இந்த வாரcம் கலாரசிகன்

மறைந்தவர்கள் குறித்து இனிமேல் எதுவும் எழுதக்கூடாது என்று நான் பல தடவை முடிவு செய்தாலும்கூட, சில தாங்கவொணா இழப்புகளை எதிர்கொள்ளும்போது அதுகுறித்து எழுதாமல் இருக்க மனது கேட்கவில்லை.
இந்த வாரcம் கலாரசிகன்

மறைந்தவர்கள் குறித்து இனிமேல் எதுவும் எழுதக்கூடாது என்று நான் பல தடவை முடிவு செய்தாலும்கூட, சில தாங்கவொணா இழப்புகளை எதிர்கொள்ளும்போது அதுகுறித்து எழுதாமல் இருக்க மனது கேட்கவில்லை.  

நண்பர், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின் மைந்தர் அரவிந்தனின் முகம் கண்ணிலிருந்து மறைய மறுக்கிறது. அவரது கள்ளம் கபடமற்ற சிரிப்பும், வெள்ளந்தியான உசாவுகளும் மறக்கக் கூடியவையா என்ன? கறிவேப்பிலைக் கொழுந்துபோல கிருஷ்ணன் பாதுகாத்து வளர்த்த அரவிந்தனின் இழப்பு அவருடைய இழப்பு மட்டுமல்ல. அவருக்கு நெருக்கமாக இருந்த அனைவருக்குமே அது பேரிடியாகத்தான் இருந்தது.

அது குறித்து பேசும்போது,  பேராசிரியர் தி.இராசகோபாலன் உடைந்தே விட்டார். அவர் எழுதிய இரங்கல் கவிதையைப் படித்துக் காட்டும்போது, அவரிடமிருந்து எழுந்த விம்மலும், விசனமும் என் விழியில் நீர்கோக்க வைத்தன. கிருஷ்ணனுக்கும் அவருடைய மனைவிக்கும் எப்படி ஆறுதல் கூறித் தேற்றுவது என்பது இருக்கட்டும். முதலில் அவருடைய நண்பர்களான எங்களை நாங்களே எப்படித் தேற்றிக் கொள்வது என்பதற்கு  வழி தெரியாமல் தவிக்கிறோமே, இதை யாரிடம், எப்படிச் சொல்லி நாங்கள் எங்கள் சோகத்தை கரைத்துக் கொள்வது? 


கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த கவிஞர் கிருஷ்ணன்பாலா, தாராபுரம் அருகிலுள்ள அவரது கிராமத்தில் இயற்கை எய்தினார் என்கிற செய்தி அதிர்ச்சியை அளிக்கவில்லை. ஆனால், மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. நீண்ட நாள் நண்பர் ஒருவரின் நிரந்தரப் பிரிவு ஏற்படுத்தும் மன வேதனை கொஞ்ச நஞ்சமல்ல.

தில்லி, மும்பை, கேரளம் என்றெல்லாம் சுற்றிவிட்டு நிரந்தரமாகத் தமிழ் இதழியல் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த நேரம் அது. அப்போது சென்னையில்  எனக்குக் கிடைத்த  நண்பர்களில் கிருஷ்ணன்பாலா முக்கியமானவர்.  அவருடனான அந்த முதல் சந்திப்பு இப்போதும்கூட பசுமையாக நினைவிருக்கிறது.  

உட்லேண்ட்ஸ் டிரைவின் ஹோட்டலில் ஒருநாள் நானும், நண்பர் கவிஞர் குடந்தை கீதப்பிரியனும் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பக்கத்து மேஜையில்  வேறு சிலருடன் அமர்ந்திருந்தார் நண்பர் பாலா. கீதப்பிரியன்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். இறுதிவரை பாலாவின் இணைபிரியாத் தோழராக இருந்தவரும் கீதப்பிரியன்தான். அன்று தொடங்கியது பாலாவுடனான எனது நட்பு.

கிருஷ்ணன்பாலா அப்போது "ஜெம் கிரானைட்ஸ்' அதிபர் வீரமணியின் தனிச் செயலராக இருந்தார். அவர் மீது வீரமணி வைத்திருந்த நம்பிக்கை எத்தகையது என்பதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். தனது சொந்த சகோதரர்களுக்கும்  மேலாக கிருஷ்ணன்பாலாவை அவர் நடத்தினார் என்பதையும் நான் அறிவேன்.  அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.  அவர்கள் பிரிந்திருக்கக்கூடாது.  விதி வலியது.

கவிஞராக, ஜோதிடராக, ஆன்மிகவாதியாக என்று கிருஷ்ணன்பாலாவுக்குப் பல முகங்கள் உண்டு. ஆனால், அதையெல்லாம்விட அவரது நண்பர் என்கிற அந்த முகம் மிகச் சிறப்பானது. ஈடு இணையற்றது. தன்னையும் தன்னுடைய நண்பர்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத உள்ளம் பாலாவுடையது. அதனால்தான், கடைசி காலத்தில் கிருஷ்ணன்பாலா நோய்வாய்ப்பட்டபோது, அவரை வேடசந்தூர் அருகில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனியாக இடம் தந்து, பாஜகவின்  முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவரை பாதுகாத்து வந்தார்.
பாலாவிடம் பணம் இருக்கவில்லை. பதவி எதுவும் இருக்கவில்லை.  ஆனாலும்,  அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். கடைசி வரை அந்த  நண்பர்களை அவரும், அவரை நண்பர்களும் நேசித்தனர். அதுதான்  கிருஷ்ணன்பாலா.


ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், பணி ஓய்வு பெற்ற பிறகு ஒடிஸா அரசின் ஆலோசகராகப் பணியாற்றுபவருமான நண்பர் பாலகிருஷ்ணன் என்னை அழைத்தார். பெரியவர் ஏ.என். சிவராமன் ஆசிரியராக இருக்கும்போது, அவரிடம் உதவி ஆசிரியராகப் பணியாற்றி, தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர் பாலகிருஷ்ணன் இ.அ.ப. (ஓய்வு)

"கொண்டாட்டம்' இணைப்பில்  கோதை ஜோதிலெட்சுமி எழுதியிருந்த, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய திருமதி லெஷ்மி கிருஷ்ணனின் பேட்டியைப் படித்துவிட்டு, அவரது  தொடர்பு எண் வேண்டும் என்று கேட்டார். அதற்காகத்தான் அழைத்திருந்தார்.  
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால்,  அவரது சொந்த ஊரும், அவர் படித்து வளர்ந்த ஊரும் ஓடிஸாவின் "கட்டாக்' நகரம் என்பது  பலருக்கும் தெரியாது. அப்போது ஒடிஸா தனி மாநிலமாக இருக்கவில்லை. பிற்காலத்தில் நேதாஜி சுபாஷ் போஸ் கொல்கத்தா சென்று அந்த மாநகரத்தின் மேயராகவும் இருந்தார் என்பது வரலாறு.

பாலகிருஷ்ணனின் அழைப்பையும், அவருடனான  தொலைபேசி உரையாடலையும்  தொடர்ந்து என்னிடம் உள்ள இரண்டு நேதாஜி குறித்த புத்தகங்களை மீண்டும் படித்தேன். பழ.நெடுமாறன் பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய "நேதாஜி எங்கே?' என்கிற புத்தகம் அவரது மர்ம மறைவு குறித்தும், ரஷிய அரசு வெளியிட்ட  ரகசிய ஆவணங்கள் குறித்தும்  பல தகவல்களை வழங்குகிறது. அஜயன் பாலா எழுதிய "நேதாஜி சுபாஷ் போஸ்' என்கிற புத்தகம் அவரது வாழ்க்கையின் பல நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறது. 

இரண்டு புத்தகங்களுமே புதிய பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 1946 ஆகஸ்ட் மாதம் நேதாஜியின் மறைவுக்குப் பிறகு, மும்பையிலிருந்து தைவான் சென்று இறுதிக்கால நிகழ்வுகளைப் புலன் விசாரணை செய்த ஹரின் ஷா என்பவரின்  புத்தகம் தரும் பல விவரங்கள், இந்தப் புத்தகங்களில் இல்லை. ஹரின் ஷாவின்  "தி காலண்ட் என்ட் ஆஃப் நேதாஜி' என்கிற  அந்த ஆங்கிலப் புத்தகம் என்னிடம் இருந்தது. அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.


கவிஞர் ரவி சுப்பிரமணியன் கட்செவி அஞ்சலில்  எனக்கு அனுப்பித் தந்த "கலைஞன்' என்கிற கவிதையிலிருந்து முதலும் கடைசியுமான  பத்திகளை இந்த வாரக் கவிதையாக்குகிறேன்.

கோவில்களும் திறக்காமல் உலகியக்கம் ஸ்தம்பித்து சப்தம் ஒடுங்கிய நேரத்தில் சந்நிதித் தெருவின் வீட்டிலிருந்து நாதஸ்வரக் கலைஞன் நாத ஆலாபனையில் உருக்குகிறான் வளி மண்டலத்தையே சுநாதத்தால் நிரப்பிக்
கொண்டிருந்த கலைஞன் வாசிப்பை நிறுத்தினான்; இலவசத்திற்கான வரிசையில் நிற்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com