இந்த வாரம் கலாரசிகன் - (9-01-2022)

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த படைப்பாளி ஒருவரின் மறைவு அதிகம் பேசப்படாமல் கடந்து போயிருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
இந்த வாரம் கலாரசிகன் - (9-01-2022)


இந்தியத் திரையுலகின் தலைசிறந்த படைப்பாளி ஒருவரின் மறைவு அதிகம் பேசப்படாமல் கடந்து போயிருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. கே.விஸ்வநாத்துக்கும், கே.பாலசந்தருக்கும் முன்னால் "தாதா சாஹேப் பால்கே' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டிய முன்னோடி இயக்குநரின் மறைவுக்குக் கேரள மாநிலமும் உரிய மரியாதை செலுத்தவில்லை என்பதுதான் வேதனை.

தனது 94-ஆவது வயதில் முதுமை காரணமாக கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி மறைந்த இயக்குநர் சேதுமாதவனின் திரையுலக பிரவேசம் ஜெமினியின் "சந்திரலேகா' படத்தில் தொடங்கியது. கே.ராம்நாத், எல்.வி.பிரசாத், டி.ஆர். சுந்தரம் போன்ற ஜாம்பவான்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவங்களுடன் மலையாளத் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்த சேதுமாதவன் படைத்த பல திரைக் காவியங்கள் இந்திய சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை.

"ஞான சுந்தரி'யில் தொடங்கி, அவர் இயக்கிய "கண்ணும் கரளும்', "அனுபவங்கள் பாளிச்சகள்', "கரகாணாக் கடல்', "ஓடையில் நிந்நு' (தமிழில்: பாபு), அடிமகள் (தமிழில்: நிழல் நிஜமாகிறது), கடல் பாலம், அர நாழிக நேரம் என்று தொடர்ந்து பல மலையாள வெற்றிப்படங்களை மட்டுமல்ல வித்தியாசமான கருவைப் படமாக்கத் துணிந்த இயக்குநராகவும் வலம் வந்தவர் சேதுமாதவன். அதுவரை யாருமே நினைத்துப் பார்க்காத கதைக் கரு "சட்டக்காரி'.  ஆங்கிலோ இந்திய சமூகத்தின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டும் அந்தத் திரைப்படம் "ஜூலி' என்ற பெயரில் ஹிந்தியில் வெளிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவும் சேதுமாதவனை நிமிர்ந்து பார்த்தது.

எல்லோரும் கமல்ஹாசனை பாலசந்தரின் அறிமுகம் என்று நினைக்கிறார்கள். அவரை "கன்யாகுமாரி' மலையாளத் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சேதுமாதவன்.  அதுமட்டுமா? அவர் தமிழ் சினிமாவுக்கு முதன்முதலாகக் குடியரசுத் தலைவரின் "ஸ்வர்ண கமலம்' விருதை "மறுபக்கம்' திரைப்படத்துக்காகப் பெற்றுத்தந்த பெருமைக்குரியவரும்கூட.

நாவல்களை வெற்றிகரமாகத் திரைப்படமாக்கிய அவரது வித்தகத்தைப் பார்த்து, கடந்த நூற்றாண்டு இந்தியத் திரையுலகம் வியந்திருக்கிறது. பி.கேசவ தேவின் "ஓடையில் நிந்நு', தகழி சிவசங்கரன் பிள்ளையின் "அனுபவங்கள் பாளிச்சகள்', பம்மனின் "அடிமகள்',  பாறப்புறத்தின் "அர நாழிக நேரம்', எம்.டி. வாசுதேவ நாயரின் "ஓப்போள்' என்று பல பிரபல மலையாள நாவலாசிரியர்களின் புனைவுகள் சேதுமாதவனால் திரைவடிவம் கண்டன.

இந்திரா பார்த்தசாரதியின்"உச்சிவெயில்' நாவல் அவரது கலைவண்ணத்தில் திரைவடிவம் பெற்றதால், முதன்முதலில் தமிழுக்கான "ஸ்வர்ண கமலம்' விருது கிடைத்தது. யாரையும் பழித்துக் கூறுவதற்காக இதைக் கூறவில்லை. உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் திரையுலகுக்குப் பல தலைசிறந்த படைப்புகளை உருவாக்கித் தந்த அந்த மாமேதைக்கு நான் ஒருவிதத்தில் ஏகலைவன் பாணி சீடன். அவரது பல திரைப்படங்களைப் பார்த்தும், திரைப்பட விளம்பர சுவரொட்டிகளை எழுத்துக்கூட்டிப் படித்தும் நான் மலையாளம் கற்றுக் கொண்டதை எப்படி மறந்துவிட முடியும்?
 

----------------------------------------


சென்ற வாரம் ஒரு நாள் மயிலாப்பூர் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சட்டென "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாஸனின் நினைவு வந்தது. அவரை சந்தித்துப் பல மாதங்களாகிவிட்டதே, ஒரு எட்டு பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தேன்.

வழக்கம்போல, புத்தகப் பொக்கிஷக் குவியலுக்கு நடுவே இளமைக் கோலத்தில் காட்சி தந்தார். நடைப்பயிற்சிக்குத் தயாராக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. 

"இந்தப் புத்தகத்தைப் பாருங்கள்' என்று ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார். 

அப்போது நானடைந்த பூரிப்பை எழுத்தில் வடிப்பது இயலாது. ரசிகமணியின் ராமாயணம் என்று நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பார்த்ததில்லை எனும்போது படிப்பது எப்படி?  "ரசிகமணி' டி.கே.சி.யின் "கம்பர் தரும் ராமாயணம்' புதுப்பொலிவுடன் "அல்லயன்ஸ்' நிறுவனத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. 1953-இல் "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரால், திருக்குற்றாலத்திலிருந்த அவரது பொதிகைமலைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், ஏறத்தாழ 67 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பு கண்டிருக்கிறது.

1953 அக்டோபர் 31-ஆம் தேதி திருக்குற்றாலத்தில் அன்றைய முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி வெளியிட்டபோது, பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்திய புத்தகம் அது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

கம்ப காதையில் இருக்கும் பத்தாயிரம் பாடல்களில் பல ஆயிரம் பாடல்கள் கம்பருடையவை அல்ல என்று சந்தத்தின் அடிப்படையில் "ரசிகமணி' அகற்ற முற்பட்டபோது எதிர்ப்பு எழத்தானே செய்யும்? "கம்பனில் கைவைக்க டி.கே.சி. யார்? என்று கோபத்தில் கொந்தளித்தார் பாரதிதாசன் என்பார்கள். கம்பனில் ஈர்ப்பு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் கச்சை கட்டிக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

"இதுவும் கடந்து போகும்' என்று பகவான் ரமணர் சொன்னதுபோல, அவையெல்லாம் கடந்து போயின. கம்பராமாயணமும் இருக்கிறது; "'ரசிகமணி' டி.கே.சி.யின் "கம்பர் தரும் ராமாயணமும்' மறுபதிப்புக் கண்டிருக்கிறது.

கம்பராமாயணத்தில் இரண்டு முறை படித்தால் மனனமாகிவிடும் பாடல்கள் எவை என்று யாரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதில்லை. "கம்பர் தரும் ராமாயணம்' புத்தகத்தில் உள்ள பாடல்களைப் படித்தால் போதும். ரசித்துப் படிக்கவும், ரசித்துப் பாடவும் உகந்த பாடல்கள். "ரசிகமணி' அவற்றை ரசித்துப் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தனராம் ராஜாஜியும், ரசிகமணியின் நண்பர்களும்.
இந்தப் புத்தகம் மறுபதிப்புக் கண்டிருப்பதில் மிகப்பெரிய பங்கு வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு உண்டு. எழுத்தாளர் கி.ரா.விடமும், "ரசிகமணி' பெயரன் தீப.நடராஜனிடமும் இருந்த  "கம்பர் தரும் ராமாயணம்' முதல் பதிப்பைக் கேட்டு, வாங்கிக் கொடுத்து மறுபதிப்புக்கு வழிகோலியவர் அவர்தான். அதனால், அவருக்கும் நன்றி. பதிப்பித்திருக்கும் "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாஸனுக்கும் நன்றி!

----------------------------------------

"தினமணி' சென்னைப் பதிப்பின் துணை செய்தி ஆசிரியர் ராஜாராம் எழுதிய கவிதை இது -

ஊர்களையும் 
பயணிகளையும்
புறக்கணித்து
குறுக்கு வழியில் 
செல்கிறது
பேருந்து; 
"நேர்வழி' 
என்கிறது பலகை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com