"தினமணி'யாலும் பெ.சு.மணியாலும் மணிமணியான புதையல்கள்!

தமிழியல் ஆய்வுலகிற்குப் போதாதகாலமா?  பேரறிஞர்கள் பலரும் அடுத்தடுத்து விடைபெற்றுப் போகின்றனரே! என்று புலம்பும் நிலையில் கையற்று நாம் கலங்கிக் கொண்டிருக்கின்றோம்.
"தினமணி'யாலும் பெ.சு.மணியாலும் மணிமணியான புதையல்கள்!

தமிழியல் ஆய்வுலகிற்குப் போதாதகாலமா? பேரறிஞர்கள் பலரும் அடுத்தடுத்து விடைபெற்றுப் போகின்றனரே! என்று புலம்பும் நிலையில் கையற்று நாம் கலங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த இரு மாதங்களில் தொடர்ந்து எத்தனை இழப்புகள்? தமிழியலுக்கு ஈடுசெய்ய இயலாத ஓர் இழப்பு எனின் பாரதியியலுக்கோ பேரிழப்பு! பெ.சு. மணியும் இன்று நம்முடன் இல்லை.
தமிழ் இதழியல், தமிழ்ச் சமூக வரலாறு எழுதியல், இந்திய தேசியம், இலக்கியம், அறியப்படாத அல்லது உரிய கவனம் பெறாத ஆளுமைகளின் பங்களிப்பை வெளிப்படுத்தல், பாரதியியல் எனத் தமிழியலின் பல தளங்களிலும் பாரதிதாசன் கனவு கண்டதுபோல, "துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்து தொண்டு செய்த' பெருமகனார்தான் பெ.சு. மணி.

தமிழக வரலாற்றிலும் சரி, அதற்கப்பாலும் சரி நிறுவனங்களின் பணிகளை நிகர்த்த, விஞ்சிய பணிகளைப் பெரும் வசதி வாய்ப்புகள் ஏதுமற்ற தனி மனிதர்களே தங்கள் சுயமுயற்சியால், விருப்பத்தால், அர்ப்பணிப்பால் சாதித்துக் காட்டியிருக்கின்றனர். அப்படிப்பட்ட சாதனை மனிதரான பெ.சு.மணி என்னும் தனிநிலை ஆராய்ச்சியாளரின் பணிகளை எண்ணிப்பார்த்தபோது உலகளாவிய தமிழறிஞர் கா.சிவத்தம்பிக்குப் பண்டைய வரலாற்றுக்கு மயிலை சீனி.வேங்கடசாமி செய்த பங்களிப்பே கண்முன் நிழலாடியது. அத்தகைய மரபுக்கும் மாண்புக்கும் உரியவர் பெ.சு.மணி.

தமிழுலகம் மிக நன்றாக அறிந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாரதியைக் குறித்தென்றாலும், சில பத்தாண்டுகளுக்கு முன் பெரிதும் அறியப்படாமலேயே இருந்த அயோத்திதாசரைக் குறித்தென்றாலும் நுட்பமான, முன்னோடியான ஆய்வுப் பங்களிப்பை அவர் நிகழ்த்திச் சென்றிருக்கின்றார்.

ஆய்வுத் துறையில் ஈடுபட்டிருப்பவன்என்கின்ற வகையில் அவரோடு குறிப்பிடத்தக்க அளவில் பழகும் பேறு எனக்கு வாய்த்திருந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. கால் நூற்றாண்டுக்கு முன் வெளிவந்திருந்த "தமிழ்மணி'யைத் தேடிப் பெறத்தான் முதன்முதலில் அவரை நாடிச் சென்றிருந்தேன். மேற்கு மாம்பல இல்லம். தள்ளாத வயது; தடுமாறும் உடல்நிலை. ஆனால் அடுத்த தலைமுறை பாரதி ஆய்வுக்கு உதவ வேண்டும் என்ற அக்கறையில் மட்டும் தடுமாற்றம் இல்லை. வற்புறுத்தி என்னை அமர வைத்துவிட்டு, ஒரு நாற்காலி மீது ஏறி மேற்பகுதியில் இருந்த பழைய பெட்டியை அவரே இறக்கி ஏராளமானகாகிதக் கற்றைக்கு நடுவில் இருந்த அந்தப் பொக்கிஷத்தை எனக்கு அளித்தார்.

அது 1993 ஏப்ரல் 3-ஆம் நாள் வெளிவந்த "தினமணிசுடர்-தமிழ்மணி'ப் பகுதியின் இரு பக்கங்கள். அதில்தான் பாரதியின் முதல் சொற்பொழிவு எனமுன்பு கருதப்பட்டு வந்த "கருணை' சொற்பொழிவு அவரால் கண்டெடுக்கப்பட்டு வெளிவந்திருந்தது. அப்போது என் உள்ளத்தில் தோன்றியது, "அட இந்தத் தினமணியாலும் பெ.சு.மணியாலும் பாரதியியல் எத்தனை மணிமணியான புதையல்களைக் கண்டடைந்திருக்கிறது' என. ஆனால், அப்போது எனக்குத் தெரியாது, அதே "தமிழ்மணி'யில் அவர் மறைவையொட்டி நினைவுகூரும் நிலை வரும் என.

சென்னையில் பெரிதும் வாழ்ந்தார்; தில்லியில் மறைந்தார். பொருத்தம்தான். தமிழ், தமிழகம், தமிழ்ச் சமூகம், இந்தியம் என்பவைதாமே அவர் வாழ்வின், ஆய்வின் மையப்புள்ளி. சென்னை ஆவணக் காப்பகத்திலிருந்து புதுதில்லி நேரு நினைவு நூலகம் வரை தமிழ்ச் சமூகத்தின், இந்திய விடுதலை இயக்கத்தின்அறியப்படாத வேர்களை அடையாளம் காண அவர் நடத்திய தேடல்களின், பயணங்களின் குறியீடுகள்தாம் அவர் வாழ்ந்த இடமும் மறைந்த இடமும் எனத் தோன்றுகிறது.

சென்னை விமான அஞ்சல் பிரிப்பகத்தில் அஞ்சல் பகுப்பாளர் பணி அவரது வாழ்நாள் வருவாய்ப் பணி. விமானங்களைப் போல உயரிய முகடுகளில் அவரது ஆய்வுகள் சிறகு விரித்தன. உரிய முகவரிகளுக்கு அஞ்சல்களை மட்டுமல்ல, ஆய்வில் கண்டறிந்த உண்மைகளையும் அவரது கைகள் அனுப்பிக் கொண்டிருந்தன.

தமிழ் மண்ணில் எத்தனை எத்தனைஇயக்கங்கள் இருப்பினும் தமிழரசு கழகத்திற்குத் தனி இடமுண்டு. சிலம்புச் செல்வரைத் தலைவராக ஏற்ற ஆய்வுச் செல்வர் பெ.சு.மணி. அவரது தமிழுணர்வுக்கு இந்த இயக்கச் செயல்பாடே சரியான அத்தாட்சி. அவரது ஆய்வு வன்மை தலைவரை நண்பராக்கியது. தன்னை உருவாக்கிய பெருமக்கள் இருவரில் ஒருவர் ம.பொ.சி., என எப்போதும் அவர் நன்றியோடு நினைவுகூர்ந்து வந்தார். மற்றொருவர் இதழியல் எழுத்துப் "போர் வீரன்' வெ. சாமிநாதசர்மா. முன்னவர் அரசியலில் குருநாதர்; பின்னவர் இலக்கியத்தில் குருநாதர். இவ்விருவர் குறித்தும் அவர் படைத்த நூல்கள் சாகித்திய அகாதெமியின் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் மலர்ந்திருக்கின்றன.

பாரதியியலில் மூலத்தரவுகளைத் திரட்டுதல், காலப் பின்னணியைச் சூழற் பின்னணியைக் கண்டறிந்து ஆழமாக ஆராய்தல் எனும் இரண்டு களங்களிலும் அவர் சாதனைகள் பலவற்றைத் தனித்தன்மையோடு புரிந்தார். அவருடைய முயற்சிகளைக் கண்டு பாரதியியல் முன்னோடி ரா.அ. பத்மநாபன், ""பாரதி எழுத்துகளைத் தேடிப் பாதுகாக்கும் சிறந்த பணியில் பெ.சு.மணியும் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது'' என்று தலை நாள்களில் விரும்பி வரவேற்றுக் கட்டியம் கூறி மகிழ்ந்தார்.

பாரதியின் தம்பி சி. விசுவநாத ஐயர் பெ.சு. மணியின் ஆய்வுகள் கண்டு ""தங்கள் ஆய்வு நூல் பாரதியாரும் தமிழ்ப் புலவர்களும் என்ற அருமையான நூலைப் படித்தேன். அதன் பயனாகத் தங்களைப் பற்றி ஏற்கெனவே கொண்டிருந்த அபிப்பிராயமும் மதிப்பும் பல மடங்கு அதிகமாகிவிட்டது'' என உணர்ச்சிவசப்பட்டு உச்சிமோந்து பாராட்டினார். அப்படி என்னதான் பாரதியியல் ஆய்வில் அவர் செய்திருக்கின்றார்? அறிஞர் கா.சிவத்தம்பி, ரா.அ. பத்மநாபன் போன்றோர் பாரதி புதையல்களை வெளிக்கொணர, பெ.சு.மணி பாரதியின் தொழிற்பாடுகளின் வரலாற்றுப் பின்புலத்தை நன்கு வெளிக்கொணர்ந்துள்ளார்'' எனத் தெளிவு படுத்தியிருக்கின்றார். பாரதிய முன்னோடிகள் ம.பொ.சி., தொ.மு.சி. ரகுநாதன், க. கைலாசபதி முதலிய பலராலும் பெ.சு. மணி கொண்டாடப்பட்டிருக்கின்றார்.

"பாரதியாரும் இராமகிருஷ்ணர் இயக்கமும்', "பாரதியாரின் வேதரிஷிகளின் கவிதை', "பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும்', "பாரதியாரும் தமிழ்ப் புலவர்களும்', "அறிஞர்கள் பார்வையில் பாரதியார்', "பாரதி புகழ் பரப்பும் ம.பொ.சி.', "பாரதி புகழ் பரப்பிய முன்னோடிகள்', "பத்திரிகையாளர் பாரதியார்', "பாரதியார் எழுத்துகள்: சில புதிய கண்டுபிடிப்புகள்', "பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (இருபாகங்கள்)' எனச் சொல்லிக் கொண்டே போகலாம் அவருடைய நூல்களை. ஒவ்வோர் ஆய்வுள்ளும் அவர் செய்திருக்கும் முயற்சி, செலுத்தியிருக்கும் உழைப்பு, பார்வை நுட்பமானது; ஆழமானது; தனித்தன்மை வாய்ந்தது. பிரமிக்க வைக்கும் ஆய்வுப் பிரவாகங்களாக அவரது ஆய்வுகள் பாய்ந்தோடி, தமிழ் இலக்கிய உலகத்தைச் செழிக்கச் செய்திருக்கின்றன.

தமிழகம் மறந்துவிட்ட தமிழ் இதழியலின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய ஐயர், முன்பு மறந்து இப்போது நினைந்து போற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை பெறக் குரல் கொடுத்த முன்னோடி அயோத்திதாச பண்டிதர், பாரத மாதா ஆலயம் கட்டப் படாதபாடுபட்ட சுப்பிரமணிய சிவா, வால்மீகியினும் சிறந்த காவிய கர்த்தா கம்பன் என முழங்கிய வ.வே.சு. ஐயர், எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி. வேங்கடரமணி, தேசிய சங்கநாதம் வரதராஜுலுநாயுடு, மறைந்தொழிந்த தமிழ் யாழையும் மங்கிக் கிடந்த பாரதியாழையும் மீட்டு மீட்டிய விபுலானந்தர் - முதலியோர் குறித்தெல்லாம் முன்னோடி நிலையில் ஆய்வு முயற்சிகளை ஆற்றியவர் பெ.சு.மணி.

மூத்த கவிஞர் சிற்பி அதனால்தான் ""ஆவணங்களை அரிதின் முயன்று திரட்டித் தமிழ்ச் சமுதாய ஆய்வுகளுக்கு ஒரு நிகரற்ற த கவல் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் அறிஞர் பெ.சு.மணி'' என இரங்கலுரையில் போற்றியிருந்தார்; பெ.சு. மணி படைத்த "இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' நூல் "ஒரு கூடை மூலிகையாகத் தமது முனைவர் பட்ட ஆய்வுக் காலத்தில் வாய்த்தது' எனச் சிறப்பித்திருந்தார். பெ.சு. மணியோடு குடும்பத்தவராக நெருங்கிப் பழகிய கவிஞர் இந்திரன் ""தொடக்க நாள்களில் அயோத்திதாசர் பற்றிக் குறிப்புகளை ஏற்படுத்தியதில் பெ.சு. மணி முக்கியமானவர்'' எனவும், ""பாரதி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு அதே நேரத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் கருத்தியல் வரலாற்றையும் உருவாக்கியதில் பெ.சு. மணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது'' எனவும் அவரது இடத்தை ஏற்றமுற மதிப்பிட்டிருந்தார்.

ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், 1987-ஆம் ஆண்டு "தினமணி சுடரில்' அயோத்திதாசரை அறிமுகப்படுத்தி, பெ.சு.மணி எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருந்தார். எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, ஞான அலாய்சியஸ் முயற்சிகளுக்கும் முன்னோடியானது பெ.சு. மணியின் முயற்சி என்பதை விதந்து சுட்டியிருந்தார்.

தமிழ் இதழியல் துறையிலும் அவரது ஆய்வுப் பங்களிப்புகள் முக்கியமானவை. "பழந்தமிழ் இதழ்கள்', "நீதிக்கட்சியின் திராவிடன் -ஓர் ஆய்வு' முதலியவையெல்லாம் இதழியலுக்கு வாய்த்த அருங்கருவூலங்கள். "சங்ககால ஒளவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும்', "கார்ல் மார்க்சின் இலக்கிய இதயம்' முதலிய ஒவ்வொன்றும் ஒளிர்மணித் திரள்கள். பிந்தைய நூலுக்கு எழுதிய அணிந்துரையில்இப்போது பல எழுத்தாளர்கள் விஷயத்தில் இல்பொருளாகிவிட்ட நேர்மையோடும் சத்தியத்தோடும் எழுத்துப் பணியில் ஈடுபடுபவர்'' எனப் பெ.சு. மணியின் தனித்தன்மைச் சித்திரத்தைத் தீட்டியிருந்தார் தொ.மு.சி. ரகுநாதன்.

தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களையெல்லாம் தொகுத்தெண்ணிப் பார்த்தபோது அவருக்கு ஒரு புறநானூற்றுப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. ""பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்'' எனத் தொடங்கும் பாடல் அது. பொன், முத்து, பவளம், மாணிக்கம் முதலியனவெல்லாம் ஒருங்கு சேர்க்கப்பட்ட ஆரம் போலத் தன் ஆய்வுகள் காட்சியளிப்பதாக அவர் மகிழ்ந்திருக்கின்றார்; நிறைவு கொண்டிருந்திருக்கின்றார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சாக, தன் எழுத்தைக் குறித்துத் தானே கொண்ட மிகை மதிப்பீடன்று அது; எதிர்வரும் காலங்களும் வழிமொழியப் போகும் தகை மதிப்பீடு.

பெ.சு. மணி என்னும் பெயரின் விரிவு, "பெண்ணாத்தூர் சுந்தரேசன் மணி' என்பதாகும். 1933-இல் திருவண்ணாமலையில் பிறந்தார் என அவரது வாழ்க்கை தொடங்குகிறது. தாய்மொழித் தமிழோடு ஆங்கிலத்தையும் இந்தியையும் அவர் அறிந்து தேர்ந்திருக்கின்றார். தமிழக அரசின் "பாரதி விருது', திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் "கபிலவாணர் விருது', கோவை பாரதி பாசறையின் "பாரதி விருது' முதலியனஅவரை அணி செய்தன எனப் புகழ் வாழ்க்கை விரிந்திருக்கின்றது. விபுலானந்தர் மீது எல்லையற்ற ஈடுபாடு கொண்ட அவர் மும்முறை இலங்கைக்கு அழைக்கப்பெற்று, சிறப்பிக்கப்பட்டிருக்கின்றார் என்பது விரிந்த தமிழுலகின் கவனத்தை அவரது பணிகள் பெற்றமைக்குச் சான்றாகின்றது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், மதுரையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டின் மொழிபெயர்ப்பு வல்லுநர் குழு உறுப்பினராகவும் தமிழக அரசின் பாரதி நூற்றாண்டு விழாக்குழு உறுப்பினராகவும் ஒளிர்ந்து அவர் அரியன பலவற்றை ஆற்றியிருக்கின்றார்.

அவர் எளிமையான மனிதர்; சாதாரணப் பணியில் வாழ்க்கை நடத்தியவர்; பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் கால் வைக்காத ஆவணக் கருவூலங்களைத் தேடித் தேடிப் பயன்படுத்தியவர்; பாரதியியலையும் தமிழ்ச் சமூக வரலாற்றையும் செழுமைப்படுத்திய தனித்தன்மை வாய்ந்த பெரும் அறிஞர்.

உரிய அங்கீகாரங்களை அவர் ஏற்றார்; மதித்தார். உரியவாறு இல்லையெனக் கருதினால் மறுத்தார். அவருக்கென ஒரு கொள்கை உண்டு. 2015-இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, "பாரதியியல் ஆய்வு வரலாறு' எனும் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். தொ.மு.சி. ரகுநாதன், கைலாசபதி, கா. சிவத்தம்பி, பெ.சு.மணி ஆகிய நால்வரின் பங்களிப்பை மையமிட்டே கருத்தரங்கம். அறிந்து மகிழ்ந்தார். பாரதி தொடர்பான ஒரு விருதுக்கு அவர் பெயரைப் பரிந்துரைத்திருந்தேன்.

அவரளவுக்கு இல்லாத இன்னொருவருக்கும் அவருக்கும் சேர்த்து அதே விருது வழங்கும் நிலை. தொலைபேசியில் அழைத்து வேண்டாமென மறுத்துவிட்டார். எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன், கடந்த ஆண்டு எட்டயபுரம் பாரதி விழாவில் "தினமணி'யின் "மகாகவி பாரதியார் விருது' பெ.சு.மணிக்கு அறிவிப்பார்கள் என. தீயூழாகிப்போன தீநுண்மிப் படையெடுப்பு எட்டயபுர விருதை எட்டாத புரமாக்கிவிட்டது. தன் முன்னோடிகள் சிலம்புச் செல்வரும், சாமிநாத சர்மாவும் சென்ற இடத்தை அவரும் எட்டிவிட்டார்.

எழுத்துத்துறையில், ஆய்வுத்துறையில் எத்தனை எத்தனையோ லட்சியங்களோடும் கனவுகளோடும் திகழ்ந்திருந்தார் பெ.சு.மணி. தமிழ்ச் சமூக வரலாற்றை வரையும் ஆவணங்கள் பல இன்னமும் அவரது சேமிப்பில் இருந்து கொண்டிருக்கின்றன. "சுதேசமித்திரன் தலையங்கங்கள், கட்டுரைகள் அனைத்தும் கிடைத்த வரையில் தொகுக்கப்பட வேண்டும். இதற்கான பெருமுயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்'' என அவர் ஒருமுறை எழுதியிருந்தார். இப்படி முடிவடையாத பெரும் பணிகள் ஏராளம் இருந்திருக்கும். அடுத்த தலைமுறை அவற்றை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் அவருக்குச் செய்யப்பெறும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com