பிறவா ஆம்பல்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் திருத்தலம் திருவலஞ்சுழி. இத்தல விநாயகர் வெள்ளை (சுவேத) விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
பிறவா ஆம்பல்


சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் திருத்தலம் திருவலஞ்சுழி. இத்தல விநாயகர் வெள்ளை (சுவேத) விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள விநாயகருக்குத் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் "வலஞ்சுழி விநாயகர்' எனப்படுகிறார். அதனால் இத்திருத்தலம், "திருவலஞ்சுழி' எனப் பெயர் பெற்றது. இத்திருத்தலத்துக்கு ஒரு முறை காளமேகப் புலவர் சென்றிருக்கிறார். அங்கு வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் குறித்துப் பாடிய சுவையான பாடல் இது.

 "பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே
இறுகாத தந்தி உருகாத மாதங்க மிந்து நுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடுஞ்சுனையில்
பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே' 
(தனிப்பாடல்) 

தும்பி, கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், இந்து, களபம், ஆம்பல் என்பனவெல்லாம் வெவ்வேறு பொருளைக் குறிப்பன. மேலும் அவை யானையின் பெயரும் ஆகும். அதனால் அவற்றைக் குறிப்பிடுவதுபோல யானைமுகனைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றார் காளமேகம். 

"பறந்தலைச் செய்யாத தும்பி (வண்டு), கருகிப் போகாத வெம்மையான கரி (அடுப்புக்கரி), பண்முறை பிறழ்ந்து கட்டமையாத தந்தி (வீணையின் தந்தி), அளவிடத்தே உருகாத மாதங்கம் (பெரிய தங்கக்கட்டி), பிறை போன்ற நெற்றியிடத்தே நிறம் காட்டாத சிந்துரம் (பொட்டு), பூசுதற்குப் பயன்படாத களபம் (களபம் சாந்து), நெடிய சுனை நீரினிடத்தே தோன்றாத ஆம்பல் (ஆம்பற்பூ) ஆகிய விநாயகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவலஞ்சுழியினிடத்தே வந்து அவன் அருளை பெற்றேன் யான்' என்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com