இந்த வாரம் கலாரசிகன் - (19-06-2022)

நாம்  யாரையாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பினால், அதைத் தள்ளிப்போடக் கூடாது.
இந்த வாரம் கலாரசிகன் - (19-06-2022)


நாம்  யாரையாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பினால், அதைத் தள்ளிப்போடக் கூடாது. குறிப்பாக வயதானவர்களை சந்திக்க வருகிறேன் என்று  சொன்னாலோ, சந்திக்க விரும்பினாலோ காலதாமதம் செய்வது தவறு என்பதை வாழ்க்கையில் பல அனுபவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன.

கடந்த மூன்றாண்டுகளாக, நாமக்கல் சென்று எழுத்தாளர் சின்னப்ப பாரதியை சந்திக்க வேண்டும் என்று பலமுறை நினைக்கத்தான் என்னால் முடிந்ததே தவிர, பயணிக்க இயலவில்லை. கொள்ளை நோய்த்தொற்று ஒரு முக்கியமான காரணம். 

நோய்த்தொற்று அச்சம் விலகிய பிறகும்கூட உடல்நிலையும், பணிச்சுமையும் மட்டுமல்லாமல், என் தாயாரின் மறைவும் எனது பயணத்தைத் தள்ளிப்போட வைத்தது.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு நாள், என் நண்பரும் நாமக்கல் "தினமணி' முகவருமான சித்திக் தொலைபேசியில் அழைத்து, சின்னப்ப பாரதி உடல் நலமில்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போதாவது நாமக்கல் கிளம்பிப் போய் அவரைப் பார்க்க முடிந்ததா என்றால் இல்லை. இப்போது அழுது புலம்பி என்ன பயன்? கடந்த திங்கள்கிழமை அவர் இயற்கை எய்திவிட்டார்.

எழுத்தாளர், கவிஞர் சின்னப்ப பாரதி சாதாரண ஆளுமை அல்ல. எத்தனையோ எழுத்தாளர்களில் ஒருவரல்ல. தமிழகத்தைவிட, தமிழகத்துக்கு வெளியே அறியப்படும், தேச எல்லை கடந்து வியந்து பாராட்டப்படும் எழுத்தாளர் அவர். 

அவரது தாகம், சங்கம், சர்க்கரை, சுரங்கம் நாவல்கள் 13 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் பிரெஞ்சு, சிங்களம், ரஷியன், தஜிகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளும் அடங்கும். பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கப்படும் அவரது நாவல்களில் காணப்படும் உழைப்பும் எதார்த்தமும் அவருக்கு சர்வதேச பாராட்டுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன.

அவசரநிலை பிரகடனத்தின்போது, முற்போக்கு எழுத்தாளர்கள் சார்பில் அதை எதிர்த்துப் போராடிய முன்னணிப் போராளி சின்னப்ப பாரதி. இடதுசாரி இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்பதாலோ என்னவோ, அவருக்குக் கிடைக்க வேண்டிய இலக்கிய அந்தஸ்து தமிழகத்திலும் கிடைக்கவில்லை, தேசிய அளவிலும் கிடைக்கவில்லை. வங்காளியாகவோ, மலையாளியாகவோ பிறக்காமல் போனதால்,  சாகித்திய அகாதெமி விருதுகூட வழங்கப்படவில்லை.

என்மீது எத்துணை அன்பும், என் எழுத்தின் மீது நம்பிக்கையும் இருந்தால், அவர் நிறுவிய கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருதை எனக்கு வழங்கி அவர் கெüரவித்திருப்பார் என்பதை நினைத்தாலே சிலிர்க்கிறது. 

சேலத்துக்குப் போனால்,  நாமக்கல்லுக்குப் போய், அவருடைய மனைவி சமைத்து, பாசத்துடன் பரிமாறும் உணவை உண்ணாமல் திரும்பியதில்லை. பெற்ற தாய், தகப்பனைப் போல அவர்கள் என்னைப் பாசத்துடன் நடத்தியதை, முற்பிறவியின் விட்டகுறை, தொட்ட குறை என்றுதான்  நினைக்கிறேன்.

நேற்று நாமக்கல் சென்றிருந்தேன். சின்னப்ப பாரதியை நலம் விசாரிக்கச் செல்ல முடியாத நான், அம்மாவைத் தேற்றிவிட்டுத் திரும்பிய எனது துக்கத்தை உங்களிடம்தானே  பகிர்ந்துகொள்ள முடியும்?

என்னிடம் சொல்வதற்கு எழுத்தாளர் சின்னப்ப பாரதிக்கு வழக்கம்போல நிறைய செய்திகள் இருந்திருக்கும். நான் மறுபிறவியில் நம்பிக்கை உள்ளவன். எங்களது விட்ட குறை, தொட்ட குறை அடுத்த பிறவியிலும் தொடரும் என்று என் உள்ளுணர்வு தெரிவிக்கிறது.

------------------------------------------------------------

சேலத்தில் பாஜகவின் மாநில துணைத் தலைவரும், எனது நீண்ட நாள் நண்பருமான கே.பி.இராமலிங்கத்தின் மகன் திருமணம். நானும்,  எங்கள் சேலம் "தினமணி' நிருபர் ஆதித்தனும் ஸ்ரீசரவணபவன் உணவு விடுதியில் காபி அருந்துவதற்காகச் சென்றோம். அங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகம் எனது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதை வாங்கிவிட்டேன்.

டாக்டர் எஸ்.எம். பதூர் மொய்தீன் எழுதிய "படிக்கத் திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும்' என்கிற அந்தப் புத்தகத்தை சேலம் ஸ்ரீசரவணபவன் உரிமையாளர் வி.சி.எஸ்.சிவராமன்,  தானே முன்வந்து பதிப்பித்திருந்தார். பதிப்புத்துறையில் அவரது கன்னி முயற்சி அது. அந்தப் புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், அது ஆட்டிஸம், டிஸ்லெக்ஸியா, சுட்டித்தனம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் குழந்தைகள்  குறித்தும்,  அந்தக் குறைகளை குழந்தைகள் வெல்லும் வழிகள் குறித்தும் சொல்கிறது என்பதுதான்.

"இந்தப் புத்தகம் எந்தவொரு மாணவனுக்காகவும் எழுதப்பட்டது அல்ல. ஆனால், குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொருவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று' என்கிற  டாக்டர் பதூர் மொய்தீனின் கூற்றை, புத்தகத்தைப் படித்த நான் வழிமொழிகிறேன். தாய்மைப்பேறு அடைவதிலிருந்து தொடங்குகிறது புத்தகம். பிரசவம்,  தாய்ப்பால் பருவம், மழலைக் காலம் என்பதிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக நகர்கிறது டாக்டர் மொய்தீனின் பார்வை.

ஆட்டிஸம் என்பது நோய் அல்ல, டிஸ்லெக்ஸியாவை வெல்ல முடியும், அனைத்துக் குறைகளுக்கும் தீர்வு உண்டு } இந்த மூன்று கட்டுரைகளையும் டாக்டர் பதூர் மொய்தீன் அனுமதி அளித்தால் "தினமணி'யில் வெளியிட விழைகிறேன். பரவலாக அனைவரும் படிக்க வேண்டிய, குறைபாடுள்ள குழந்தைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் கட்டுரைகள் அவை.

நல்லதொரு புத்தகத்தைப் படித்து, தெரியாத பல செய்திகளை நான் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு வி.சி.எஸ்.சிவராமனைப் பாராட்டுவதா இல்லை டாக்டர் பதூர் மொய்தீனுக்கு நன்றி கூறுவதா என்று தெரியவில்லை.

------------------------------------------------------------

நேற்று இரவு சட்டென்று தூக்கம் கலைத்தது கனவு. காரணம், மறைந்த எழுத்தாளர் சின்னப்ப பாரதி. கவிஞர் ரவி சுப்பிரமணியன்  வாட்ஸ் ஆப்பில் எப்போதோ அனுப்பித் தந்திருந்த, ஆகஸ்ட் 2021, "பேசும் புதிய சக்தி' இதழில் வெளிவந்திருந்த  கவிஞர் க. அம்சப்பிரியாவின் கவிதை வரிகள் அப்போது நினைவுக்கு வந்தன.

இனி ஒருபோதும்
காணமுடியாதவர்கள்தான்
ஒவ்வொரு நாளும்
முறைவைத்து வருகிறார்கள்
கனவில்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com