இந்த வாரம் கலாரசிகன்(16.05.2021)

சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம் இரண்டு நாள்களுக்கு முன்னால் சொன்ன செய்தி காதில் தேனாகப் பாய்ந்தது.
டாக்டர் சுதா சேஷய்யன்
டாக்டர் சுதா சேஷய்யன்


சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம் இரண்டு நாள்களுக்கு முன்னால் சொன்ன செய்தி காதில் தேனாகப் பாய்ந்தது. கம்பகாதையின் அத்தனை பரிமாணங்களையும் விளக்கும் விதமாக யூடியூபில் ஒரு நெடுந்தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் அவர். கம்பன் என்று சொன்னதுமே நிமிர்ந்து உட்கார்ந்து விட்டேன். அடுத்தாற்போல அவர் சொன்னதைக் கேட்டபோது,  எனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது.

டாக்டர் சுதா சேஷய்யன் கம்பராமாயணத் தொடர் உரையை நிகழ்த்துகிறார் என்பதுதான் அவர் தெரிவித்த அடுத்த தகவல். இதற்கு முன்னால், டாக்டர் சுதா சேஷய்யனின் திருப்புகழ், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட தொடர் உரைகளைக் கேட்டிருந்தால் என்னைப் போலவே நீங்களும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை (மே14-ஆம் நாள்) தொடங்கி இருக்கிறது டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. முதல் நாள் முதல் சில நிமிடங்களிலேயே,  முதலில் களம் இறங்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் சிக்சரும், பௌன்டரியுமாக (ஆறு, நான்கு  ரன்கள்) அடித்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தொடங்கி இருக்கிறது அவரது தொடர் சொற்பொழிவு.

ராமன் எத்தனை ராமனடி என்று சொல்வார்கள். ஆனால் இராமாயணம் எத்தனை இராமாயணங்கள் என்று அவர் விளக்கத் தொடங்கும்போதே, ஏதோ சிற்றரங்கத்தில்  அவருக்கு முன்னால் சம்மனம் கூட்டி அமர்ந்து  உன்னிப்பாக உரையைக் கேட்கும் உணர்வு ஏற்படுகிறது.

கம்பருக்கு முன்னால் பல இராமாயணங்கள் இருந்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வான்மீகத்திலிருந்துதான் கம்பரே ராமனின் கதையைத் தமிழில் எழுதியிருக்க முடியும் என்பதுதான் நியாயமான பொதுக் கருத்து. வான்மீகருக்கு முன்பே பல இராமாயணக் கதைகள் இருந்திருக்கின்றன என்பதை, டாக்டர் சுதா சேஷய்யன் பட்டியலிடும்போது, நாம் வியக்கிறோம்.

வான்மீகத்தை அடியொற்றி கம்பராமாயணம் எழுதப்பட்டதா இல்லை மகாகவி காளிதாசரின் ரகுவம்சம் கம்பரில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறார். தொடர் சொற்பொழிவு தொடரும் போது அந்த உண்மை முழுமையாக விளங்கும்.

கம்பரின் காலம் குறித்த சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும். கம்பருக்கு முன்பே இராமகாதை தமிழுக்கு நன்றாகவே பரிச்சயம் என்பதை சங்க இலக்கிய மேற்கோள்களோடு டாக்டர் சுதா சேஷய்யன் பிட்டுப் பிட்டு வைக்கும்போது ஒன்று நன்றாகவே தெரிகிறது. நமது சங்ககாலப் புலவர்கள் இராமாயணத்தை மட்டுமல்ல, ஏனைய வடமொழி இலக்கியங்களிலும் நிறைந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது. பன்மொழிப் புலமை என்பது தமிழ்மொழியின் புலமைக்கு அஸ்திவாரமாக இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

என்னவொரு பரந்துபட்ட புலமை, என்னவொரு ஆழமான ஆய்வு, விளக்குவதில்தான் என்னவொரு தெளிவு... மருத்துவ உடற்கூறியல் பேராசிரியர் என்பதாலோ என்னவோ, டாக்டர் சுதா சேஷய்யன் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் நுணுக்கமாக ஆய்வு செய்து, கம்ப காதையை அணு அணுவாகப் பகுத்தாய்வு செய்யும் வித்தகத்தைத் தெண்டனிட்டு வணங்கத் தோன்றுகிறது.

செல்லிடப் பேசியிலோ, கணினியிலோ, யூடியூபுக்குள் போய் "சுதா சேஷய்யன்' என்று அடித்தால், அவரது உரைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைகட்டி காட்சியளிக்கின்றன. அதில் புத்தம் புதிய பதிவாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது "சாஸ்த்ரா' சார்பில் தொடங்கப்பட்டிருக்கும்  டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

*************

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நான் பள்ளியில்  படித்துக் கொண்டிருந்த நேரமது. அப்போது  எங்களுக்குக்கெல்லாம் கதாநாயகராக (ஹீரோ) இருந்தது  சினிமா நட்சத்திரங்களோ, அரசியல் தலைவர்களோ அல்ல. முக்கூடல் சொக்கலால் ராம்சேட் பீடி நிறுவன அதிபர் ஹரிராம் சேட்தான் நாங்கள் ஆச்சரியமாக, அண்ணாந்து பார்க்கும் ஆளுமை.

முக்கூடலிலிருந்து பள்ளிக்கூடத்தில்  படிக்க சில மாணவர்கள் வருவார்கள். அவர்கள் ஹரிராம் சேட்டின்  பிரதாபங்களைச் சொல்லச் சொல்ல நாங்கள் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருப்போம். அவர் யானைக்கு அல்வா கொடுப்பார் என்று அவர்கள் சொல்வதை அப்போது நம்பினோம். பின்னாளில் விசாரித்தபோது அது உண்மைதான் என்றும் தெரிந்தது. வெறும் முப்பது வயது மட்டுமே உயிரோடிருந்த ஹரிராம் சேட் குறித்து, அவர் மறைந்து சுமார் அறுபது ஆண்டுகள் கழித்து நான் எழுதுகிறேன் என்றால், அந்த மனிதர் எந்த அளவுக்குப் பிரபலமானவராக இருந்திருக்க வேண்டும்?

"ஏழிசை மன்னர்' எம்.கே.தியாகராஜ பாகவதரின் சீடர் மட்டுமல்ல, கடைசி வரை அவரைப் பாதுகாத்த தொண்டர் என்பது பலருக்கும் தெரியும்.  எம்.ஜி.ஆருக்கு யானையிடம் பழகும் முறையைக் கற்றுக் கொடுத்தவர் ஹரிராம் சேட் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பெரிய நிகழ்ச்சிகளை பெரும் பொருட் செலவில் நடத்த வேண்டுமானால், ஹரிராம் சேட்டாகத்தான் பிறக்க வேண்டும்' என்று  எம்.ஆர்.ராதாவே சொன்னார் என்றால், அவர் எப்படிப்பட்ட தனவந்தராக இருந்திருக்க வேண்டும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

ஹரிராம் சேட்டிடம் விதவிதமான வெளிநாட்டுக் கார்கள் இருக்கும். தென் தமிழகத்துக்கு நடிக-நடிகையர் படப்பிடிப்புக்கு வந்தால்,  தங்களது பயணத்துக்கு அவர்கள் ஹரிராம் சேட்டிடம் கார் கேட்பார்கள். அவர்களிடம் இல்லாத, அவர்களால் வாங்க முடியாத விலையுயர்ந்த கார்களை ஹரிராம் சேட் வைத்திருப்பார்.   

ஹரிராம் சேட் குதிரை, யானை என்று பல மிருகங்களை வளர்த்தார். தினமும் அவற்றுக்கு அவரே நேரில் சென்று உணவு கொடுப்பார்.  உடல்நலம் குன்றிய நிலையில் அவர் தொடர்ந்து  வரமுடியாதபோது, அந்த மிருகங்கள் உணவருந்தவில்லை. அவரது செல்லக் குதிரை, அவர் இறந்த பிறகு உணவு உட்கொள்ளாமல் இறந்துவிட்டது. நம்பமுடியவில்லை இல்லையா? ஆனால், உண்மை!

சின்னராசும், முத்தப்பாவும் எழுதியிருக்கும் "அருந்தவச் செல்வர் அரிராம் சேட்' என்கிற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் நான் ஏற்கெனவே அறிந்தவைதான். நான்தான் சொன்னேனே, அவர் எனது பள்ளி நாள் ஹீரோ என்று. இப்போது திரும்பவும் படிக்கும்போது, ஓரிரு முறை அவரைப் பார்த்ததை நினைவுகூர்ந்து மகிழ்ந்தேன்.

***************

அரிசி குடும்ப அட்டைக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்குகிறது தமிழக  அரசு. ஒரு நியாயமான கேள்வி எழுகிறது.
அடையாளத்துக்கு
ஆதார் அட்டை இல்லை
முகவரிக்கு
ரேஷன் கார்டும் இல்லை
குடிசை வாசிக்கு எட்டாக் கனி
அரசின் நிவாரணம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com