வானம் வாய்க்க மண்வளம் பெருகுக

நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்தி, நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் உற்றுநோக்கி இலக்கணம் வழுவாது வாழ்ந்த சமூகம் நம் தமிழ்ச்சமூகம்.
வானம் வாய்க்க மண்வளம் பெருகுக


நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்தி, நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் உற்றுநோக்கி இலக்கணம் வழுவாது வாழ்ந்த சமூகம் நம் தமிழ்ச்சமூகம். அனைத்து நிலத்திற்கும் பொதுவானது மழை. மழைபெய்யும் காலத்தைக் கார்காலம் என்று அறுதியிட்டுக் கூறிய தமிழர் சிந்தனை வியக்கத்தக்கது. முல்லைப்பாட்டு என்று தனிப்பாடல் எழுதும் அளவிற்கு மழை மக்கள் வாழ்க்கையுடன் தொடர்பில் இருந்தது.


சீரான தட்பவெப்பம், ஆறுகள் தந்த நீர்வளம் எனத் தமிழகம் வளம்நிறை திருநாடாக விளங்கியதை,


வான் பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி
(பட்டினப்பாலை 5, 6)


என்ற பாடல்வரிகளால் அறியலாம்.
பெய்ய வேண்டிய காலத்தில் மழை பொழிந்து ஒருவேலி பரப்பு வயலில் ஆயிரம் கலம் நெல் விளைவதாகுக எனக் கல்லாதனார் எனும் புலவர் பொறையாற்றுக்கிழானை வாழ்த்துகிறார்.


துளிபதன் அறிந்து பொழிய
வேலி ஆயிரம் விளைக நின் வயலே
(புறம்391:20,21)

இப்போதைய வழக்கில் ஒரு வேலி என்பது ஏழு ஏக்கரைக் குறிப்பதாகும். இன்றைய விளைச்சலுடன் ஒப்பிடும்போது இது சாதனை விளைச்சலாகும்.


சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கும்
(புறம்391:20,21)

காவிரி புரத்தலால் நீர்வளம் மிகுந்து இச்சாதனையைப் படைத்தனர் என்று பொருநராற்றுப்படை கூறுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களின் சில இடங்களில் நிலங்களின் வறட்சிநிலை சுட்டப்பட்டாலும் மழைப்பொழிவும் மழை வளமும் பெரிதும் காட்சிப்படுத்தப்படுகின்றன. புது வெள்ளமும், காட்டாறும் காட்டப் பெற்றன. பருவத்தே மாறாத மழைப் பொழிவால் ஆண்டின் குறிப்பிட்ட நாளில் புதுப்புனலாடுதல் ஒரு முக்கிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.

நீரின்று அமையாது யாக்கைக்கு எல்லாம்
(புறம் 18:18)

என்று நீரின் தேவையைக் குடபுலவியனார் வலியுறுத்துகிறார். அதே போல்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
(புறம் 18:14)

என்பதையும் அறியலாம்.
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது (குறள் 16)
மழை அதாவது நீரின் தேவையை உணர்ந்ததால்
மாரி வாய்க்க வளநனி சிறக்க (ஐங்குறு.10.2)
என்று வேண்டுகிறாள் ஐங்குறுநூற்றுத் தலைவி.
மழை வேண்டி நிற்கும் மக்களை,
அணங்கொடு நின்றது மலை வான் கொள்கஎனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார் (நற்.165.3-4)
என்ற பாவடிகள் காட்டுகின்றன.

மலையை மழை வந்து சூழ்வதாகுக என்று மிகுந்த பலியைத் தூவி வணங்குதலோடு அம்மழை மிகுந்து பெய்தபோது அம்மழையுடன் மேகம் மேலே செல்வதாகுக என்று தெய்வம் தொழும் மக்களையும் இலக்கியத்தில் காண முடிகிறது. (புறம்1.43.1-3)

வறண்டு கிடந்த புழுதிநிலம் வளம்பெறவும், நீர் நிலைகள் உயரவும், விளைநிலங்களில் பயிர்கள் செழிக்கவும் பொழிந்த மழையால் நீர்நிலைகள் நிரம்பியதை,

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
(புறம்142.1)

என்ற புறப்பாடல் அடி விளக்குகிறது.

பருவத்தே பெய்த மழையால் உறையூரில் நெற்குவியல்களில் மிகு விளைச்சல் காட்சிப்படுத்தப்படுகிறது.

மழை தொழில் உதவ மாதிரங் கொழிக்க
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன் எதிர்பு நந்த
நோய் இகந்து நோக்கு விளங்க
(மதுரைக் காஞ்சி. 10-14)

என்ற பாடலடிகள் மூலம் தேவையின் பொழுது மழை பொழிந்ததையும் அதனால் விளை நிலங்கள், மரங்கள் ஆகியவை உயிர்களுக்குப் பயன் தருதலை மேற்கொண்டு தழைத்ததையும், மக்கள் பசியும் பிணியும் நீங்கி வளமுடன் வாழ்ந்ததையும் அறிய முடிகிறது.

மண் வளத்தின் தன்மையைப் பாதுகாப்பதில் மழைவளத்தின் பங்கு அளவுகோலாகிறது.

வானம் வாய்க்க மண்வளம் பெருகுக
(மணி 19.151)

என்பதையும் நாம் அறியலாம்.

நிலம் பயம்பொழிய (பதி.69.13)

மண்ணின் வளம் அமைதல் வேண்டும். நிலமும் நீரும் உடலும் உயிரும் போன்றது.

அக்காலத்தில் ஆட்டுரல் மாவாட்ட மட்டும் பயன்படவில்லை. மழையை அளக்க உதவும் மழைமானியாக அது பயன்பட்டிருக்கிறது. முற்றத்திலும், கொல்லைப்பகுதியிலும் போடப்பட்டிருக்கும் ஆட்டுரலின் குழியில் தேங்கி நிற்கும் நீரின் அளவை விரலால் அளந்தனர். தற்போது நாம் கூறும் மில்லி மீட்டர் அளவு அப்போது பதின்ம எனப்பட்டது. இரு பதின்ம அளவு என்பது ஒரு உழவுக்கான நீராகக் கருதப்பட்டது.

முற்காலத் தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் தொடர்குள அமைப்பு முறை (செயின் டேங்க்ஸ்) உருவாக்கப்பட்டதை நாம் வரலாற்றுவழி உணருகிறோம். இதனை வாழிடத்தின் அடிப்படையை நன்கு அறிந்தால் மட்டுமே உருவாக்க முடியும்.

அனைத்துக் குளங்களும் கால்வாய்கள் வழியாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுத் தமிழகத்தில் எந்த இடத்தில் மழை பெய்தாலும் அதிகப்படியான மழைநீர் இந்தக் கால்வாய்களின் வழியாகப் பாய்ந்து மழை குறைவாக உள்ள மூலைமுடுக்கெல்லாம் சென்றடையும். எனவே எல்லா நிலங்களும் எல்லாக் காலங்களிலும் நீர்வளம் பெற்று விளங்கியது. இந்தச் செம்மாந்த அமைப்பை ஆராய்ந்து நாம் வியந்து நிற்கிறோம். இது இட அமைப்பியலையும் இயற்கையின் சக்திகளையும் கொண்டு நீரியல் கட்டடப் பொறியியலில் நிகழ்த்தப்பட்ட அதிசயம் என்றே கூறலாம்.

சொல்லோவியமாம் சிலம்பு திங்கள் போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. வானில் இயற்கைக்கு மாறாக நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப நாட்டின் இயற்கை வளங்களிலும் மாற்றம் நிகழும் என்று முன்னோர் அறிந்திருந்தனர்.

மழை பெய்வதற்குரிய கோள்நிலை நன்கு உணரப்பட்டு இருந்தது. முதுவேனிலுக்குப் பின்வரும் கார்காலம் மழைக்கு ஏதுவான கார்காலம் என்று பரிபாடல் கூறுகிறது. வெள்ளி என்னும் சுக்கிரன் வடப்பக்கத்தே தாழ்ந்தால் மழை பெய்யும். தெற்கே தாழ்ந்தால் மழை பெய்யாது என்பதைக் கூறினர்.
உலகிற்கு நற்பயன் செய்யும் வெள்ளியென்னும் கோள் மழைக்குக் காரணமாகிய ஏனைய தாய்க் கோள்களுடன் நின்று முகில்கள் நிரம்பி வான்மழை பெய்ததை,

பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
விசும்பு மெய் அகலப் பெயல்புரவி எதிர
(ப.பத்து 69.14,15)

என்ற அடிகள் கூறுகின்றன. விண்மீன்களும் கோள்களும் தத்தமக்குரிய இடத்தில் நிற்க மழை தப்பாது என்பது தமிழர் கண்ட வானிலை அறிவு.
மழையானது பொழியும் இடத்தை விட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,

உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
(அகம்141.5-6)

என்று உழவுத் தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் உழவே முதன்மைத் தொழிலாகும். அவ்வுழவுக்கு அடிப்படையான மழை புவி வெப்பம் காரணமாக வேறிடம் செல்கிறது. புவி வெப்பமடைதல் அதனூடாக அமைந்த பருவகால மாற்றம் என்பது இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் நிகழ்கிறது. அன்று இயற்கை மனிதனுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால், இன்று இயற்கை நமக்குப் பெரும் சவாலாக உள்ளது.

மாந்த உலகம் பருவகால எதிர்பாராத சீற்றங்களைத் தவிர்க்க உடனடியாகச் செய்ய வேண்டியது பழந்தமிழ் இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள வானியல், சூழலியல், பொது அறிவியல் அறிவுகளை ஆய்ந்து உலகம் முழுவதும் நடமுறைபடுத்த வேண்டியதே. இதுவே இன்றைய முதல் கடமையும் தேவையும் ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com