மூவர் பாடிய "தான்'

திருக்குறளில் நாற்பத்தி ஒன்பது குறட்பாக்களில் "தான்' எனும் சொல்லை திருவள்ளுவர் எடுத்தாண்டுள்ளார். தனக்கு என்றும், ஒருவன் என்றும் பொருள் தருமாறு இடம்பெற்றுள்ளது "தான்' என்னும் சொல்.
மூவர் பாடிய "தான்'

திருக்குறளில் நாற்பத்தி ஒன்பது குறட்பாக்களில் "தான்' எனும் சொல்லை திருவள்ளுவர் எடுத்தாண்டுள்ளார். தனக்கு என்றும், ஒருவன் என்றும் பொருள் தருமாறு இடம்பெற்றுள்ளது "தான்' என்னும் சொல். "புல்லறிவாண்மை' அதிகாரத்தில் அறிவு இல்லாதவனுக்கு, அறிவிப்பவன்தானே அறிவில்லாதவனாய் நிற்பான். அறிவு இல்லாதவனோ தான் அறிந்தவகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான் எனும் பொருளில்,
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு!
என்ற இக்குறட்பாவில் "தான்' என்னும் சொல் நான்கு இடங்களில் உள்ளன. குறித்த ஒரு பொருள், குறித்த ஒருவன் என்னும் பொருளில் "தான்' இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. கம்பரோ, யுத்தகாண்டம், மாயாசனகப் படலத்தில் கும்பகர்ணன் போரில் மாண்டுபோனான் என்பதை அறிந்து,
தன்னைத்தான் தம்பியைத்தான்
தானைத் தலைவனைத்தான்
மன்னனைத்தான் மைந்தனைத்தான்
மாருதத்தின் காதலைத்தான்
பின்னைக் கரடிக்கு இறையைத்தான்
பேர் மாய்த்தாய என்னைத்தான்
கேட்டிலேன் என்ஆனவாறு இதுவே! (கம்ப)
என்று ராவணன் அழுது அரற்றியதாகப் பாடியுள்ளார். தம்பி கும்பகர்ணன் போரில் இறந்துபோனான் என்று அறிந்த ராவணன், கும்பகர்ணனின் பேராற்றலில் ராமனைத்தான், அவன் தம்பி இலக்குவனைத்தான், வானர சேனைத் தலைவனாகிய நீலனைத்தான், வானர அரசன் சுக்கிரீவனைத்தான், வாலி மகனாகிய அங்கதனைத்தான், காற்றின் காதல் மைந்தன் அனுமனைத்தான், சாம்பவனைத்தான் இவர்களை எல்லாம் பெயரே இல்லாமல் போகும்படிக் கொன்றாய் எனச் செவிகளில் கேட்பேன் என்றிருந்த எனக்கு உனது சாவினைக் கேட்குமாறு ஆகிப்போனதே என வருந்தி
அரற்றுகிறான்.
19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராயர், தனது வறிய நிலையை எண்ணி மனம் தளர்ந்து, தாமரைப் பூவில் வாசம் செய்யும் படைப்புக் கடவுளான பிரம்மனிடம் "என்னைப் படைத்தபோதே கையில் சிறிது தங்கத்தைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கலாமே. இயலாவிடின் கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கக் கற்றுக் கொடுத்து இப்பூமிக்கு அனுப்பியிருக்கலாமே. இவ்விரண்டையும் செய்யாததால் நான் படும் துன்பத்தை எங்கே, யாரிடம் சொல்லி நோவது? பலரிடமும் நான் பல்லைக் காட்டிப் பிழைக்கும் வாழ்க்கையாகிப் போனதே எனக்கு' என்பதை,
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானோ?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் அரைத்தானோ
அத்தானையோ வெங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியிற்றான் பண்ணினானோ?
என்று பாடியுள்ளார். "தான்' என்ற சொல்லை திருவள்ளுவர் நான்கு இடங்களிலும், கம்பர் எட்டு இடங்களிலும், இராமச்சந்திரக் கவிராயர் பதினாறு இடங்களில் கையாண்டுள்ளனர்.
-புலவர் ப. சோமசுந்தர வேலாயுதம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com