குண்டர்கள் தடைச் சட்டம்!

சட்டங்கள் பல. அந்தச் சட்டங்களில் நமக்குப் பிரபலமாக, நன்றாகத் தெரிந்த சட்டம் குண்டர்கள் தடைச் சட்டம் .
குண்டர்கள் தடைச் சட்டம்!

சட்டங்கள் பல. அந்தச் சட்டங்களில் நமக்குப் பிரபலமாக, நன்றாகத் தெரிந்த சட்டம் குண்டர்கள் தடைச் சட்டம். இந்தக் குண்டர்கள் தடைச் சட்டத்தைப் பற்றி அருணகிரிநாதரும் சொல்லியிருக்கிறார். "குண்டர்கள்' என்று பதினொரு பேரைப் பட்டியல் இடுகின்றார் அவர். அந்தப் பதினொரு பேர் யார் யார்?
நன்றாகப் பழகி நட்பு கொண்டுவிட்டு, அதன் பிறகு அந்த நட்புக்குத் துரோகம் செய்து வஞ்சனையுடன் இருப்பவர்கள் குண்டர்கள். அதாவது, நட்புக்குத் துரோகம் செய்பவர்கள் முதலிடம் பிடிக்கிறார்கள். 

அடுத்த குண்டர் யார்? கல்வி கற்பித்த ஆசிரியர்க்கு உபகாரம் செய்யாமல் அவரிடம் நன்றி மறந்தவர்களாக இருப்பவர்கள் இரண்டாவது குண்டர். அதாவது குரு நாதருக்கு நன்றி மறந்த
வர்கள்.

மூன்றாவது குண்டர் யாரென்றால், விரதங்களை அதாவது நற்செயல்களைச் செய்யாதவர்கள்.  அதே சமயம் "சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள்' எனும் அருணகிரிநாதரின் வாக்குக்கு மற்றொரு பொருளும் உண்டு. யாராவது நல்லது செய்தால் சிலருக்கு அது ஆகாது. எதையாவது சொல்லி நிர்ப்பந்தித்து, அந்த நல்லவற்றை, விரதங்களை நிறுத்தும்படியாகச் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களும் குண்டர்கள். 

அடுத்து, அறிவிலும் ஞானத்திலும் பண்பாட்டிலும் சிறந்த பெரியவர்களை இகழ்ந்து பேசுகிறார்கள் அல்லவா? அவ்வாறு இகழ்ந்து பேசுபவர்கள் குண்டர்கள். 

இந்த வரிசையில் ஐந்தாவதாக வருபவர், தர்மம் செய்வதைத் தடுப்பவர்கள். "தர்மம் செஞ்சு தர்மம் செஞ்சு, நீயே ஒரு நாள் இல்லாட்டி  ஒரு நாள் பிச்சைக்காரனா ஆயிடுவ!  தர்மமாவது ஒன்னாவது? தனக்கு மிஞ்சித்தான் தான தர்மம்' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, அடுத்தவர் செய்யும் தர்மத்தைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் 
குண்டர்கள்.

அடுத்து வருபவர்கள், வாக்கு மறந்தவர்கள். அதாவது, சத்தியம் செய்துவிட்டு, அதை மீறியவர்கள் குண்டர்கள். 

அடுத்து, நான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும்! மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று வாழ்பவர்கள் குண்டர்கள். அடுத்து, நீதியையும் தர்மங்களையும் மீறி அவற்றைக் கைவிட்டவர்கள். அழுத்தமாகச் சொல்ல வேண்டுமானால்  நீதியையும் தர்மத்தையும் அழிப்பவர்கள் குண்டர்கள். 

அடுத்து, தற்பெருமை கொண்டு மிகவும் அகம்பாவம் பிடித்து அலைபவர்கள் குண்டர்கள். அடுத்து, நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் எண்ணிச் செயல்பட்டு, வருத்தத்தில் ஆழ்பவர்கள் குண்டர்கள். 

இதுவரை பத்து குண்டர்களைச் சொன்ன அருணகிரிநாதர் பதினொன்றாவதாகச் சொல்லும் குண்டர்கள் யார் தெரியுமா?  கோயில் சொத்தைக் கொள்ளை அடிப்பவர்கள். அதாவது, தர்ம கைங்கரியத்திற்கென்று  உள்ள செல்வங்களை, சொத்தைக் கொள்ளை அடிப்பவர்கள். 

இவ்வாறு சொல்லப்பட்ட இத்தகைய குண்டர்கள் எல்லாம் நரகப் படுகுழியில் விழுவார்கள். அவர்களை யமன் கடுமையாகத் தண்டிப்பான் என்கிறார் அருணகிரிநாதர். அவர் சொன்ன இந்தக் குண்டர்கள் பட்டியலைப் பாடல் வழிப் படியுங்கள்.

தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றி மறந்த குண்டர்கள் 
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் - பெரியோரை
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
சூள்உறவென்ப தொழிந்த குண்டர்கள் - தொலையாமல்
வாழ நினைந்து வருந்து குண்டர்கள்
நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள்
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் - வலையாலே
மாயையில் நின்று வருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள்
வாதை நமன்றன் வருந்திடுங் குழி விழுவாரே!
(வல்லக்கோட்டை திருப்புகழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com