ஆசிரியருக்குப் பொருளுரைத்த மாணவர்

தமிழகத்தில் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலும் தமிழ் இலக்கியங்கள் தனிப்பட்ட புலவர்களின் கற்பித்தல் செயற்பாட்டின் வழியாகவும், சில தனிப்பட்ட செல்வர்களின் ஆர்வம்
ஆசிரியருக்குப் பொருளுரைத்த மாணவர்

தமிழகத்தில் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலும் தமிழ் இலக்கியங்கள் தனிப்பட்ட புலவர்களின் கற்பித்தல் செயற்பாட்டின் வழியாகவும், சில தனிப்பட்ட செல்வர்களின் ஆர்வம் காரணமாகவும் ஆங்கிலேயர்களின் பள்ளிக்கூடங்களில் பாடத்திட்டத்தின் வழியாகவும், சைவ மடங்களின் மூலமாகவும் தனது இருப்பினைத் தொடர்ந்து கொண்டிருந்தது என்பது வரலாற்று உண்மை.
ஆங்கிலேய அரசு பல்வேறு நோக்கங்களுக்காக நடத்திவந்த பள்ளிக்கூடங்களில் தமிழும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. திருச்சியில் ராணுவ வீரர்களுக்கான ஒரு பள்ளிக்கூடம் இயங்கி வந்ததையும், அதில் வித்துவான் தியாகராச செட்டியார் தமிழாசிரியராகப் பணி செய்ததையும் உ.வே. சாமிநாதையர், "வித்துவான் தியாகராச செட்டியார்' என்ற நூலில் குறிப்பிடுகிறார். கும்பகோணம் கல்லூரியின் முதல்வர் கோபால் ராவ் செட்டியாரின் புலமையை வியந்து, அவருக்குக் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் முதல் நிலைத் தமிழாசிரியர் பணியை வழங்கினார்.
வித்துவான் தியாகராச செட்டியார் தமிழ்ப் பாடங்களை முழு ஈடுபாட்டுடன் கற்பித்து வந்தார். அற்றை நாள்களில் கல்லூரிப் பாடத்திட்டங்களில் தமிழ் இலக்கியங்களில் சில பகுதிகளைப் பாடமாக வைக்கும் மரபு இருந்து வந்தது. அத்தேவையை நிறைவு செய்வதற்காக இலக்கிய நூல்கள் சில பதிப்பிக்கப் பெற்றன. அவற்றிலிருந்த பாடல்களுக்கு ஆசிரியர்கள் தாமே முயன்று உரைவிளக்கம் கூறிவந்தனர்.
தியாகராச செட்டியார் அன்றைய தமிழ்ப் புலவர்களிடையே பெரும்புகழ் பெற்றவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். புலமையில் குறைபாடுடைய போலிப் புலவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். நேர்முகத் தேர்வுக்  குழுவில் செட்டியார் ஓர் உறுப்பினர் என்று தெரியவந்தால் தன்னம்பிக்கையற்றவர்கள் தேர்வை எதிர்கொள்ளாமலேயே திரும்பிச் சென்றுவிடுவர் என்று ஒரு தகவலை உ.வே.சா. பதிவு செய்திருக்கிறார். 
சிங்கம்போல் மற்றவர்களுக்குத் தோற்றம் தந்த தியாகராச செட்டியார் நல்லறிவுடைய மாணவர்களிடம் ஒரு குழந்தையைப் போன்று பழகியிருக்கிறார் என்பது சுவை பயக்கும் செய்தி. கும்பகோணம் கல்லூரியில் ஒருமுறை வகுப்பில் கம்பராமாயணம் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,வஞ்சனையால் வந்த வரவென்பது என்னுடைய நெஞ்சகமே முன்னே நினைவித்த தானாலும் அஞ்சொல்மயிலை அருந்ததியை நீங்கினிரோ எஞ்சலிலா ஆற்றலிரு வீரும் (சடாயு உயிர்நீத்த படலம்,190) என்று சடாயு கூற்றாக வரும் பாடலுக்குத் தியாகராச செட்டியார் விளக்கம் கூற முயற்சி செய்யும்போது, அவருக்கு ஓர் ஐயம் ஏற்படுகிறது. "இராவணன் சீதையை எடுத்துச் சென்ற நிகழ்ச்சி வஞ்சனையால் நிகழ்ந்தது என்பது முதலடியில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே வஞ்சனையால் வந்தது என்று சொன்னால் போதுமே. "வந்த வரவு'என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? வரவு என்பதற்கு இந்த இடத்தில் வேறு ஏதாவது அர்த்தம் சொல்லலாமா என்று இவர் சிந்தித்தார்'என்று உ.வே.சாமிநாதையர் அந்த நிகழ்ச்சியைத் தாம் எழுதிய "வித்துவான் தியாகராச செட்டியார்' என்ற நூலில் விவரிக்கிறார். 

கம்பராமாயணம் போன்ற பல நூல்களுக்கு அற்றை நாள்களில் பெரிய அளவில் உரை விளக்கங்கள் வெளிவரவில்லை; எனவே, ஆசிரியப் பெருமக்கள் சொந்தமாகச் சிந்தித்தே விளக்கங்கள் கூறவேண்டிய நிலை! 

தியாகராச செட்டியார் சிந்தித்துக் கொண்டிருந்தபோது,  சுப்பையா எனும் மாணவன் மெதுவான குரலில், ""வரவு என்பதற்கு இந்த இடத்தில் துன்பம் என்று அர்த்தம் பண்ணலாமோ?'' என்று கூறினான்; உடனே செட்டியார் அவன் கருத்தை ஏற்று மனம் மகிழ்ந்து ""உன்னைப் பாராட்டுகிறேன்'' என்று கூறிவிட்டார். பின்னர் தமது புத்தகத்தில் ""வரவு -துன்பம்; சுப்பையா சொன்னது''என்று  குறிப்பு எழுதி வைத்துவிடுகிறார். 

சில காலம் கழித்து வீட்டிற்கு வந்த உ.வே.சா.,  ""இது என்ன இப்படி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறீர்களே?'' என்று வினவியபோது, செட்டியார் நடந்த நிகழ்ச்சியைக் கூறி மகிழ்கிறார். இந்த சுப்பையா பின்னாள்களில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்தவர் என்பது ஒரு தகவல். இது நிற்க. சுப்பையா சொன்ன விளக்கம் பற்றிக் காணலாம்!

""இன்றளவும் கம்பராமாயணச் சுவைஞர்களாலும், என்னாலும் கொண்டாடப்படுகின்ற உரை விளக்கம் எழுதிய வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் தமது உரையில் வரவு என்ற சொல்லுக்கு ""பொன்மானும் இராவண சந்யாசியும் வந்த வருகை வஞ்சனைச் சூழ்ச்சியாலாகியது'' என்று உரை கூறுகிறார்.

முதுபெரும் பேராசிரியர் வை.மு.கோ.வின் இவ்வுரையில் சில இடர்ப்பாடுகள் உள்ளதைக் கற்போர் உணரலாம். இராவணன் சீதையை நிலத்துடன் பெயர்த்துக் கொண்டு சென்றபோது  சடாயு போரிட்டு வீழ்ந்தார்; அதனால் சீதையை இராவணன் கொண்டு போன செய்தியை அவர் தெளிவாக அறிந்து கூறினார் என்று கொள்ள முடியும்; ஆனால், மாரீசன் பொன்மானாக வந்ததும், இராவணன் துறவியின் வேடத்தில் வந்ததையும் அவர் அறிய மாட்டார். ஏனென்றால், பொன்மான் வந்தது முதல் நடந்த அத்தனை செய்திகளையும் இலக்குவன் இனிமேல்தான் -அதாவது அடுத்த பாடலில்தான் கூறவிருக்கிறான்; நடந்த அத்தனையையும் இலக்குவன் கூறுமுன்னரே பொன்மான் பற்றி சடாயுவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இலக்குவன் கூறிய பிறகு சடாயு, "விதிவயம் என்பதை மேற்கொள்ளாவிடில் / மதிவலியான் விதி வெல்ல வல்லமோ'  (சடாயு உயிர் நீத்த படலம்,193) என்று ஆறுதல் கூறுகிறார். காப்பிய நிகழ்ச்சிகளின் போக்கும் உரையாடல்களும் இவ்வாறிருக்க,  வை.மு.கோ. கூறும் உரையை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் எழுகிறது.

கோவைக் கம்பன் கழகப் பதிப்பில், இராவணன் சீதையை எடுத்துக் கொண்டு வந்த வரவு என்று பொருள் கூறப்பட்டுள்ளது. சடாயு தான் கண்டதைக் கூறுவதாக இவ்வுரை அமைகிறது என்பதால் குழப்பமில்லை.

வித்துவான் தியாகராச செட்டியார் ஒரு சொல்லுக்குப் பொருள் கூறும் முன்னர் அது பற்றி எவ்வளவு தூரம் சிந்தனை செய்தார் என்பதற்கு வரவு என்ற சொற்பொருளை முடிவு செய்வதில்  அவருக்கு ஏற்பட்ட தயக்கம் சான்று பகர்கிறது. அந்தக் கால ஆசிரியப் பெருமக்களின் வியத்தகு பொறுப்புணர்வுக்கு இது தக்க சான்று!

மாணவர் சுப்பையா கூறிய பொருள் பற்றிய செய்தியை உ.வே.சா.,  தம் ஆசிரியரான தியாகராச செட்டியார் மூலம் அறிந்திருந்தார் என்பது முன்னர் விளக்கப்பட்டது. கம்பராமாயணத்திற்கு உரை எழுதும் நோக்கத்துடன் உ.வே.சா., தொகுத்து வைத்திருந்த குறிப்புகள் அவர் காலத்திற்குப் பின்னர் நூல் வடிவம் பெற்றன. 
அப்பதிப்பில் ,"வரவு' என்பதற்கு "நடந்த காரியம்' என்ற பொருளை உ.வே.சா.கொடுத்திருக்கிறார்; எனினும் மாணவர் சுப்பையா கூறிய "துன்பம்' என்ற பொருளையும் பதிப்பில் கொடுத்திருக்கிறார்கள்; "வந்த வரவு' என்பதற்குத் "துன்பம்' என்ற ஒரு பொருளும் உண்டு என்பது ஐயரவர்கள் குறிப்புஎன்ற தொடர் உ.வே.சா. உரைப்பதிப்பில் காணப்படுகிறது. தியாகராச செட்டியார் 1865 முதல் 1880 வரையுள்ள காலத்தில்தான் கும்பகோணத்தில் கல்லூரியில் பணிபுரிந்தார். 

அந்தக் காலகட்டத்தில்  நடந்த ஒரு நிகழ்ச்சியை ஆசிரியர் தம்  மனத்தில் அடைகாத்து வைத்திருந்ததும் அக்கருத்து 1959-இல் ஏறத்தாழ என்பதாண்டுகள் கழித்து  வெளிவந்த நூலில் இடம்பெற்றதும் நம்மை வியப்பின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றன.

வகுப்பறையில் மாணவர் ஒருவர் கூறிய கருத்தை ஏற்றுப் பாராட்டிய ஆசிரியர் தியாகராச செட்டியாரைப் போற்றுவதா? தம் ஆசிரியரின், மாணவர் கூறிய ஒரு கருத்தைத் தனது நூலில் இடம்பெறச் செய்த உ.வே.சாமிநாதையரைப் போற்றுவதா  என்று தெரியாமல் நம் மனம் திகைப்படைகிறது!

இன்று உயர் கல்வித்துறையில் ஆசிரியர்- மாணவர் உறவு  அச்சமூட்டும் ஒரு கொடுங்கனவாக மாறிவரும் நிலையில், உ.வே.சாமிநாதையர் காட்டும் ஆசிரியர் -மாணவர் உறவு நம் மனத்தில் பெரும் ஏக்கத்தை உண்டாக்குகிறது. 
"இனி நினைந்து இரக்கம் ஆகின்று'.  

இன்று:  ஆசிரியர் தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com