பறிகொடுத்த பாவையர்

பறிகொடுத்த பாவையர்

மனம், நாணம், வனப்பு எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு வெறுமனே நிற்கும் முத்தொள்ளாயிர நாயகியைப் போல் வறியவளாய் நிற்கிறாளாம் மைவண்ண இராமனைக் கண்ணுற்ற சீதை.


பவனி வந்த சோழனை வெட்கத்தால் தவணை முறையில் பார்த்தாள் அவள். பின்னர் உற்றுப் பார்த்துப் பற்று வைத்தாள். புனல் நாடனைப் பொழுதெல்லாம் நினைந்து நினைந்து தன் உடல் ஒளியை இழந்துவிட்டுக் கழலணிந்த சோழ மன்னன் செய்தது முறையா எனத் தோழியிடம் முறையிடுகின்றாள். குற்றம் சாட்டும்படி என்ன செய்தான் கொற்றவன்?

என்னெஞ்சும் நாணும் நலனும் இவையெல்லாம்
மன்னன் புனல்நாடன் வௌவினான்-என்னே!
அரவகல் அல்குலாய் ஆறிலொன்றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்!    (முத்தொ)

"தோழியே!  உற்பத்திப் பொருளில் ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு வரியாய்த் தரவேண்டும் என்பது நியதிதான். ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்தப் பொன்னி வளநாடனோ என்னிடமிருந்து மொத்தமாய்க் கவர்ந்து கொண்டானடி. என்னென்னகவர்ந்தான் தெரியுமா? என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டான். உடன் பிறந்த வெட்கத்தைக் கவர்ந்து கொண்டான்.  உற்ற அழகுடன் நலத்தையும் முழுமையாய்க் கவர்ந்து கொண்டானே' என்று கவலைப்பட்டுக் கண்ணீர்த் திவலைகளைச் சொல்லாக்கித் தருகின்றாள் கைக்கிளையில் கலங்குபவள்.

"புனல்நாடன்' என்ற சொல்லாட்சி இப்பாடலில் பொருத்தமானது. புனலில் விழுந்தால் வௌவிக்கொண்டு போகும்தானே? மனம், நாணம், வனப்பு எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு வெறுமனே நிற்கும் முத்தொள்ளாயிர நாயகியைப் போல் வறியவளாய் நிற்கிறாளாம் மைவண்ண இராமனைக் கண்ணுற்ற சீதை. கம்பரின் மைவண்ணம் இது. (மைவண்ணம்-எழுத்தின் எழில்)

தழங்கிய கலைகளும், நிறையும், சங்கமும்
மழுங்கிய உள்ளமும், அறிவும், மாமையும்,
இழந்தவள் இமையவர்கடைய, யாவையும்
வழங்கிய கடல்என-வறியள்ஆயினாள் 
(மிதிலைக்காட்சிப்படலம்.523)

இமைக்காத கண்களை உடைய தேவர்கள் கடைந்தபோது தன் உடைமைகள் யாவையும் இழந்து வறுமையாகிவிட்ட கடல்போல், ஒலிக்கும் மேகலை அணியையும், உள்ள உறுதியையும், வளையல்களையும் பொலி விழந்த மனத்தையும், அறிவு நுட்பத்தையும், அழகுநிறத்தையும் பறிகொடுத்துவிட்டு வறியவளாகி விட்டாளாம் இராமனை நோக்கிய பின் அல்லலுற்ற சீதை.

இதில் சீதையிடம் இருந்து இராமர் பறித்துக்கொண்டதாய்க் கூறவில்லை. சீதையாகவே பறிகொடுத்தாள். ஆனால், அவள் பறிகொடுத்ததற்குக் காரணம் அண்ணல் நோக்கியதும் - அவள் நோக்கியதும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com