இந்த வாரம் கலாரசிகன் - (14-08-2022)

சென்னைக் கம்பன் கழகத்தின் 48-ஆவது ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கித் தொடங்கி வைக்க சென்னை வந்திருந்தார் மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன்.
இந்த வாரம் கலாரசிகன் - (14-08-2022)

சென்னைக் கம்பன் கழகத்தின் 48-ஆவது ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கித் தொடங்கி வைக்க சென்னை வந்திருந்தார் மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த மணிப்பூர் ஆளுநரை சந்திக்க எங்கள் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தலைவர், மேலாண் இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியாவுடன் நானும் சென்றிருந்தேன். எங்கள் இருவருக்கும் தனித்தனியாக சந்திப்பதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், நாங்கள் ஒரு மணி நேரம் மேதகு ஆளுநர் இல. கணேசனுடன் அளவளாவி மகிழ முடிந்தது.

மணிப்பூர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார் மேதகு ஆளுநர். நாமெல்லாம் குஜராத், பிகார் மாநிலங்களில் மட்டும்தான் மதுவிலக்கு அமலில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு. மணிப்பூர் மாநிலத்திலும் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது என்கிற புதிய தகவலைத் தெரிவித்தார் அவர்.

மணிப்புரி மொழி இந்தியாவின் ஏனைய மொழிகள் அனைத்திலிருந்தும் மாறுபட்டது. சீன - திபெத்திய மொழிகள் கலந்த கலப்பு மொழி அது. மணிப்பூரின் எல்லையை ஒட்டி அமைந்திருக்கின்றன மியான்மரின் இரண்டு பிரதேசங்கள். அதனால் மணிப்பூர் மக்களும், மியான்மர் மக்களும் தங்கு தடையின்றி எல்லை கடந்து வந்து போவது என்பது அன்றாட நிகழ்வு.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலிருந்து மணிப்பூர் செல்ல நாம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், மணிப்பூர் மக்களும், மியான்மரில் உள்ள அவர்களது உறவுகளும் எந்தவித அனுமதியும் இல்லாமல் எல்லை கடந்து வந்து செல்வார்கள்.

ஆளுநர் இல. கணேசனுக்கு ஒரு விசித்திர அனுபவம் ஏற்பட்டதைப் பகிர்ந்து கொண்டார். மாநில ஆளுநர்கள், தங்களது மாநிலம் விட்டு வெளியே செல்வதற்கு, குடியரசுத் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்பதால் அந்த மரபு பின்பற்றப்படுகிறது.

மணிப்பூர் - மியான்மர் எல்லைப் பகுதியில் நமது தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட நாடார் சமூகத்தினர் பலர் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அங்கே ஒரு அங்காள பரமேஸ்வரி கோயில் கட்டியிருக்கிறார்கள். அந்தப் பகுதிக்குச் சென்றபோது, ஆளுநர் அந்தக் கோயிலில் தரிசிக்கச் சென்றார். அவரை வடக்கு வாசல் வழியாக அழைத்துச் சென்றபோது, "ஏன் கிழக்கு வாசல் வழியாக நுழையலாமே..' என்று அவர் அபிப்பிராயம் தெரிவித்தார். அதற்கு அவர்கள் தந்த பதில்தான் ஆச்சரியப்படுத்துகிறது - ""நீங்கள் கிழக்கு வாசல் வழியாக நுழையவும் முடியாது, வெளியேறவும் முடியாது. ஏனென்றால், அந்தப் பகுதி இந்தியாவைச் சேர்ந்ததல்ல, மியான்மர் நாட்டு எல்லைக்குள் இருக்கிறது..!''

மாநிலம் விட்டு மாநிலம் போகவே முன் அனுமதி பெற வேண்டும் எனும்போது, அடுத்த நாட்டு எல்லையில் மணிப்பூர் ஆளுநர் எப்படி நுழைய முடியும்?

"பொற்றாமரை' இலக்கிய அமைப் பை நிறுவி தமிழ்ப்பணி செய்து வந்தவர் அவர். மணிப்பூர் ஆளுநரானதால் அவரது இலக்கிய தாகம் அடங்கி விடுமா என்ன? இங்கிருந்து தமிழறிஞர்களை அழைத்துச் சென்று அங்கே நிகழ்ச்சி நடத்திவிட்டார் மேதகு ஆளுநர் இல. கணேசன்.

---------------------------------------------------

இந்த ஆண்டு சென்னைக் கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை (ஒன்ஸ் மோர்) கேட்க வேண்டும் போலிருக்கிறது. தொடங்கி வைத்துப் பேசிய மேதகு ஆளுநர் இல. கணேசனின் உரையைக் கட்டுரையாகப் பதிவு செய்ய வேண்டும். ராமர் கோயில் கட்டுவது என்பது மதத்தின் அடையாளமல்ல, தேசத்தை ஒருங்கிணைக்கும் நம்பிக்கையின் அடையாளம் என்பதைப் பல்வேறு ராமாயணங்களை மேற்கோள் காட்டி அவர் எடுத்துரைத்தது அழகோ அழகு.

"தோள் கண்டார் தோளே கண்டார்' என்கிற தலைப்பை எடுத்துக் கொண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் ஒரு சொற்சிலம்பம் ஆடினார் பாருங்கள்; ஆழமும் அழுத்தமுமாக இப்படியொரு உரையை நான் கேட்டதில்லை. "வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய' பாடலில் இருக்கும் இயற்பியலையும், வேதியியலையும் சுட்டிக் காட்டியது அற்புதத்திலும் அற்புதம்.

கம்பநாடர் உயிரோடிருந்து சுதா சேஷய்யனின் வெள்ளிக்கிழமை உரையைக் கேட்டிருக்க வேண்டும். அகமகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடியிருப்பார், தனது நோக்கம் நிறைவேறியது என்று!

-----------------------------------------------------------------

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிப் பேராசிரியர், காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரி முதல்வர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் உள்ளிட்ட பெரும் பொறுப்புகளை வகித்த முனைவர் ஜி. பாலன் என்னை சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். அவர் எழுதிய "தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்' நூல் சி.பா. ஆதித்தனார் விருது பெற்ற படைப்பு. அவர் எனக்குத் கையொப்பமிட்டுத் தந்த புத்தகம் "விடுதலை இயக்கத்தில் தமிழகம்'.

சுதந்திர இந்தியா தனது 76-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் தருணத்தில், தமிழகத்தின் பங்களிப்பு எத்தகையது என்பது குறித்து சில குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன். அதற்காக நான் "விடுதலை இயக்கத்தில் தமிழகம்' புத்தகத்தையும் மீள்பார்வை பார்த்துக் கொண்டிருந்தேன். விடுதலை இயக்கத்தில் சில குறிப்பிட்ட தியாகிகள் குறித்து முனைவர் பாலன் தந்திருக்கும் தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

"வீடுதோறும் மூவர்ணக் கொடி' என்கிற முழக்கத்தின் பின்னணியில், கொடி வரலாற்றுடன் தமிழகத்துக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்கும் தெரியாது. குடியாத்தம் நகராட்சிக்குத் தலைவராக இருந்த பிச்சனூர் கோட்டா ஆர். வெங்கடாசல செட்டியார் வீட்டில்தான் அண்ணல் காந்தியடிகள் அனுப்பிய ஐவர் குழு வந்து தங்கியிருந்து, கையால் நெய்யப்பட்ட கதர் துணியில் "18 அடி - 12 அடி' நீள அகலங்களைக் கொண்ட மூன்று வகையான தேசியக் கொடிகள் தயார் செய்து எடுத்துச் சென்றது. அதனடிப்படையில்தான் காந்தியடிகளின் வழிகாட்டுதலில் இந்திய தேசியக் கொடி உருவானது. முனைவர் ஜி. பாலன் தரும் தகவல் இது.

----------------------------------------------------------------------------------------

கவிஞர் ரவி சுப்பிரமணியன் அனுப்பித் தந்திருக்கும் கவிதை இது. கவிஞர் ஜெயநதி எழுதியது என்கிற குறிப்புடன்...

பாதுகாப்பு மதில்களை
பெரும்பாலும் பிளப்பவை
துணையாயிருக்கட்டுமென
நட்டு வைத்த
அரசமரங்களாகவே இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com