மறம் பயின்றது எங்கோ?
By மு.சுவாமிநாதன் | Published On : 19th June 2022 05:29 PM | Last Updated : 19th June 2022 05:29 PM | அ+அ அ- |

மறம் - என்ற சொல்லுக்கு தீரம், வீரம், வலிமை, ஆற்றல், சீற்றம், அமர், அழித்தல், வெற்றி, கொல்லுதல் ஆகிய பண்புகள் உள்ளதாக அகராதியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இத்துடன் "மறம்' என்பதற்கு "வன்முறை' என்ற பொருளையும் நாம் கொள்ளலாம்.
எல்லை தாண்டிய வன்முறை குறித்து சேக்கிழார் பெருமான், சுந்தரர்- பரவையார் பிரிவுத் துயரம் குறித்துப் பேசுமிடத்தில் பதிவு செய்துள்ளார். பிரிந்திருக்கும் தலைவனை சந்திரனும், தென்றல் காற்றும் வருத்துவதாக இலக்கியங்கள் பல காட்சிப்படுத்துகின்றன. அவ்வகையில் சுந்தரரின் பிரிவுத் துயரில் தென்றல் வந்து வருத்துகிறதாம்-வன்முறை நிகழ்த்துகிறதாம்.
""இனிய தென்றல் காற்றே! உன் பிறந்த வீடு சிவபெருமானும், குறுமுனி அகத்தியரும் விரும்பும் பொதியமலை. அதனால் பிறந்த வீடும் நல்லதே; அதன்பின் புகுந்த வீடாய் நீ சென்று அடைந்தது தெய்வத் தன்மை மிக்க நாடாகிய சோழநாட்டின் தடாகங்களின் வழியாகும். இதற்கிடையில் உள்ள வயல் மிகுந்த, குளிர்ச்சியான, இயற்கைச் சூழலைக்கூட வெம்மைமிக்கதாய் (தீக்காற்று வீசும்படியாக), சுட்டெரிப்பதாய்ச் செய்துவிட்டாயே! பிறந்த வீடும், புகுந்த வீடும் அறநெறிப்பட்டதாய் இருக்கும்போது, எங்களைத் தீண்டி வருத்துவதாகிய வன்மையை நீ பழகியது (கற்றது) எங்கோ?'' என்கிறார் சேக்கிழார்.
""பிறந்ததும் புகுந்ததுமாகிய இடத்தினல்லாது பிறர்க்கு முன்னரே பொருந்திப் பயின்ற தென்றலே நீ தமிழ் இயல்புடையாய்; ஆதலின் மறம் உனதியற்கையன்று என்பார் "தமிழ் மாருதம்' என்று கூறி முடித்தனர். தமிழ் நாவலராதலின் குறிப்பாய் அத்தொடர்பு காட்டத் தமிழ் மாருதம் என்றாரென்பதுமாம்'' என்பது இப்பாடலுக்கான உரைக்குறிப்பு.
"பிறந்த தெங்கள் பிரான்மல யத்திடைச்
சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினில்
புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட
மறம்ப யின்றது எங்கோ? தமிழ் மாருதம்?'