நாள் கதிர் - "புதிது' உண்ணல்!

மருத நிலத்தில் நெற்கதிர்கள் விளைந்தவுடன், ஒரு நல்ல நாளில் "நாள்-கதிர்' வைப்பார்கள்.
நாள் கதிர் - "புதிது' உண்ணல்!


மருத நிலத்தில் நெற்கதிர்கள் விளைந்தவுடன், ஒரு நல்ல நாளில் "நாள்-கதிர்' வைப்பார்கள். அன்று ஆண்களில் பெரியவர், சிறியவர் என எல்லோரும் வயலுக்குச் சென்று, கை கொள்ளும் அளவுக்கு நெற்கதிர்களை அறுத்து, கட்டாகக் கட்டி எடுத்து வந்து வீட்டில் விளக்குக்கு முன்பாக வைத்து விடுவார்கள். 

நெற்கதிர்களில் இருந்து சிறிது நெல்லை எடுத்து, குத்தி அரிசியாக்கி, அந்தப் புது அரிசியை உலையிலிட்டு சோறாக்குவர். மதியம் ஒரு மணி அளவில், புது அரிசியில் பொங்கிய சோற்றையும், குழம்பு, கறி வகைகளையும் விளக்கு முன்பாக வைத்து, சாமியை வணங்கி, பெரியவர்களிடம் திருநீறு பூசி, அதன் பிறகு அனைவரும் ஒன்றாகத் தரையில் அமர்ந்து, வாழை இலையில் சாப்பிடுவர்.

பிறகு நெற்கதிர்களை அழகுறப் பின்னி வாசலில் தொங்கவிடுவர். அது, அடுத்த அறுவடைக்காலம் வரையிலும் இருக்கும். அவ்வப்போது பறவைகள் வந்து அவற்றைக் கொத்தும். நம்மவர்கள் எதையுமே நல்ல நாள் பார்த்துச் செய்பவர்கள் அல்லவா? வயல் அறுவடைக்கு வந்த பிறகு, அறுவடை செய்யும் ஆட்களின் வசதியைப் பொறுத்தே அறுவடை செய்ய முடியும். 

அந்த நாள் எப்படி வேண்டுமானாலும் இருக்கக்கூடும். எனவேதான் திருமணம், கோயில் கொடை போன்ற நிகழ்வுகளுக்குப் "பந்தல் கால்' நாட்டுவதைப் போல, நல்லநாள் பார்த்து, கதிர் அறுத்து, புது அரிசியில் சோறு பொங்கிப் படைக்கும் "நாள் கதிர்' என்னும் வழக்கத்தை, காலங்காலமாகப் பின்பற்றுகிறார்கள். 

எத்தனை காலமாக என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் வழக்கம் இது என்கிறது கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல்.

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள் புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றி
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ!    
புறம். 168)

செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கும் மலையில் அருவி ஆர்ப்பரிக்கும். பன்றிகள் கொழுங் கிழங்குகளுக்காக பூமியைக் கிளறிப் புழுதியாக்கியிருப்பதால்,  அந்த நிலத்தைத் தாங்கள் தனியே உழாமல், மலைக்குறவர் தினையை விதைத்திருப்பார்கள். 

தினைப்பயிர் வளர்ந்து, கதிர் முற்றிய நிலையில் இருக்கும்போது, குறவர்கள் தினையை அறுத்து வந்து, நுரைபொங்கும் மலைப்பசுவின் பாலை உலை நீராக வைத்து, சந்தன விறகை எரித்து,  சோறுபொங்கி, வீட்டு முற்றத்தில் வைத்து, அகலமான வாழை இலையில் வரும் விருந்தினருக்கு விருந்து படைப்பார்கள். 

"நாள் புதிது உண்மார்' என்னும் வழக்கம்தான் பின்னாளில், "நாள் கதிர்' என்பதாகத் தொடர்ந்திருக்கிறது. சங்க காலத்தில், புது அரிசி பொங்கிய நாளை நல்ல நாளாகக் கொண்டாடியிருக்கிறார்கள். நல்லநாள் பார்த்து புது அரிசி பொங்குவது என்னும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும்.

பொங்கல் அன்று பால் பொங்கி வழியும்போது, குலவை இட்டு மகிழ்வது அல்லது "பொங்கலோ பொங்கல்' என்று சொல்வது இன்றும் உள்ள வழக்கம். பொங்கல் பானையில் பச்சரிசி கழுவிய தண்ணீரைத்தான் உலை நீராக வைத்திருப்பார்கள். அது வெண்மை நிறத்தில் இருக்கும். 

ஆனால், "மறையான் கறந்த நுரைகொள் தீம்பால்'என்னும் வரி, உண்மையில் சங்க காலத்து மக்கள் பசுவின் பாலையே உலைநீராக வைத்துப் பொங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com