பொறுப்புணர்ந்து நடப்போம்!

"மானம்' என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர்,  "தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் / நிலையில் இழிந்தக் கடை' (964) என்கிறார்.
பொறுப்புணர்ந்து நடப்போம்!


"மானம்' என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர், "தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் / நிலையில் இழிந்தக் கடை' (964) என்கிறார். ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்புக்குப் பங்கம் ஏற்படாதவாறு விழிப்புணர்வுடன் வினையாற்ற வேண்டும். இழிவுக்குக் காரணமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. தன் நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டால் இழிந்தோராகவே கருதப்படுவர்.

"விவேகசிந்தாமணி' என்னும் நீதி நூல் செய்யுள் ஒன்று இதை அற்புதமாக எடுத்துக் காட்டுகிறது. தாமரை பூத்த தடாகம் ஒன்று. அக்குளத்தில் பூக்கும் தாமரையை மலரச் செய்பவன் சூரியன். அத் தாமரையின் தோற்றத்திற்குக் காரணம் குளத்து நீர். எனவே, அம்மலருக்குச் சூரியன் தந்தை; தாய் தண்ணீர். இருந்தாலும், குளத்தில் உள்ள தாமரை மலரைக் கொய்து, அந்தக் குளத்திலேயே போட்டுவிட்டால், அந்தத் தாமரை மலருக்குத் தாயாய் இருந்த தண்ணீரே அம்மலரை அழுகுமாறு செய்து கொன்றுவிடும். அந்தத் தாமரை மலரைக் கொய்து கரையிலே போட்டுவிட்டால், முன் தந்தையாய் இருந்து, அந்தத் தாமரை மலரத் துணைபுரிந்த சூரியனே மிக்க வெயிலை (வெப்பத்தை) வீசிச் சுட்டுக் கொல்வான்.

இப்படித்தான், இந்த உலகத்தில் உள்ளோரும் தங்களின் உயர்ந்த நிலைமையானது கேட்டினை அடைந்தபோது, தங்களுக்கு உரியவராலேயே தீங்கு செய்யப்பட்டு வாடி வதங்கிப் போவார்கள். அனைவரும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ளவில்லை என்றால், பெற்றோர்களாலேயே புறக்கணிக்கப்படுவர் என்கிற உயரிய நீதியை உவமை நயம் துலங்க எடுத்துரைக்கிறது இந்தப் பாடல்.

இப்பாடலின் தாக்கம்தான் கவியரசு கண்ணதாசனின் "உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்; உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்' என்கிற திரைப்பாடல் போலும்!

சங்குவெண் தாமரைக்குத்
தந்தைதாய் இரவி தண்ணீர்;
அங்கதைக் கொய்துவிட்டால்
அழுகச்செய்து அந்நீர் கொல்லும்!
துங்கவெண் கரையில் போட்டால்
சூரியன் காய்ந்து கொல்வான்;
தங்களின் நிலைமை கெட்டால்
இப்படித் தயங்கு வாரே! (பா.12)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com