மணிக்கொடி பிறந்தது

சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை சிறைசென்றவர் ஸ்டாலின் சீனிவாசன்.
மணிக்கொடி பிறந்தது

சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை சிறைசென்றவர் ஸ்டாலின் சீனிவாசன். அவருக்கு இலக்கியத் துறையில் கிளர்ச்சியும் புரட்சியும் செய்யும் பத்திரிகை ஒன்றைத் தொடங்க விருப்பம் உண்டாயிற்று. தன்னுடன் தமிழறிஞர்களான வ. ரா. எனும் வ. ராமசாமியையும், டி.எஸ். சொக்கலிங்கத்தையும் இணைத்துக் கொண்டார். மூவரும் சேர்ந்து, லண்டன் ஸண்டே அப்சர்வரைப் போல ஞாயிறுதோறும் வெளிவரும் ஓர் இலக்கிய இதழைத் தொடங்க முடிவெடுத்தனர்.

ஒருநாள் மூவரும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எதிரில் கடற்கரை மணலில் அமர்ந்து பத்திரிகை தொடங்குவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மாலை ஆறு மணி. கோட்டையின் மீது கம்பத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கொடி வழக்கப்படி ஆறு மணிக்கு இறக்கப்பட்டது.

அதனைக் கண்டதும் டி.எஸ். சொக்கலிங்கம், "அந்நிய ஆட்சிக்கொடி இறங்கியது; கம்பத்தின் மீது நமது கொடி ஏறும் வேளை வந்துவிட்டது' என்று கூறினார். 

பத்திரிகைக்கு பாரதக் கொடியின் பெயரையே வைக்க வேண்டும் என மூவரும் தீர்மானித்தனர்.

ஸ்டாலின் சீனிவாசன்  கம்பன் கவிதைகளில் திளைத்தவர். அவர் கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் இராம, இலக்குவ, விசுவாமித்திரர் மூவரும் மிதிலை நகருள் புகும்போது வரும் "மையறு மலரின் நீங்கி யான் செய் மாதவத்தின் வந்து செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள் என்னும் கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண் ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா' என்ற பாடலைக் கூறினார். உடனே வ. ரா. கம்பர் மட்டுமல்ல, மகாகவி பாரதியாரும் "தாயின் மணிக்கொடி பாரீர்' என்றுதான் பாடியிருக்கிறார் என்று கூறினார். 

அந்த மாலைப்பொழுதில் கடற்கரை மணலில் அவர்கள் தொடங்கப் போகும் புதிய பத்திரிகைக்கு "மணிக்கொடி' என்ற பெயர் பிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com