ஒப்பதும் மிக்கதும் இல்லா அகராதி! 

அகராதியின் மூலமாக மொழியைக் கற்பதுடன், மொழி வரலாற்றை அறியவும் முடியும்.
ஒப்பதும் மிக்கதும் இல்லா அகராதி! 

அகராதியின் மூலமாக மொழியைக் கற்பதுடன், மொழி வரலாற்றை அறியவும் முடியும். மொழியின் வளத்தைத் தெரிந்துகொள்ளலாம். மொழிவளத்தைக் காக்கும் நல்ல பதிவேடாகவும் அகராதி உள்ளது. 
ஏழு தொகுதிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 605 சொற்களைக் கொண்ட தமிழ்ப் பேரகராதியை சென்னைப் பல்கலைக்கழகம் 1924 முதல் 1939 வரையிலான காலப்பகுதியில் வெளியிட்டது. 
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட இத்தகைய பேரகராதி இந்திய மொழிகளிலேயே முதன் முதலாகத் தமிழில்தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பேரகராதியின் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு இதன் தலைமைப் பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளைக்கு இந்திய அரசு "ராவ் பகதூர்' என்ற உயர்ந்த பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
"தமிழுக்குப் பேரகராதி தேவை' என்னும் குரல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒலிக்கத் தொடங்கியதன் எதிரொலியாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஜி. யூ. போப் (1820-1908) தொகுத்து வைத்துள்ள சொற்களையும் உள்ளடக்கி வின்சுலோ அகராதியினைக் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கவும், புதுப்பிக்கப்பட்ட அவ்வகராதியினைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிடவும், அதன் பொருட்டு ஆகும் செலவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 10,500 நிதியுதவி அளிக்கவும் சர் பிரடெரிக் நிக்கல்சன் ஒருங்கிணைந்த சென்னை மாகாண அரசுக்கு 1905-இல் பரிந்துரை செய்தார்.  
ஜி.யூ. போப் தொகுத்த சொற்களைப் பெற்றுப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை முதலில் இருந்தது. அவர் 1908-இல் மறைந்ததும் அவர் தொகுத்துவைத்திருந்த சொற்களின் தொகுப்பை அவருடைய மகன் சென்னை மாகாண அரசுக்கு வழங்கினார். 1911-இல் ஜான் ஸ்கட்டர் சாண்ட்லெர் (1849-1934) இத்தொகுப்பை மூலமாகக் கொண்டும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்று முறையிலான புதிய ஆங்கில அகராதியினை (நியூ இங்கிலீஷ் டிக்ஷனரி ஆன் ஹிஸ்டாரிகல் பிரின்சிபல்ஸ்) முன்மாதிரியாகக் கொண்டும் தரமான தமிழ்ப் பேரகராதி உருவாக்கும் திட்டத்தை அரசுக்கு அளித்தார். 
அரசும் அதனை ஏற்றுக்கொண்டு  சாண்ட்லெர் தலைமையில் பாண்டித்துரைத் தேவர் உள்ளிட்ட பெருமக்களைக் கொண்ட ஐவர் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் அகராதிப்பணி நிகழ வேண்டும் எனவும் அதற்கு ஆகும் செலவு மதிப்பீடு 
ஐந்தாண்டுகளுக்கு மொத்தம் ரூ. 1,00,000 எனவும் அரசுக்குத் தெரிவித்தது. அதனை மாகாண அரசு ஏற்றுக்கொண்டு  இந்திய அரசிடம் நிதியுதவி கோரியது. அதற்கு இந்திய அரசும் இசைந்து 11-7-1912-இல் மாகாண அரசுக்குத் தெரிவித்தது. 
இதனையடுத்து 1913 ஜனவரியில் தமிழ்ப் பேரகராதித் திட்டத்தின் பணி மதுரையில் தொடங்கியது. எனினும் நிருவாக வசதியின் பொருட்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து, அத்திட்டம் 1915 மே மாதம் சென்னைக்கு வந்தது. அதன்பின் இத்திட்டம் முழுமையாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பிற்கு வந்தது. அதன்பின் தமிழ்ப் பேரகராதிக்குத் தெளிவான திட்டம் வகுக்கப்பெற்றது. 
தமிழ்ப் பேரகராதி தொடங்கிய நாள் முதல் 1921 டிசம்பர் வரை அதற்குப் பதிப்பாசிரியராக இருந்தவர் சாண்ட்லெர் ஆவார். 
அவருக்குப்பின் எஸ். அனவரத விநாயகம் பிள்ளை 1922 ஜனவரி முதல் 1923 டிசம்பர் வரை பதிப்பாசிரியராய் இருந்தார். இக்காலத்தில்தான் பேரகராதியின் 16 படிவங்கள் அச்சிடப்பெற்றன. அவரைத் தொடர்ந்து 1924 பிப்ரவரி முதல் 1926 அக்டோபர் வரை சி.பி. வேங்கடராம ஐயரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை முனைவர் பி. சா. 
சுப்பிரமணிய சாஸ்திரியும் பதிப்பாசிரியராய் இருந்தபோது முதல் தொகுதியின் மூன்று பகுதிகளும் இரண்டாம் தொகுதியின் முதல் பகுதியும் வெளியிடப்பெற்றன. 
1926 நவம்பர் முதல் எஸ். வையாபுரிப் பிள்ளை பதிப்பாசிரியராய்ப் பணியாற்றித் தமிழ்ப் பேரகராதியின் எஞ்சிய தொகுதிகளின் பகுதிகள் செவ்வனே வெளிவரவும் அகராதிப்பணி நிறைவுறவும் உதவினார். அன்றியும், அவர் தமிழ்ப் பேரகராதி ஆக்கத்திற்கு உறுதுணையாக அமையும் நூல்கள் பலவற்றை, குறிப்பாக நிகண்டுகளைத் தமிழ் அகராதி ஆதார நூற்றொகுதி என்னும் வரிசையில் பதிப்பித்து வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
1905-இல் தமிழ்ப் பேரகராதித் திட்டத்திற்கான முயற்சி தொடங்கப் பெற்றிருப்பினும் 1913 ஜனவரியில்தான் அத்திட்டம் செயல்படத் தொடங்கியது. அறிஞர் பெருமக்களின் கடுமையான உழைப்பினால் 8-10-1924-இல் 266 பக்கங்களில் 7,511 சொற்களைக் கொண்ட முதல் தொகுதியின் முதல் பகுதி வெளிவந்தது; 
20-3-1936-இல் 72 பக்கங்களில் 2,430 சொற்களைக் கொண்ட ஆறாம் தொகுதியின் இறுதிப் பகுதி வெளிவந்தது. 3,928 பக்கங்களில் அமைந்த இந்த ஆறு தொகுதிகளும் மொத்தம் 1,04,405 சொற்களைக் கொண்டுள்ளன. தமிழ்ப் பேரகராதி ஆக்கத்திற்கு அந்நாளில் ஆன செலவு மொத்தம் ரூ. 4,10,000 ஆகும். விடுபட்ட சொற்களை உள்ளடக்கிப் பின்னிணைப்புத் தொகுதி ஒன்றை வெளியிட சென்னைப் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. 
அப்பணி 1937-இல் தொடங்கியது. பின்னிணைப்புத் தொகுதியின் முதல் பகுதி 160 பக்கங்களில் 4,897 சொற்களைக் கொண்டு 16-7-1938-லும், இரண்டாம் பகுதி 160 பக்கங்களில் 5,150 சொற்களைக் கொண்டு 23-5-1939-லும், இறுதிப் பகுதி 103 பக்கங்களில் 3,310 சொற்களைக் கொண்டு 31-12-1939-லும் வெளிவந்தன. ஆக மொத்தம் 7,934 பக்கங்களில் 1,17,762 சொற்களைக் கொண்டு 8-10-1924 முதல் 31-12-1939 வரை 28 பகுதிகளை உடைய 7 தொகுதிகளாய் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (தமிழ்-ஆங்கிலம்-தமிழ்) வெளிவந்தது. 
அது 1956, 1982 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டது. மேலும் அது சுருக்கப்பெற்றுச் சுருக்க தமிழ்ப்பேரகராதி (கான்ûஸஸ் டமில் லெக்ஸிகன்) என்னும் பெயரில் செல்லம் ஐயரால் வெளியிடப்பட்டது.
இந்திய மொழிகளிலே சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியே முதலாவது; இன்றளவும் தமிழ் அகராதி உலகில் ஒப்பதும் மிக்கதும் இல்லாதது; பல்வேறு அகராதிகளுக்கும் ஆய்வுகளுக்கும் மூலமானது. காலத்திற்கேற்ப அதனைத் திருத்திப் புதுக்கிப் பெருக்கி வெளியிட வேண்டும் என்னும் குரல் பல்வேறு தளங்களில் ஒலிக்கத் தொடங்கியது. 
இதனையடுத்து இந்நோக்கில் 21-2-1970-இல் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றம் அப்போதைய தமிழ்த்துறைத் தலைவர் மு. வரதராசனார் தலைமையில் பெரும்புலவர் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு வாரந்தோறும் கூடி தமிழ்ப் பேரகராதியை செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவந்தது. 
மு. வ. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையடுத்து தமிழ்த்துறைத் தலைவர் ந. சஞ்சீவி தலைமையில் குழு பணியைத் தொடர்ந்தது. 2-4-1970 முதல் 22-4-1978 வரை அக்குழு 201 முறை கூடி அகரத்தில் தொடங்கும் சொற்களுக்கான திருத்திய பதிப்பை (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) உருவாக்கியது. 290 பக்கங்களைக் கொண்ட அப்பதிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் 1980-இல் வெளியிட்டது. 
தமிழ்ப் பேரகராதி வெளிவந்து 82 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்தப் பின்னணியில்தான் சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பேரகராதியைத் திருத்தியும் புதுமைப்படுத்தியும் உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தது. இதனை தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழு ஏற்று நிதியுதவி அளித்துள்ளது. இந்தப் பேரகராதித் திட்டத்தின் தலைவர் பேராசிரியர் வ. ஜெயதேவன். 
தமிழ்ப் பேரகராதியின் "திருத்திய விரிவுப் பதிப்பு தமிழ்-தமிழ்-ஆங்கிலம்' முதல் தொகுதியாக "அ முதல் அபௌருஷேயம்' வரை 738 பக்கங்களைக் கொண்டு தமிழ்ப்பேரகராதி வெளிவந்துள்ளது. இவ்வகராதி முழுமையடைவது தமிழுலகின்  தேவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com