இந்த வாரம் கலாரசிகன் - (11-12-2022)

பாரதியாரை அகற்றி நிறுத்திவிட்டு, தமிழையோ, தமிழ்ச் சமூகத்தையோ நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்கு வியாபித்திருப்பது அவரது ஆளுமை.
இந்த வாரம் கலாரசிகன் - (11-12-2022)

பாரதியாரை அகற்றி நிறுத்திவிட்டு, தமிழையோ, தமிழ்ச் சமூகத்தையோ நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்கு வியாபித்திருப்பது அவரது ஆளுமை. பாரதியின் மறைவுக்குப் பிறகு பல்வேறு ஆய்வாளர்கள் மேற்கொண்ட பெரும் பணியால்தான் பாரதியாரின் ஆளுமை குறித்து நாம் ஓரளவாவது அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

தோழர் ஜீவாவும், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யும் பாரதியாரை மக்கள் கவிஞராகப் பொதுவெளியில் நிலைநிறுத்துவதில் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். ஆசிரியர் கல்கியின் பெரும் முயற்சியின் விளைவாக எட்டயபுரத்தில் எழுந்து நிற்கிறது பாரதியார் மணிமண்டபம். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் இருவரின் உதவியால்தான் பாரதியாரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அனைவரும் படித்து மகிழும் வாய்ப்புக் கிட்டியது. அதையெல்லாம் பாரதியாரின் பிறந்த தினமான இன்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

பாரதி ஆய்வாளர்களில் தொ.மு.சி. ரகுநாதன் முன்னிலை வகிக்கிறார். அவரது "பாரதி: காலமும் கருத்தும்' இப்போதல்ல, எப்போதைக்கும் பாரதி ஆய்வாளர்களின் கையேடாகத் திகழும் முக்கியமான ஆய்வு. எத்தனை எத்தனையோ பாரதி அன்பர்கள், அந்த மகாகவியின் எண்ணிலடங்காத கருத்துகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.

அவரது படைப்புகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தந்த பெருமைக்குரியவர்கள் என்று பாரதியாரின் சகோதரர் விசுவநாத ஐயர், பாரதியாரால் "தம்பி' என்று உரிமையுடன் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பர், பெரியசாமி தூரன், சீனி. விசுவநாதன், இளசை மணியன், பெ.சு. மணி, ஆ.இரா. வேங்கடாசலபதி, ய. மணிகண்டன் ஆகிய எட்டு பேரைக் குறிப்பிட வேண்டும்.

சீனி. விசுவநாதனுக்கும், இளசை மணியனுக்கும் "தினமணி'யின் மகாகவி பாரதியார் விருது வழங்கி கெளரவிக்க முடிந்தது. கொள்ளை நோய்த்தொற்று பரவி விருது வழங்குதல் தடைபட்டதால் பெ.சு. மணியை கெளரவிக்க முடியாமல் போய்விட்டது. அது ஒரு குறையாகத்தான் இருக்கிறது.

இப்போது நம்மிடையே இருக்கும் தலைசிறந்த பாரதி ஆய்வாளர்கள் ஆ.இரா. வேங்கடாசலபதியும், ய. மணிகண்டனும். இருவரின் உழைப்பும், ஆய்வும் அளப்பரியவை. ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு "தினமணி' மகாகவி பாரதியார் விருது வழங்கி கெளரவிக்கும் வேளையில், ஈரோட்டில் தோழர் ஸ்டாலின் குணசேகரன் ய. மணிகண்டனுக்கு பாரதி விருது வழங்கி கெளரவிக்கிறார். இருவருமே கெளரவிக்கப்படுகிறார்கள் என்பதில் நம்மை எல்லாம்விட பாரதியார்தான் அதிக புளகாங்கிதம்  அடைவார்.

ஆ.இரா. வேங்கடாசலபதியைக் குறித்து இன்னொரு செய்தியையும் குறிப்பிட விரும்புகிறேன். வாஞ்சி மணியாச்சியில் தியாகி வாஞ்சிநாதன் அன்றைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஆஷ் துரையின் வாரிசுகளைத் தேடி ஸ்காட்லாந்து சென்று அவர்களை சந்தித்துத் தகவல் பதிவு செய்திருக்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி. அவர் எந்த அளவுக்கு முனைப்பாக ஆய்வு நடத்துவார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு!

உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தின் இயக்குநர்களில் ஒருவராகப் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் எனக்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் தெரியும். அவர்தான் எனக்கு உ.வே. சாமிநாதையர் நூலகம் "கம்பராமாயணம்' உ.வே.சா. பதிப்பை வெளியிட்டிருப்பது குறித்த தகவல் தந்தவர். நான் ஆர்வம் காட்டியபோது, அந்தத் தொகுப்புகளை உடனடியாக எனக்கு அனுப்பியும் வைத்து விட்டார். 

பேரா. அரங்க. இராமலிங்கம் சொல்லித்தான் "தமிழ்த்தாத்தா' உ.வே. சாமிநாதையர் "அகநானூறு', "தேவாரம்', "கம்பராமாயணம்' ஆகிய மூன்றுக்கும் உரை எழுதிப் பதிப்பிக்கப் பெருமுயற்சி எடுத்தார் என்பதையும், அந்தப் பணிகளை நிறைவு செய்யக் காலம் இடம் தரவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கம்பராமாயண ஓலைச்சுவடிகள் கிடைத்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நபர்களால் எழுதி சேகரித்து வைக்கப்பட்டவை. அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கம்பராமாயண ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. 

உ.வே.சா.வும் தனது காலத்தில் கம்பராமாயண ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். ஏழு காண்டங்களும் முழுமையாகக் கொண்ட ஓலைச்சுவடி அவரது சேகரிப்பில் இருந்திருக்கிறது.

உ.வே.சா.வுக்கு ஒரு  பழக்கம் இருந்ததை அவரது தலைமை மாணாக்கர் கி.வா. ஜகந்நாதன் குறிப்பிட்டிருக்கிறார். "எந்தப் புஸ்தகம் படித்தாலும் கையில் பென்சிலோடுதான் படிப்பார்கள். படித்துக் கொண்டிருக்கும்போதே ஆங்காங்கே அடையாளம் செய்வார்கள். சில குறிப்புகளைப் பக்கத்தின் ஓரத்தில் எழுதுவார்கள். விசேஷமாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய புஸ்தகமானால், ஒவ்வொரு தாளுக்குப் பின்னும் வெறும் காகிதம் ஒன்று வைத்து புஸ்தகத்தை பைண்டு செய்யச் செய்து, அந்த வெறுந்தாள்களில் குறிப்புகளை எழுதுவார்கள்' என்கிறார் கி.வா.ஜ. கம்பராமாயணம் குறித்த உ.வே.சா.வின் குறிப்புகள் சில கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அவர் உரை எழுதவில்லை. அவரது குறிப்புகள், பாடபேத ஆய்வுகள், உரை விளக்கங்கள் ஆகியவற்றை ஒழுங்கு செய்து பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தியின் மதிப்புரையுடன் வெளியிடப்பட்டிருக்கிறது, "கம்பராமாயணம்' உ.வே.சா. பதிப்பு. அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு உ.வே.சா.வின் குறிப்புகள் பேருதவியாக இருக்கும்.

கட்செவி அஞ்சலில் எனக்கு அனுப்பப்பட்டிருந்த கவிதை இது. எழுதியவர் கவிஞர் வித்யா மனோகர்.

ஆயிரம் வார்த்தைகள் அறிந்தும்
மெளனித்திருக்கிறேன்
வலிமொழி
விளம்பல்
அரிது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com