இந்த வாரம் கலாரசிகன்

இன்று "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த தினம். ஒட்டுமொத்த இந்தியாவும், விடுதலை வேட்கையுடைய உலகத்தாரும் கொண்டாடி மகிழ வேண்டிய திருநாள்.
இந்த வாரம் கலாரசிகன்


இன்று "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த தினம். ஒட்டுமொத்த இந்தியாவும், விடுதலை வேட்கையுடைய உலகத்தாரும் கொண்டாடி மகிழ வேண்டிய திருநாள். ஆனால், எத்தனை பேருக்கு இன்று வ.உ.சி.யின் பிறந்த நாள் என்றும், அந்த மாமனிதரின் தியாகமும், தொண்டும் எத்தகையவை என்றும் தெரியும் என்று கேட்டால், வெட்கித் தலைகுனிவதல்லால், பேச நா எழவில்லை.

"செக்கிழுத்த செம்மலின்' 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இந்தியா விடுதலையடைந்து  75 ஆண்டுகள் கடந்த பின்னால், அவரது பிறந்த தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இப்போதுதான் வந்திருக்கிறது. இத்தனை நாள்  நன்றி கொன்றவர்களாக இருந்திருக்கிறோம் என்பதே நமக்கு இழிவு. அந்த வசை இந்த அறிவிப்பால் அகன்றிருக்கிறது.

வ.உ.சி.க்கு சிலை வைப்பது, சாலைக்குப் பெயரிடுவது, நினைவிடங்கள் புதுப்பொலிவு பெறுவது, அவரது பெயரில் பல்கலைக்கழக இருக்கை அமைப்பது, அவருடைய புத்தகங்களை மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டு வருவது என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மகிழ்ச்சி அளிக்கிறது. கூடவே, "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில்தான் சற்று வருத்தமும், கருத்து வேறுபாடும் ஏற்படுகிறது.

"கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு சிறப்பு பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு "கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. விருது',  ரூ.5 லட்சம் பணமுடிப்புடனும், பாராட்டுப் பத்திரத்துடனும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. வ.உ.சி.யின் பெருமை கப்பல் ஓட்டியதா? அவரது தொழில் என்ன கப்பல் கட்டுமானமும்,  போக்குவரத்தும், தொழில்நுட்பமுமா?

தமிழகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தலைவர் யார் என்று ஆய்வு மேற்கொண்டால், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இணையாகச் சொல்வதற்கு எவருமே இருந்துவிட முடியாது. பாரதியார், ராஜாஜி, திரு.வி.க., பெரியார் ஈ.வெ.ரா., காமராஜர், பாரதிதாசன், அண்ணா உள்ளிட்ட அனைவராலும் "தன்னிகரில்லாத் தலைவன்' என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தகை "செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி. என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியுமா என்ன?

பஞ்சாபுக்கு ஒரு பகத் சிங், வங்காளத்துக்கு ஒரு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாராஷ்டிரத்துக்கு ஒரு பாலகங்காதர திலகர் என்றால், தமிழகத்துக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று வரலாறு ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறது. 

வணிக ஆதிக்கத்தை ஒழிப்பதன் மூலம்தான் அந்நிய ஆதிக்கத்தின் ஆணிவேரை அசைக்க முடியும் என்கிற தொலைநோக்கு சிந்தனையை முன்னெடுத்த தமிழர் அவர். தமது சொல்லாலும், செயலாலும்  எழுச்சியை உருவாக்கிக் காட்டிய தலைவர்.  அறிவிக்கப்பட்டிருக்கும் விருது, அவரது ஆளுமையை சிறப்பிக்கும் விதமாக அமையவில்லை என்பதுதான் எனது மனக்குறை.

கட்சி, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழகத்தின் "தன்னிகரில்லாத் தலைவர்' என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் வ.உ.சிதம்பரனாருக்கு அளிக்கும் கெளரவம், ஏனைய எல்லா விருதுகளிலும் உயர்ந்த விருதுக்கு அவரது பெயரைச் சூட்டுவதாக இருப்பதுதான். அதனால், "தகைசால் தமிழர் விருது' என்கிற தமிழக அரசின் விருதை "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தகைசால் தமிழர் விருது' என்று மாற்றம் செய்வதுதான் அவருக்கு உகந்த கெளரவத்தை வழங்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. முதல்வர் பரிசீலிப்பாராக...

"முல்லை' முத்தையா தொகுத்து வழங்கியிருக்கும் "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்' என்கிற புத்தகத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவருடன் நெருங்கிப் பழகிய தலைவர்கள் பலரின் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்திருக்கிறார். அதில்  "நாவலர்' சோமசுந்தர பாரதியாரின் கூற்று அன்றைக்கும்   இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும். அது இதுதான்- ""தமிழர் புத்துணர்வும் நல்வாழ்வும் எய்த வழிவகுத்து வாழ்ந்த இப்பெரியாரை வழுத்தாத நாளெல்லாம் தமிழருக்கு வீண் நாளாகும்!''


எப்போது வெளிவரும் என்று நான் நீண்ட  நாள்களாகக் காத்திருந்த புத்தகம் ஒன்று இருக்குமானால், அது முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய "கற்பக மலர்கள்' என்கிற திருக்குறள் கட்டுரைகள்தான். முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று ஒன்றன்பின் ஒன்றாக அவர் வெளியிட்டபோதே, "எப்போது அத்தனை கட்டுரைகளும் எழுதப்பட்டு தொகுப்பாக வெளிவரும்' என்று அவரிடம் அடிக்கடி வினவுவதுண்டு.

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்போல, படிக்கப் படிக்கப் புதிது புதிதாகப் பல சிந்தனைகள் ஊற்றாகப் பிரவாகிக்கும்  அற்புதத்தின் அடையாளம்தான் திருக்குறள். வாழ்வியல் தத்துவங்களை ஈரடி வெண்பாக்களாகப் படைத்துத் தொகுத்திருக்கும் அந்த அற்புதப் புதையலிலிருந்து அள்ளி எடுத்துப் பரிமாறப்பட்டிருக்கும் விருந்துதான் "கற்பக மலர்கள்'.

தேவலோகத்தில் உள்ள கற்பக விருட்சத்தின் (கற்பகத் தரு, கற்பக மரம்) கீழே நின்றுகொண்டு எதைக் கேட்டாலும் அந்த மரம்  வழங்குமாம். திருக்குறள் ஒரு வகையில் கற்பக மரம்தானே... எதைப் பற்றிக் கேட்டாலும் அதற்கெல்லாம் விடையும், விளக்கமும் வழங்கும்  கற்பக மரமல்லவா அது. அதிலிருந்து எடுக்கப்பட்ட குறள்கள் என்பதால் புத்தகத்துக்குக் "கற்பக மலர்கள்' என்று பொருத்தமாகப் பெயர் சூட்டியிருக்கிறார் முனைவர் தெ.ஞானசுந்தரம்.

திருக்குறளின் 133 அதிகாரங்களில் இருந்து, அதிகாரத்துக்கு ஒரு குறள் என்று தேர்ந்தெடுத்து, அதன் வழியே அவர் நடத்தியிருக்கும் ஆய்வு,  ஒருவகையில் அந்தந்த அதிகாரம் குறித்த அகழாய்வு. புதிய பார்வையில் ஒவ்வொரு குறளும் காட்சிப்படுத்தப்படுகிறது என்றாலும், தமிழிலக்கியத்தில் இருந்து பல்வேறு எடுத்துக்காட்டுகளும், குறிப்புகளும், குறளின் பிரதிபலிப்புகளும் ஆங்காங்கே எடுத்தியம்பப்பட்டிருப்பதுதான் "கற்பக மலர்க'ளின் தனிச் சிறப்பு.


முனைவர் தெ.ஞானசுந்தரம் பன்மொழிப் புலமையாளர். சம்ஸ்கிருதத்திலும் ஆழங்காற்பட்டவர். செவ்விலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தவர். வைணவ இலக்கியம் என்பது அவரது தனி கவனம் பெற்ற ஈர்ப்பு. சைவம் அவரது உதிரத்தில் இணைந்தது. தெ.ஞானசுந்தரம் என்கிற தகைசால் பெரியாரின் நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாட்டை 133 கற்பக மலர்களிலும் காண முடிகிறது. 

"குழந்தைகள் மனனம் செய்ய, அதிகாரத்துக்கு ஒன்று என்று 133 குறள்களைத் தேர்ந்தெடுத்துத் தாருங்கள்' என்று என்னிடம் யாராவது கேட்டால், "கற்பக மலர்கள்' என்றொரு புத்தகம் யாத்திருக்கிறார் முனைவர் தெ.ஞானசுந்தரம். அந்தக் குறள்களைப் படித்தால் திருக்குறளை முற்றோதல் செய்ததாக இருக்கும்' என்று பரிந்துரைப்பேன்.


காத்திருந்து கிடைத்த கற்பகத் தரு, இந்தக் "கற்பக மலர்கள்!'.


கவிஞர் ராசி. அழகப்பனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு "காலப் புதிர்வனம்'. அதில் இடம்பெற்ற "நதியின் முகம்'  என்கிற கவிதை சாதாரணமாகத் தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்தால்  அதற்குள் புதைந்து கிடக்கும் அர்த்தங்கள் ஆயிரம்.
ஆதியும் அந்தமும்
நினைவு கொள்ளாது
வழியெங்கும் பயன்பட
பயணிக்கும் நதி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com