பெற்றவர் வாழ்க!

கொடுப்பாரும் அடுப்பாடும் இன்றி, ஊழ்வினையால் குறிஞ்சி நிலப்பகுதியில், தம்முள் எதிர்ப்பட்ட தலைவனும் தலைவியும் "இயற்கைப் புணர்ச்சி' ஏற்பட்டு, சந்தித்துப் பேசுகின்றனர்.
பெற்றவர் வாழ்க!


கொடுப்பாரும் அடுப்பாடும் இன்றி, ஊழ்வினையால் குறிஞ்சி நிலப்பகுதியில், தம்முள் எதிர்ப்பட்ட தலைவனும் தலைவியும் "இயற்கைப் புணர்ச்சி' ஏற்பட்டு, சந்தித்துப் பேசுகின்றனர். பின்னர், தலைவனை விட்டுப் பிரிந்து தலைவி சற்றுத் தொலைவில் இருக்கும் தன் தோழியர்களோடு சேர்ந்து 
கொள்கிறாள்.

அப்பொழுது தொலைவிலிருந்து அவளைப் பார்த்து ரசிக்கும் தலைவன், அவளைத் தன்னோடு சேர்த்து வைத்த நல் ஊழை நினைத்துப் பெருமிதம் கொள்கிறான். அத்துடன் தன் நெஞ்சுக்குள் பேசிக்கொள்வதாக அமைந்த நற்றிணைப் பாடல் இது.

அல்கு படர் உழந்த அரிமதர் மழைக்கண்,
பல்பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள் கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே; அகல்வயல்  
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே!     (பா.8)

அதோ நிற்கிறாளே, அவள் செவ்வரி படர்ந்த அழகிய குளிர்ந்த கண்களை உடையவள். வண்ணப் பூக்கள் நிறைந்த தழையை ஆடையாகக் கட்டிக் கொண்டிருக்கிறாள். கருநீல வண்ண மேனி அழகில் என்னை மயக்கி விட்டாள். இவள் யாருடைய மகளோ? இத்தகைய அழகுப் பதுமையை எனக்காகப் பெற்று வளர்த்த இவள் தந்தை நீடுழி வாழ்க! என்கிறான் தலைவன். எதிர்கால மாமனார் மீது எத்துணைப் பரிவும் அன்பும் பாருங்கள். அத்தோடு நின்றானா?  தன் மாமியின் அளப்பரிய பெருமையை எதற்கு ஒப்பிடுகிறான் தெரியுமா?

"நீர் வளமும், வயல் வளமும் நிரம்பிய சேர அரசனது (பொறையன்) தொண்டி மாநகரத்துச் சிறப்பினை எல்லாம் ஒருங்கே பெறும் தகுதியுடையவள் இவளை ஈன்ற தாயே!' என்று மகிழ்ச்சியுடன் தன் நெஞ்சார வாழ்த்துகிறான்.

 பெண்ணைப் பெற்றவர்களைக் கேலி செய்து திரைப்பாடல்கள் எழுதும் இன்றைய  காலத்தில், "பெற்றவர் வாழ்க' என்று மருமகன் எதிர்கால மாமனாரையும், மாமியாரையும் வாயார வாழ்த்தும் இந்த நன்னெறிப் பாடலை அக்காலத்தில் எழுதிய ஆசிரியர் பெயரோ (இதுகாறும்) அறியக் கிடைக்கவில்லை. வாழிய அவர் புகழ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com