இந்த வாரம் கலாரசிகன் - (02-01-2022)

இந்த வாரம் கலாரசிகன் - (02-01-2022)

கொள்ளை நோய்த் தொற்றின் ஒமைக்ரான் பரவல் அச்சத்துடன் தொடங்கி இருக்கிறது புத்தாண்டு. 6-ஆம் தேதி தொடங்கவிருந்த புத்தகக்காட்சி, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது அதைவிடப் பேரதிர்ச்சி.

கொள்ளை நோய்த் தொற்றின் ஒமைக்ரான் பரவல் அச்சத்துடன் தொடங்கி இருக்கிறது புத்தாண்டு. 6-ஆம் தேதி தொடங்கவிருந்த புத்தகக்காட்சி, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது அதைவிடப் பேரதிர்ச்சி.

ஆண்டுக்கு ஒருமுறை, ஒரே இடத்தில் அனைத்துப் பதிப்பாளர்களின் புத்தகங்களையும் வாங்கிச் செல்லும் வாய்ப்பு இந்த ஆண்டு கைநழுவி இருக்கிறது. புத்தகக்காட்சிக்கு வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகப் பல லட்சங்களை முடக்கி இருக்கும் பெரிய பதிப்பகங்களும், சில லட்சங்களை மிகுந்த சிரமத்துக்கிடையில் புரட்டி புத்தகங்களை அச்சடித்திருக்கும் சிறு பதிப்பாளர்களும் பேரிழப்பை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

வாசகர்களின் இழப்பும், படைப்பாளர்களின் வேதனையும் குறைந்ததா என்ன? இன்னின்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று பட்டியலிட்டு வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்கள், புத்தகக்காட்சிக்காக சென்னைப் பயணத்தைக்கூட முன்கூட்டியே திட்டமிடுவது வழக்கம். தன்னுடைய சிந்தனையையும், உழைப்பையும் ஒருங்கிணைத்து, இரவு-பகல் கண்விழித்து பக்கம் பக்கமாக எழுதிப் புத்தக வடிவம் பெற்ற நிலையில், அதைப் புத்தகக் காட்சியில் வெளியிட முடியவில்லை, விற்பனைக்குக் கொண்டுவர முடியவில்லை எனும்போது எழுத்தாளர்கள் அடையும் மனச்சோர்வும், வேதனையும் வார்த்தையில் வடிக்கக்கூடியதல்ல.

பதிப்பாளர்கள் சலிப்படைவதும், நலிவடைவதும் சமுதாயத்துக்கு நல்லதல்ல. அவர்கள் நன்றாக இருந்தால்தான் படைப்புகள் வெளிவரும். படைப்புகள் வெளிவரும்போதுதான் பொதுவெளியில் பேசுபொருளாகும். சமுதாய சிந்தனை மேலோங்கும். புதிய பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக அமையும்.

தமிழக அரசு குறைந்தபட்சம் ஓர் உதவி செய்ய முடியும். காலதாமதமில்லாமல் நூலகங்களுக்கான ஆணையைப் பிறப்பித்து, சோர்ந்துபோன பதிப்பாளர்களுக்குச் சற்று ஆறுதல் வழங்கலாம். புத்தகப் பிரியரான முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரனும், எழுத்தாளராகத் தனிமுத்திரை பதித்திருக்கும் தலைமைச் செயலர் வெ.இறையன்பும் அதற்கு வழிகோலுவார்கள் என்று நம்பலாம். பொறுப்பான பதவிகளில் அவர்கள் இருப்பது எழுத்துலகம் பெற்றிருக்கும் பெரும் பேறு.


புத்தகத் திருவிழா தள்ளிப்போடப்பட்டிருப்பதால், "இந்த வாரம்' தொகுப்பின் வெளியீட்டையும் சற்று தள்ளிப்போட வேண்டியிருக்கும் போலிருக்கிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் முன்பதிவுத் திட்டத்திற்குக் கிடைத்திருக்கும் ஆதரவில், நான் உண்மையிலேயே திக்கு முக்காடிப் போயிருக்கிறேன்.

புதுவை ஜெயராம் ஹோட்டல் மேலாளர் பெரியவர் சுந்தர லெட்சுமிநாராயணன் போன்ற பலர், பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு முன்பணம் அனுப்பி இருக்கிறார்கள். "நண்பர்களுக்குப் பரிசளிப்பதற்காக' என்று அவர்கள் தெரிவித்தபோது, எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியை விவரிக்க இயலாது. "ராசி' இராமலிங்கம் போன்ற வாசகர்கள் "இந்த வாரம்' தொகுப்பு குறித்த விளம்பரத்தைத் துண்டுப் பிரசுரமாக புதுச்சேரி புத்தகக்காட்சியில் விநியோகித்திருக்கிறார்கள். நாத் தழுதழுக்க "நன்றி' என்கிற மூன்று எழுத்து சொல்லைத் தவிர நான் அவர்களுக்கு வேறென்ன கூறமுடியும்?

புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது இரா.செல்வம் எழுதிய "பனையடி' நாவல். யார் இவர் என்று பின் அட்டையைப் பார்த்தபோதுதான், "அட, நமது "தினமணி'யின் நடுப்பக்கக் கட்டுரையாளர்' என்பது தெரிந்தது. எனக்கு நல்ல நண்பர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

மிகவும் பின்தங்கிய கிராமமானஅய்யப்ப நாயக்கன்பேட்டையில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த "தமிழ்' என்கிற இளைஞனின் லட்சியப் பயணம்தான் கதைக் கரு. முதல் பகுதி தந்தையின் கனவு, பின்பகுதி மகனின் இலக்கு என கதை நகர்கிறது. அந்த வறண்ட கிராமத்திலிருந்து, சாமானியன் ஒருவன் எப்படி இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றிபெற்று, அரசின் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அதிகாரியாக உயர்கிறான் என்பதுதான் கதையின் சாரம்.

இரா.செல்வத்தின் வாழ்க்கைப் பயணம்தான் புனைவில் புத்தாடை அணிந்து பவனி வருகிறது. கிராமத்து நாள்கள், கல்லூரி நாள்கள், வேளாண் அலுவலராக அரசுப் பணியில் சேர்ந்து, விடா முயற்சியால் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக அவர் உயர்ந்த வரலாறு, சுவாரசியமான சம்பவங்களாலும், உருவகப்படுத்தப்பட்ட சில புனைவுக் கதாபாத்திரங்களாலும் நாவலாகப் பதிவிடப்பட்டிருக்கிறது.

நேர்த்தியாகக் கதை சொல்லும் ஆற்றல் இரா.செல்வத்துக்குக் கைவரப் பெற்றிருக்கிறது என்பது உண்மை. ஆனால், அதற்கு அவர் ஏன் தனது வரலாற்றைத் தேர்ந்தெடுத்தார் என்பதில்தான் சற்று நெருடல். அவரது அயராத உழைப்பும், இலக்கு நிர்ணயித்த பயணமும், அதன் வெற்றியும் இளைய சமுதாயத்தைச் சென்றடைந்து அவர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டியது அவசியம். இன்றைய இளைஞர்கள் சுயமுன்னேற்றப் பதிவுகளைப் படிப்பதுபோல, புனைவுகளைப் படிப்பதில்லை என்பதை அவர் யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

அரியலூர் மாவட்டம் அய்யப்ப நாயக்கன்பேட்டையில் பிறந்து, வேளாண்மை முதுகலைப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகப் பட்டமும் பெற்றவர் இரா.செல்வம். தற்போது தோல் பொருள்கள் ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இரா.செல்வம் ஹிமாசலப் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தலாய் லாமாவின் அன்பைப் பெற்றவர். அவருக்கு நெருக்கமானவர். நல்ல எழுத்தாளர். சிந்தனையாளர்.

புனைவு எழுத்தாளராக "பனையடி' நாவல் மூலமான அவரது அறிமுகத்துக்கு வாழ்த்துகள். அவர் அந்த முயற்சியில் வெற்றியும் அடைந்திருக்கிறார். அத்துடன் நின்றுவிடலாகாது. தனது எழுத்தின் பயணத்தை அவர் தன் வரலாறாகப் பதிவு செய்தால்தான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் போய்ச் சேரும். இது எனது கனிவான கோரிக்கை.


புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்த "பெருமழையில் நனையாத சிறு குடை'
கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.
தேர்ச்சி
அறிக்கையில்
கைகள் நடுநடுங்கக்
கைநாட்டு வைத்த அம்மாதான்
தெருவையே வியக்க வைக்கிறாள்
தன் கோலங்களால்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com