இந்த வாரம் கலாரசிகன் - (19-09-2021)

இந்த வாரம் கலாரசிகன் - (19-09-2021)

சிங்கப்பூர் "தமிழ்நேசன்' முஸ்தபாவிடமிருந்து ஐந்து நாள்களுக்கு முன்னால் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

சிங்கப்பூர் "தமிழ்நேசன்' முஸ்தபாவிடமிருந்து ஐந்து நாள்களுக்கு முன்னால் ஒரு குறுஞ்செய்தி வந்தது. "சிங்கப்பூர் திறந்தவெளிச் சிறைச்சாலையிலிருந்து தமிழ்நாடு திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு வந்து விட்டேன்' என்கிற செய்தியுடன், எப்போது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும் அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

புதன்கிழமை எனது எழுத்து வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அவரைச் சந்திக்க, அலுவலகத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு மேல் கிளம்பினேன். அம்பத்தூரில் இருக்கும் எங்கள் அலுவலகத்தில் இருந்து சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்வதாக இருந்தால், இரவில்தான் பயணிப்பது எனது வழக்கம். இல்லையென்றால், குறைந்தது ஒரு மணி நேரமாவது போக்குவரத்து நெரிசலில் வீணாகும். சில நேரங்களில் இரண்டு மூன்று மணிகளும்...

முஸ்தபாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கே எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நான் பெரிதும் மதிக்கும் பாரதியியல் ஆய்வாளரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறைத் தலைவருமான பேராசிரியர் ய.மணிகண்டன் அங்கே இருந்தார். முஸ்தபாவும் மணிகண்டனும் முத்துப்பேட்டைக்காரர்கள் என்பது சட்டென நினைவுக்கு வந்தது.

அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், பேராசிரியர் ய.மணிகண்டன் சைக்கிளில் வந்திருந்தது. நடைப்பயிற்சி போல, பேராசிரியரின் உடற்பயிற்சி சைக்கிள் மிதிப்பது என்று தெரிந்து கொண்டேன். தினந்தோறும் அவரது திருவல்லிக்கேணி வசதியிலிருந்து அடையாறு மத்திய கைலாஷ் வரை அதிகாலையிலோ, இரவிலோ சைக்கிள் மிதித்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர். நானும் ஒரு சைக்கிள் வாங்கினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அது போகட்டும். பேராசிரியர் மணிகண்டனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மகாகவி பாரதியார் குறித்து இதுவரை நான் அறிந்திராத, பல செய்திகளைக் கேட்டு வியந்தேன், மகிழ்ந்தேன். ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் தனது சொந்தச் செலவில் புதுதில்லி  செல்கிறார் அவர். அங்குள்ள தீன்மூர்த்திபவன் ஆவணக் காப்பகம் சென்று, பழைய "சுதேசமித்திரன்' இதழ்களின் மைக்ரோ ஃபிலிம்களைப் பார்த்து, தேடிக் கண்டுபிடித்த தகவல்கள் குறித்துச் சொன்னபோது அவரைக் கைகூப்பித் தொழத் தோன்றியது.

பாரதியாரின் படைப்புகளை அவருடைய மனைவி செல்லம்மா பாரதி மிகுந்த சிரமங்களுக்கிடையில் பதிப்பித்திருக்காவிட்டால் பல படைப்புகள் நமக்குக் கிடைத்திருக்காது. செல்லம்மா பாரதி, பாரதியாரின் தம்பி விஸ்வநாதய்யர், பரலி சு.நெல்லையப்பர் போன்றவர்களின் பங்களிப்புக்குத் தமிழகம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களுக்குப் பிறகு  பாரதியாரின் படைப்புகளைத் தேடிப்பிடித்ததிலும், அவர் குறித்த செய்திகளை ஆய்வு செய்ததிலும் ஐந்து பேரின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

பாரதியின் படைப்புகளைக் கால வரிசைப்படுத்தித் தொகுத்த சீனி.விசுவநாதனின் மகத்தான பணிக்கு ஈடு இணையில்லை. அதேபோல, கொல்கத்தா ஆவணக் காப்பகத்தில் எந்தவித வசதியும் இல்லாமல் பாரதியாரின் "இந்தியா' இதழைப் படியெடுத்து அவரது எழுத்துகளை ஆவணப்படுத்திய பெருமை இளசை. மணியனுக்கு உண்டு.  அவர்கள் இருவருக்கும் எள்ளளவும் குறைவில்லாத ஆய்வுப்பணி பெ.சு.மணியினுடையது.
அவர்கள் மூவரும் விட்ட இடத்திலிருந்து பாரதியை ஆய்வு செய்ய முனைந்தவர்கள் பேராசிரியர் ய.மணிகண்டனும், ஆ.இரா. வேங்கடாசலபதியும். இதுவரை வெளிவராத பல தகவல்களையும், பல உண்மைகளையும் அவர்கள் வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்.  இன்னும் அவர்கள் பாரதி தேடலில் தொடர்கிறார்கள்.

பேராசிரியர் மணிகண்டனுடனும், சிங்கை தமிழ்நேசன் முஸ்தபாவுடனும் பேசிக்கொண்டிருந்து நாங்கள் பிரிந்தபோது,  நள்ளிரவெல்லாம் தாண்டி ஓடி, அதிகாலை மணி இரண்டு. தூக்கம் போனால்தான் என்ன? வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று மகிழும் அதே வேளையில், அவர்களது தூக்கத்தைக் கெடுத்ததற்குப் பொறுத்துக்கொள்ளக் கோருகிறேன்.


-----------------------------------------


நீண்ட நாள்களாக வாங்க வேண்டும் என்று நான் நினைத்திருந்த புத்தகம் அன்பளிப்பாகக் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி தனிரகம். பாரதி நினைவு நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழாவில், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தால் "வாகீச கலாநிதி' கி.வா.ஜகந்நாதனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிக்கொணரப்பட்ட "திருக்குறள்' ஆராய்ச்சிப் பதிப்பு தரப்பட்டது. 

திருக்குறளுக்கு, அதிலும் சிறந்த ஆய்வுப் பதிப்பு வெளிவரவில்லை எனலாம். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு உருவாக்கி வெளியிடப்பட்டது என்பது அதன் கூடுதல் சிறப்பு.  இந்தப் பதிப்பை வெளிக்கொணர மூலகாரணமாக இருந்தவர் தமிழகத்தின் மேனாள் கல்வி அமைச்சர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார்.

1950-ஆம் ஆண்டு,  குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாதால் தொடங்கிவைக்கப்பட்டு, 1963-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனால் வெளியிடப்பட்டது இந்த ஆராய்ச்சிப் பதிப்பு. அதற்குப் பிறகு அது இரண்டு பதிப்புகளைக் கண்டுவிட்டது. சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினையொட்டி 1963-இல் முதற்பதிப்பும், அன்னை சாரதா தேவியாரின் 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி 2004-இல் இரண்டாவது பதிப்பும், சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி 2014-இல் மூன்றாவது பதிப்பும் வெளியாகி இருக்கின்றன.

""இந்தப் பதிப்பில் திருக்குறள் மூலம், பரிமேலழகர் உரை, உரை வேறுபாடு, ஒப்புமை, மேற்கோள் விளக்கம் என்பவை உள்ளன. உரை வேறுபாடு என்ற பகுதி பரிமேலழகர் உரையினின்றும் வேறுபடும் பிற உரைகளின் பகுதிகளை மட்டும் காட்டும். இப்பகுதியில் மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், கவிராஜபண்டிதர், எல்லிஸ் துரை என்பவர்களின் உரைகளிலுள்ள வேறுபாடுகளைக் காணலாம். ஒப்புமை என்ற பகுதியில் சொல்லாலும் பொருளாலும் திருக்குறட்பாக்களோடு ஒத்து நிற்கும் நூற்பகுதிகள் இருக்கின்றன. கம்பராமாயணக் காலம் வரையிலான நூல்களின் ஒப்புமைகளே இப்பகுதியில் காணக் கிடைக்கும்'' என்று தனது பதிப்புரையில் குறிப்பிடுகிறார் கி.வா.ஜ.

திருக்குறள் குறித்து அவிநாசிலிங்கம் செட்டியார், க.ச. அருள்நந்தி, டாக்டர் டி.எம்.பி. மகாதேவன், டி.எஸ்.கந்தசாமி முதலியார், அ.ச.ஞா., மு.வ., மா. இராசமாணிக்கனார் ஆகியோரின் அற்புதமான கட்டுரைகளையும் இணைத்திருப்பது தனிச்சிறப்பு.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் "வாகீச கலாநிதி' கி.வா.ஜகந்நாதன் மூலம் தமிழன்னைக்குப் படைத்திருக்கும் மணியாரம் இந்த ஆராய்ச்சிப் பதிப்பு. 

நூலகங்களில் இருந்தாக வேண்டும். தமிழர்கள் வசம் இல்லாமல் இருத்தல் கூடாது. ஆராய்ச்சி மாணாக்கருக்கு இன்றியமையாதது. 

இந்த வாரத்துக்கான கவிதைத் தேடல் எனது டைரி குறிப்பில் வந்து முடிந்தது. எப்போதோ குறித்து வைத்திருந்தேன் அமீர்  அப்பாஸ் என்பவரின் கவிதை வரிகளை.

குழந்தைகளின் தலையில்
குண்டு வீசிச் செல்லும்
போர்விமானங்கள்
பறந்து கொண்டிருக்கும் வரை
உலகம்
நாகரிகம் அடைந்ததாக
நம்புகிறவர்கள்
காட்டுமிராண்டிகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com