இந்த வாரம் கலாரசிகன் (07/08/2022)

ஒரு மகிழ்ச்சியான செய்தி. கோவில்பட்டியில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது
இந்த வாரம் கலாரசிகன் (07/08/2022)

ஒரு மகிழ்ச்சியான செய்தி. கோவில்பட்டியில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முதலாம் ஆண்டு கம்பன் விழா சிறப்பாக நடந்தது என்று சொன்னார்கள். அதன் நிறுவனர் எஸ்.எஸ்.டி. கிருஷ்ணமூர்த்தி, தலைவர் வெ.மு. லட்சுமணப் பெருமாள், செயலாளர் த. சரவணச்செல்வன் ஆகியோரின் முனைப்பில் முகிழ்த்திருக்கும் கோவில்பட்டி கம்பன் கழகத்துக்கு வாழ்த்துகள்!
முதலாம் ஆண்டு கம்பன் விழாவின் தொடக்கமே அட்டகாசமாக இருக்கிறது. பேராசிரியர்கள் சாலமன் பாப்பையா, மு. ராமச்சந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பங்களிப்புடன் தொடங்கி இருக்கிறார்கள் என்பதிலிருந்தே, அமைப்பாளர்களுக்கு எந்த அளவுக்குத் தொலைநோக்குப் பார்வையும், இலக்கிய உணர்வும் இருக்கிறது என்பது தெரிகிறது. "மானுடம் வெல்க' என்கிற கொள்கை முழக்கத்துடன் தொடங்கி இருப்பவர்கள், வெல்வார்கள் என்பதில் ஐயமில்லை.
கம்பனும், திருவள்ளுவரும் தமிழுக்கு "கதி' என்று சொல்வது, வெறும் வாய்ப்பேச்சன்று. கம்பனின் காப்பியம் என்பது வள்ளுவத்தை உள்ளடக்கிய அறநூல். தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் கம்ப காவியம் பேசப்படுவதும், வள்ளுவரின் குறள் போற்றப்படுவதும், தமிழை சாமானியர்களுக்குக் கொண்டு செல்லும் வழி என்பதை முந்தைய தலைமுறைத் தமிழறிஞர்கள் உணர்ந்ததால்தான், "தமிழுக்கு கதி' என்று கம்பனையும் திருவள்ளுவரையும் குறிப்பிட்டார்கள்.
இறைமறுப்புக் கொள்கையின் அடிப்படையில் திராவிட இயக்கத்தினர் கம்பராமாயணத்தை எரிக்கும் "தீ பரவட்டும்' போராட்டத்தை முன்னெடுத்தபோது, அதை எதிர்த்து முழக்கமிட்டவர் அந்த இயக்கத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். "கம்பனை எரித்துவிடலாம். நம்மிடம் அதற்கு நிகரான கவிதை நயம் மிக்க இலக்கியம் வேறு என்ன இருக்கிறது' என்று அவர் துணிந்து எழுப்பிய கேள்விக்கு இன்று வரை யாராலும் விடைதர முடியவில்லை.
"கம்பன் புகழ்பாடித் தமிழ் வளர்க்கும்' அறிஞர்கள், கம்ப காதையை மையப்படுத்திப் பட்டிமன்றங்கள் அமைத்து பாமரர்களுக்கும் இலக்கிய ஆர்வம் ஏற்பட வழிகோலினார்கள். பட்டிமன்றங்கள் ராம காதையின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். வழக்காடு மன்றங்கள் அதன் கதாபாத்திரங்கள் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், அவற்றின் உரைகளில் சங்க இலக்கியத்தில் தொடங்கி அனைத்துத் தமிழ் படைப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டன. அதன் மூலம் தமிழ் மொழி சார்ந்த புரிதலைப் பாமரர்கள் பெற்றனர்.
இப்போது, குழந்தைகள் தமிழில் பேசுவதே அரிதாகிவிட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி என்றாகிவிட்டது. தமிழை வழக்கு மொழியாக நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பணியை கம்பன் கழகங்களும், திருவள்ளுவர் கழகங்களும், இளங்கோவடிகள் மன்றங்களும், பாரதி பாசறைகளும்தான் செய்தாக வேண்டும். இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள், அறிஞர்களின் உரைகளைக் கேட்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர அந்த அமைப்புகளால்தான் முடியும்.
தமிழகத்தில் எத்தனையோ தனியார் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவை அந்தந்த மாவட்டத்தில் உள்ள இதுபோன்ற இலக்கிய அமைப்புகளை தத்தெடுத்து உற்சாகப்படுத்தினாலே போதும், பாரதியின் "தெருவெல்லாம் தமிழ் முழக்கம்' கனவு நனவாகும்.
கோவில்பட்டிக் கம்பன் கழகம் போல, தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் கம்பனுக்கும், வள்ளுவருக்கும் கழகங்கள் ஏற்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டும். "கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளர்ப்போம்!'

சென்னை, நந்தனம் கலைக்கல்லூரியில் பணியாற்றும் முனைவர் மு. ரமேஷ் என்னை சந்திக்க அலுவலகம் வந்திருந்தாராம். நான் இல்லை. அவர் எழுதிய "சங்க இலக்கியத்தில் சமயங்களும், மெய்யியல் கூறுகளும்' என்கிற புத்தகத்தின் இரண்டு பிரதிகளை விமர்சனத்துக்குக் கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.
சங்க இலக்கியம் குறித்த எனது புரிதல் மிகக் குறைவு; ஆனால், ஆர்வம் மிக அதிகம். அதனால் அந்தப் புத்தகத்தை நானே படித்து விமர்சனம் எழுதலாம் என்கிற எண்ணத்துடன் எடுத்து வைத்துக் கொண்டேன். "சங்கத் தமிழ்', "சமயத் தமிழ்' என்கிற வேறுபாட்டை உடைத்தெறிந்து, சங்க காலத்தில் சமயங்களின் தாக்கம் எப்படியெல்லாம் இருந்தது என்பதைத் தரவுகளுடன் நிறுவ முற்பட்டிருக்கிறார் முனைவர் மு. ரமேஷ்.
சங்க இலக்கியம் சமயக் கலப்பற்ற இலக்கியம் என்பதை, குறிப்பிட்ட எந்த வொரு சமயக் கருத்தும் சங்க இலக்கியத்தில் மேலோங்கவில்லை என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது முனைவர் ரமேஷின் கருத்து. அதற்கு ஆதாரமாக சங்க இலக்கியச் செய்யுள்
களில் காணப்படும் உலகாயதம், ஆசீவகம், பெளத்தம், சமணம், வைணவம், சைவம் ஆகிய சமய மெய்யியல் கூறுகளை அவர் எடுத்துக் காட்டுகிறார்.
"சங்கா' என்கிற பாலி மொழிச் சொல்லில் இருந்து உருவானது "சங்கம்' என்று கூறும் ஆசிரியர், 19-ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து சங்கம் நிலவிய காலம் குறித்த உரையாடல் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார். மூன்று வகையான சங்கம் நிலவிய காலம் குறித்த சர்ச்சையையும் பதிவு செய்கிறார். அதைத் தொடர்ந்து, சங்ககால சமயங்கள் குறித்த விரிவான ஆய்வுக்கு நகர்கிறார்.
பெளத்தத்துக்கும் சங்க இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு விரிவாக ஆராயப்பட வேண்டும் என்பது முனைவர் ரமேஷின் கருத்து. தொல்காப்பியத்தில் தொடங்கி சமணத்தின் தாக்கம் குறித்தும், வைணவம், சிவனியம் குறித்தும் நுணுக்கமான பல தகவல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கிய நூல்களில் வைதீக மதம், அந்தணர்களின் யாகம், அவர்களுக்குத் தரப்பட்ட மரியாதை ஆகியவை குறித்தும் எடுத்துக் காட்டப்படுகிறது.
பழந்தமிழகத்தில் அரசர்களின் ஆதரவு பெற்று, நிறுவிய சமயங்களாகத் தோன்றி வளர்ந்த பெளத்தம், சமணம், வைதீக வேத சமயம், வைணவம், சைவம் குறித்து மட்டுமல்லாமல், நிறுவனத்தன்மை எய்தாத பொருள்முதல்வாதக் கொள்கைகளை முன்னிறுத்தி இயங்கும் கருத்தியலும் சங்க காலத்தில் நிலவியது என்பது அவரது தனித்த சிந்தனை. சங்க இலக்கியத்தில் காணப்படும் அனைத்து சமயக் கூறுகளையும் முனைவர் மு. ரமேஷின் சிந்தனை பகுப்பாய்வு செய்திருக்கிறது.

அரை நூற்றாண்டுக்கு முந்தைய அரசியல் நிகழ்வு ஒன்று குறித்த சந்தேகம் எழுந்தது. வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணனிடம் அது குறித்துக் கேட்பதற்காக பாலவாக்கம் சென்றிருந்தேன். அவரது வீட்டில், யாழ்ப்பாணம் நூலகத்துக்கு அவர் மூலம் அன்பளிப்பாக அனுப்புவதற்கு நண்பர் மாலன் கொடுத்திருந்த புத்தகங்கள் இருந்தன.
மாலனின் "புவி எங்கும் தமிழ்க் கவிதை' தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கவிஞர் அன்பரசனின் "மாற்றம்' என்கிற இந்தக் கவிதை -
சிறகுகளாய்
இருக்குமென்றுதான்
பறவைகளாய் வந்தோம்
சுமைகளாகிப் போனதால்
ஒட்டகங்களாக...!









 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com