பூச்சரம் படுத்திய பாடு... 

சில சமயங்களில் நாம் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நம் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்திவிடக்கூடும்.
பூச்சரம் படுத்திய பாடு... 


சில சமயங்களில் நாம் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நம் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்திவிடக்கூடும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தற்செயல் என்பதா, ஊழ் என்பதா என்று நினைக்க வேண்டியிருக்கும். எதுவானால் என்ன? நிகழ்ச்சி எதனால் நடந்தால் என்ன? அதன் விளைவுதானே நம்மால் கருதத்தக்கது.

அப்படித்தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது. அவள் மிக மென்மையான பண்புகளைக் கொண்டவள்.  அதிர்ச்சி எதையும் தாங்காத உள்ளம் அவளுடையது. அவளுக்கு அப்படி நேர்ந்துவிட்டதே!

அவள் எச்சரிக்கையாகத்தான் இருந்தாள். ஆனாலும், எதிர்பாராது அந்த நிகழ்ச்சி நடந்துவிட்டது. 

பெற்றோருக்கும், மற்றோருக்கும் தெரியாமல் தான் ஒரு நாள் அந்திப்பொழுதில் தன் தலைவனை சந்தித்தாள். ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த அவன், ஆங்காங்கே மிக அழகாகப் பூத்திருந்த முல்லைப் பூக்களைப் பார்த்தான். வெள்ளை முல்லையில் அவன் தலைவியின் பளிங்கு முகம் தெரிந்தது. ஒவ்வொரு பூவாய் அதற்கு வலிக்காமல் பறித்தான். வாழை நாரினால் ஒரு பூச்சரமாக அவனே தொடுத்தான். தலைவியிடம் கொண்டு வந்து அன்போடு 
கொடுத்தான்.

""ஏது இந்த முல்லை? இது இந்தப் பக்கத்தில் காணப்படாத பூவாயிற்றே'' என்று கூறிய அவள் கண்கள் வியப்பில் விரிந்தன. முல்லைப் பூக்கள் அவளை நோக்கி நகைத்தன. தலைவி பூவை வாங்கிக் கொள்ளத் தயக்கம் காட்டினாள். வாங்கித் தலையில் வைத்துக் கொண்டால், "ஏது இங்குக் காணப்படாத இந்தப் புதிய முல்லைப்பூ' என்று யாரும் கேட்பார்களோ? என்று அவள் உள்ளம் மறுகிற்று.

தலைவன் கொடுப்பதை மறுத்தால் அவன் உள்ளம் வருந்துமே! கூடாது என நினைத்த அந்தப்  பெண் அந்த முல்லைச்சரத்தை வாங்கித் தன் கொண்டைக் கூந்தலை அவிழ்த்து அதன் உள்ளே பூச்சரத்தைப் பொதிந்து முடித்துக் கொண்டாள்.
மறுநாள் காலைப்பொழுதில் செவிலி தலைவியை நோக்கி, "மகளே! வா தலைவாரி விடுகிறேன்' என்று அழைத்தாள். தலைவி தன் கூந்தலுக்குள்ளே பொதிந்து வைத்திருந்த முல்லைச்சரத்தை மறந்துபோய் செவிலியின் முன் உட்கார்ந்தாள். 
செவிலி கூந்தல் முடிப்பை அவிழ்த்தாள் "அன்னைமுன் வீழ்ந்தது அன்று அப்பூ'. அவ்வளவுதான் நெருப்பைத் தொட்டவள் போல் செவிலி பதறி எழுந்தாள். வீட்டில் எல்லார் உள்ளத்திலும் ஒரே கேள்வி! "இந்தப் பூ எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது?' முல்லைச்சரம் வெளிப்பட்டுவிட்டது. முல்லைச்சரம் மட்டுமா? களவும் வெளிப்பட்டு விட்டது. இந்த அனுபவத்தைத் தலைவி, தோழியிடம் கூறுகிறாள்.
"தோழி! ஒருவன் யாருக்கும் தெரியாமல் மறைவாகக் குடித்தக் கள் உள்ளே சென்று, மெய்யில் வெளிப்பட்டு வெட்கமே இல்லாமல் வீதியெல்லாம் தெரியுமாறு ஆயிற்றாம். அது போலவே என் கதையும் ஆகிவிட்டது' என்கிறாள். பிறகு என்ன? பெற்றோர் அவளுடைய காதலை ஏற்றுக்கொண்டு விட்டனராம். ஒரு பூச்சரம் செய்த வேலை கழுத்துக்கு மணமாலை ஆனது. இப்பாடலின் ஆசிரியர் சோழன் நல்லுருத்திரன்.

புல்லினத்து ஆயர் மகன் சூடிவந்ததோர்
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ! (கலி.115)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com