இந்த வாரம் கலாரசிகன்

தமிழகம் ஒரு வகையில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது. இதற்கு முன்னால் பல இலக்கியவாதி முதல்வர்களைப் பார்த்ததுபோல, இப்போது இலக்கியவாதி ஒருவரை தலைமைச் செயலராகப் பார்க்கும் பெருமையையும் பெறுகிறது
இந்த வாரம் கலாரசிகன்

தமிழகம் ஒரு வகையில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது. இதற்கு முன்னால் பல இலக்கியவாதி முதல்வர்களைப் பார்த்ததுபோல, இப்போது இலக்கியவாதி ஒருவரை தலைமைச் செயலராகப் பார்க்கும் பெருமையையும் பெறுகிறது. தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் வெ.இறையன்பு நேர்மைக்கும், நிர்வாக அனுபவத்துக்கும் மட்டுமல்ல, பரந்து விரிந்த இலக்கியப் புலமைக்கும் சொந்தக்காரர்.
 எளிய கிராமத்துப் பின்னணியிலிருந்து ஒருவரால் நிர்வாக இயந்திரத்தின் தலைமைப் பொறுப்பு வரை உயரமுடியும் என்பதை வெ.இறையன்பின் வாழ்க்கை இளைஞர்களுக்கு எடுத்தியம்புகிறது. சேலம் மாவட்டம் காட்டூரில் பிறந்த வெ.இறையன்பு வேளாண் இளநிலை பட்டமும், வணிக மேலாண்மை பட்டமும் மட்டுமல்லாமல், ஆங்கில இலக்கியம், தொழிலாளர் மேலாண்மை, உளவியல் ஆகியவற்றில் முதுநிலை பட்டங்களும் பெற்றவர்.
 இரண்டு முனைவர் பட்டங்களுக்குச் சொந்தக்காரரான இறையன்பு தமிழகத்திலிருந்து குடிமைப் பணித் தேர்வு எழுதும் ஒவ்வொருவருக்கும் லட்சிய நாயகனாக இருந்து வருகிறார். முதலில் குடிமைப்பணி தேர்வு எழுதி, வருமானவரித் துறை உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்து, அதில் திருப்தி அடைந்துவிடாமல் மீண்டும் தேர்வு எழுதி இந்திய ஆட்சிப்பணி அதிகாரியானது, அவரது இலக்கின் மீதான தீவிரத்தின் வெளிப்பாடு. அன்று தொடங்கி இன்று வரை தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகள் அனைத்திலும் இலக்கை நிர்ணயித்துப் பயணிக்கும் தனிச்சிறப்பு அவரை ஏனைய ஆட்சிப்பணி அதிகாரிகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
 மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு துறைகளில் இயக்குநராகவும், செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியபோது, அவரது செயல்பாடுகள் ஆட்சியாளர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் வியந்து பாராட்ட வைத்தன. சாதாரணமாக அரசு அதிகாரிகள் மக்களிடமிருந்து சற்று விலகியே இருப்பார்கள் என்கிற பொது விதியைப் புறந்தள்ளி அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வரும் வெ.இறையன்பின் நியமனம், அவருக்குப் பெருமை சேர்க்கிறது என்பதைவிட அந்தப் பதவிக்குப் பெருமை சேர்க்கிறது என்பதுதான் நிஜம்.
 எந்த ஓர் அரசு அதிகாரியும் இவரளவுக்கு தமிழகத்தில் மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடியதில்லை. இவர் உரையாற்றாத கல்லூரிகளே இல்லை என்கிற அளவில் இளைஞர் சமுதாயத்தின் நல்ல மேய்ப்பனாக இருந்து வரும் வெ.இறையன்பு, எழுதிக் குவித்திருக்கும் புத்தகங்கள் நூற்றுக்கும் அதிகம்.
 அவரது "மூளைக்குள் சுற்றுலா' என்கிற புத்தகம் என்னை பிரமிக்க வைத்த அளவுக்கு சமீப காலத்தில் இன்னொரு புத்தகம் எழுதப்படவில்லை. மருத்துவ அறிவியல் தொடர்பான அந்தப் புத்தகத்தை சுவாரசியமான கதையைப் படிப்பதுபோல எளிமையாக அனைவருக்கும் புரியும் விதத்தில் படைத்திருக்கும் அவரது அசாத்திய திறமையை என்னை சந்திக்கும் நண்பர்களிடம் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறேன்.
 நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கும் இறையன்பின் "இலக்கியத்தில் மேலாண்மை' புத்தகமும், ஷேக்ஸ்பியரையும் வள்ளுவரையும் ஒப்பீடு செய்து படைத்திருக்கும் ஆங்கிலப் புத்தகமான "திருவள்ளுவர் அண்டு ஷேக்ஸ்பியர்', "திருக்குறளில் நிர்வாக மேலாண்மை' (ஆங்கிலம்) முதலிய புத்தகங்கள் நான் விரும்பிப் படித்தவை மட்டுமல்ல, அடிக்கடி மீண்டும் படிக்கும் பார்வை (குறிப்பு) புத்தகங்கள்.
 திறமையும், நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஒருவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், "தினமணி'யின் நடுப்பக்கக் கட்டுரையாளர் வெ.இன்சுவையின் சகோதரர் என்பது நமது வாசகர்களுக்குக் கூடுதல் தகவல்.
 
 "இலக்கு சரியானதாகவே இருந்தாலும்கூட, அந்த இலக்கை அடையும் வழிமுறையும் நேர்மையானதாக இருக்க வேண்டும்' என்பார் அண்ணல் காந்தியடிகள். எழுத்தாளர்களுக்கும் அது பொருந்தும்.
 சென்னையைப் பற்றிய புத்தகமாக இருக்கிறதே என்கிற ஆர்வத்துடன் எடுத்து நான் படிக்க முற்பட்ட புத்தகம், "சென்னை - தலைநகரின் கதை'. எழுதியிருப்பவர் பார்த்திபன். ஒரு சில பக்கங்களைக் கடந்தபோதுதான் தெரிந்தது, இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் இதற்கு முன்பு படித்தவைதான் என்பது. "மதராசப்பட்டினம் டு சென்னை- 300 ஆண்டுகளின் கதை' என்கிற புத்தகமும், "சென்னையின் கதை' என்கிற புத்தகமும் பார்த்திபனால் எழுதப்பட்டவைதான் என்பதை நினைவுகூர்ந்தபோது ஒருவித சலிப்பு ஏற்பட்டது. ஒரே கருப்பொருளைக் கொண்ட புத்தகத்தை கூடுதல் தகவல்களை சேர்த்தோ, சற்று மாற்றியோ மீண்டும் பதிப்பிக்கும்போது, அதுகுறித்து குறிப்பிடுவதுதான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.
 புத்தகத்தின் பின்னணியை சற்று மறந்துவிட்டு சொல்லப்பட்டிருக்கும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொண்டால், அற்புதமான புத்தகம். சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி, சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகத் தேடிப் பிடித்து, இதுவரை கேட்டிராத பல தகவல்களை இணைத்து பதிவு செய்திருக்கும் பார்த்திபனின் எழுத்தும், படைப்பும் மெச்சத் தகுந்தவை.
 வெவ்வேறு தலைப்பில் மூன்றாவது முறை படித்தாலும்கூட திகட்டவில்லை.
 
 விமர்சனத்துக்கு வந்திருந்த "மாய நதியின் கால் தடம்' கவிஞர் அன்றிலன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை.
 மணலில்
 வரிவரியாய்
 வருத்தங்களை
 விட்டுச் செல்கிறது
 வற்றிய பிறகு ஆறு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com