
இன்றில்லை என்பது பெருமையா?

நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை உடைத்திவ் வுலகு'

என வள்ளுவப் பேராசான் "நிலையாமை' என்னும் அதிகாரத்தில் மொழிந்திருப்பார். என்ன வயதாகி இறந்தாலும் இல்லத்தில் மனித மறைவு நிகழும்போது, அங்கு துன்பமும் சோகமும் கப்பிக் கொள்ளும்.  அத்துன்பமும் சோகமும் நீங்கிப் பழைய நிலைக்குத் திரும்ப வெகு காலம் ஆகலாம்.

இறப்பு எப்படிப் பெருமைக்குரியதாகும்? சிலரது இறப்பு இல்லத்தையே சோகத்தில் பல காலத்திற்கு ஆழ்த்திவிடுவதும் உண்டு. ஆனால், அது வள்ளுவருக்குப் பெருமையாகப்படுகிறது.  வள்ளுவப் பேராசான் எதையும் தவறாகச் சொல்லாத தகைமையாளர். ஆனால், வள்ளுவர் ஏன் இதைப் பெருமையாகக் கொண்டார் என்பது வேதநாயகரது நீதி நூலைக் கற்றபின் நமக்குத் தெளிவாகும். மனித மறைவு என்பது பெருமைக்குரியதா என்பதன் பொருள் தெரியவரும்.

முற்றிய பின் கனியுதிரும் பழுப்பற்றுத்
    தழையுதிரும் முழுது மேநெய்
வற்றியபின் விளக்கவியு மென்னவோ
    திடமுண்டு மக்கள் காயம்
பற்றியவக் கருப்பத்தோ பிறக்கும் போ
    தோ பாலப் பருவத் தோமூப்
புற்றபின் வீழ்வதென் நிலையின்றே
    லிதன்பெருமை யுரைப்ப தென்னே!

நெஞ்சே! பழம் முற்றிய பின்பே விழும். இலை முற்றிப் பழுத்த பிறகே உதிரும். எண்ணெய் முழுவதும் எரிந்த பின்னரே விளக்கு அணையும். இவ்வாறு கூற ஓர் உறுதி உண்டு. மக்கள் உடம்பு தோன்றிய கருவிலோ, பிறக்கும்பொழுதோ, கட்டிளமைப் பருவத்தோ, முதிர்ந்த பின்னரோ இறக்கும் என உறுதியில்லை. ஆதலின் இவ்வுடலின் பெருமையை என்னவெனச் சொல்லுவது? 

நெல்லறுக்க ஒரு காலம் உண்டு;  புல்லறுக்க ஒரு காலமும் இருக்க, இம்மானிடப் பிறவிக்கு மட்டும் இற்றுவிழ எந்தக் காலம் என வரையறை எதுவும் இல்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இக்காயத்தினின்றும் உயிர் நீங்கி, காயத்தைக் கட்டையாக்கிச் சென்றுவிடும். ஆதலினாலன்றோ,

"கணமதனிற் பிறந்திறும் இக்காயத்தின் வருபயனை
    உணர்வுடையோர் பெறுவர்
உணர்வு ஒன்றுமிலார்க்கு ஒன்றுமில்லை'

என்றார் பரஞ்சோதி முனிவர். "நெருநல் உளனொருவன் இன்றில்லை' என வள்ளுவர் மொழிந்ததன் பொருள் இப்போது புரிகின்றதன்றோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com