இந்த வாரம் கலாரசிகன் - (26-09-2021)

இரண்டு வாரங்களுக்கு முன்னால், மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா தொடர்பாக மதுரைக்குச் சென்றபோது, பெரியகுளம்  சென்றிருந்தேன்.
இந்த வாரம் கலாரசிகன் - (26-09-2021)

இரண்டு வாரங்களுக்கு முன்னால், மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா தொடர்பாக மதுரைக்குச் சென்றபோது, பெரியகுளம்  சென்றிருந்தேன். ராமானுஜகூடம் திருமண மண்டப அதிபர் ராமானுஜம் போல எளிமையும் பண்பும் நிறைந்த ஒருவர் நண்பராகக் கிடைத்திருப்பது அடியேனின் பேறு. பெரியகுளம் வரை சென்றுவிட்டு நண்பர் ராமானுஜத்தை சந்திக்காமல் எப்படித் திரும்புவது? ராமானுஜகூடம் திருமண மண்டபம் சென்றபோது, நினைவுக்கு வந்தார் பெரியவர் புலவர் மு.இராசரத்தினம். பெரியகுளத்தின் இலக்கிய முகமாகத் திகழ்பவர் அவர். 

அகவை எண்பது கடந்துவிட்ட பெரியவர் புலவர்  மு.இராசரத்தினம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றத்தின் பொறுப்புகளில் இயங்கி வருபவர். கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பெரியகுளம் மங்கையர்க்கரசி மாதர் சங்கத்தில், திங்கள்கிழமை தோறும் அவர் நிகழ்த்தும் ஆன்மிக, இலக்கிய தொடர்  சொற்பொழிவைக் கேட்பதற்கு அந்த மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்துகூட பலர் வருவதுண்டு.

தனது இலக்கியப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் பதவி உயர்வையும் துறந்து, பெரியகுளத்திலேயே 35 ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பதவியில் தொடர்ந்தவர் புலவர் இராசரத்தினம். முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்படப் பல பிரமுகர்கள் இவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இவர் இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தாத ஊரே இல்லை என்கிற அளவுக்குத் தமிழகத்தையும், இந்தியாவின் பெரு நகரங்களையும் சுற்றி வந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட பெருந்தகையை பெரியகுளத்தில் சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும்  அதிகமாக அளவளாவ முடிந்ததில் நானடைந்த மகிழ்ச்சியைச் சொல்லி மாளாது.

அவர் ஒரு வருத்தமான செய்தியைத் தெரிவித்தார். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கூண்டு போட்டு சிலைகளைப் பூட்டி வைத்திருக்கும் அவலத்தை அவர் சொல்ல, கேட்கக் கேட்க எனக்கும் ஆத்திரம் வந்தது. சுதந்திரத்திற்காக காந்தியடிகள் வெள்ளைக்காரன் சிறையில் அடைக்கப்பட்டார் என்றால், சுதந்திர இந்தியாவிலும் அவரது சிலைகள் கூண்டுக்குள் அடைபடுவது எத்தனை பெரிய அவமானம்?

காந்தியடிகள் மட்டுமா,  ""திருவள்ளுவரைக்கூட கூண்டில் அடைத்துப் பூட்டுகிறார்கள். கூண்டுக்குச் செலவாகும் பணத்தை இலக்கிய அமைப்புகளிடம் கேட்டு வாங்குகிறார்கள்'' என்று அவர் சொன்னபோது, "இந்த அவலத்தைக் கேட்பாரில்லையா?' என்று உரக்கக் கூவ வேண்டும் போலிருந்தது.
பெரியவர் புலவர் மு.இராசரத்தினம் ஐயாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பி இரண்டு வாரம் கடந்துவிட்டது. ஆனாலும் கூண்டில் அடைக்கப்பட்ட மகாத்மாவும்,  திருவள்ளுவப் பேராசானும் எனது நினைவை விட்டு அகலாமல் இருக்கிறார்கள். சிலைகளுக்குக் கூண்டு போடும் அவலம் எப்போதுதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை.

---------------------------------------

பாரதியார் நினைவு நூற்றாண்டு மலரை நான் அன்பளிப்பாகக் கொடுத்தபோது, இராசரத்தினம் ஐயா எனக்குத் தந்த புத்தகம் முனைவர் க.பசும்பொன், க.அ.அய்யங்காளை, முனைவர் வீ.ரேணுகாதேவி மூவரும் இணைந்து பதிப்பித்திருக்கும் "செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்பு நெறி'. மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் க.பசும்பொன் எனக்கு முன்பே அறிமுகமான நண்பர் என்பதால், அந்தப் புத்தகம் கிடைத்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

தமிழ் இலக்கியத்தில் "கற்புநெறி' குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்புதான் அந்தப் புத்தகம். 19 ஆய்வாளர்கள் எழுதிய 18 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களான ஆ.விஜயலட்சுமியும், அ.சாரதாவும் இணைந்து ஐங்குறுநூற்றில் கற்புநெறி குறித்து எழுதியிருக்கிறார்கள். 

கற்புநெறி குறித்த பார்வை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை அந்தக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. சிலம்பிலும், மேகலையிலும் கற்பொழுக்கம் குறித்துச் சுட்டியிருக்கும் கருத்துகளும், சங்க இலக்கியங்களின் பார்வையும் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறப்பு.

சாதாரணமாகப் பெரியவர்கள் புத்தகம் தந்தால், நான் அதில் அவர்களது கையொப்பம் பெறுவது வழக்கம்.  அன்று அவசரத்தில் இராசரத்தினம் ஐயாவின் கையொப்பம் பெற மறந்துவிட்டேன். நோய்த் தொற்றுப் பரவல் முடிந்த பிறகு இன்னொரு தடவை பெரியகுளம் போய் அவரது கையொப்பத்தைப் பெற வேண்டும்.

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா மலர் வெளிக்கொணர்ந்தது போல, மதுரையில்  அண்ணல் காந்தியடிகள் வேட்டிக்கு மாறிய வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டின்போதும் ஒரு மலர் கொண்டுவர வேண்டும் என்று எனக்கு நிறையவே ஆசை இருந்தது. ஆனால், நடக்கவில்லை. அந்த விசனத்தைப் போக்கியிருக்கிறார் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் நாகராஜன். 

செப்டம்பர் 22-ஆம் தேதி, நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாநகர் மதுரையில் அண்ணல் காந்தியடிகள் நடத்திய அந்த ஆடைப் புரட்சியை நினைவுகூரும் விதத்தில் அவர் வெளிக்கொணர்ந்திருக்கும் "மகாத்மாவைக் கொண்டாடுவோம்' என்கிற சிறு வெளியீடு, எனது மனக்குறையை அகற்றியிருக்கிறது.

""இந்திய மக்களிடம்  சுதந்திர உணர்வையும், சுதேசி உணர்வையும் தட்டி எழுப்ப தவ வாழ்வு மேற்கொண்ட காந்தியடிகளின் சில நற்சிந்தனைகளை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் வெளியிடப்பட்டதே இந்தச் சிறிய புத்தகம்'' என்கிற பதிப்புரையுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் அந்தப் புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருப்பதற்கு அவரை எத்துணை பாராட்டினாலும் தகும்.

காந்தியார் குறித்த கட்டுரைகளுடன்,  தமிழர்தம் பன்னாட்டு அடையாளமான வேட்டி குறித்தும் இளைய தலைமுறையினருக்குப் புரியும் விதத்திலும், அவர்களைக் கவரும் விதத்திலும் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும்கூட வெளிவர வேண்டும்.

நதிமூலம் ரிஷிமூலம் போல இந்தக் கவிமூலமும் கேட்கக்கூடாது.
ஆடை துறந்தார்
அண்ணல்
வியர்வையில் நனைந்தான்
மன்னன்
விடுதலை பெற்றது
இந்தியா!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com