இந்த வாரம் கலாரசிகன் - (13-03-22)

தமிழக அரசின் "கனவு இல்லம்' திட்டம் தொடர்பாக, கவிஞரும், எழுத்தாளருமான ஜீவபாரதியின் கருத்தை நான் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி வழிமொழிகிறேன்.
இந்த வாரம் கலாரசிகன் - (13-03-22)


தமிழக அரசின் "கனவு இல்லம்' திட்டம் தொடர்பாக, கவிஞரும், எழுத்தாளருமான ஜீவபாரதியின் கருத்தை நான் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

மு.க.ஸ்டாலினின் தலைமையில் அரசு அமைந்ததைத் தொடர்ந்து, எழுத்தாளர்களுக்கு சொந்தமாக வீடு வழங்குவதற்காக, "கனவு இல்லம்' என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டது. அவரவர் வாழும் பகுதியில் எழுத்தாளர்களுக்கு சொந்தமாக வீடு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, எழுத்தாளர்கள் அனைவரும் முதல்வரையும், தமிழக அரசையும் மனமாரப் பாராட்டினார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு "கனவு இல்லம்' திட்டம் குறித்துத் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பெரும்பாலான எழுத்தாளர்களின் "கனவு இல்லம்' வெறும் கனவாகவே முடிந்துவிடுமோ என்கிற அச்சத்தை எழுப்புகிறது அந்த அறிவிப்பு.

""தேசிய அளவிலான சாகித்திய அகாதெமி விருது, பாரதீய ஞானபீடம் என்கிற தனியார் பண்பாட்டு இலக்கியக் கழகம் வழங்கும் "ஞானபீட விருது', செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் நோபல் பரிசு (தமிழ் இலக்கியத்துக்கு) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்களும், எதிர்காலத்தில் இவ்விருதுகளைப் பெறும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் மற்றும் பிற மாநிலத்தவராயினும் அவர்களுக்குத் தமிழ்நாட்டின் எல்லைக்குள் அமையும் வகையில் வீடு வழங்கப்படும். ஏற்கெனவே வீடு வைத்திருக்கும் எழுத்தாளர்களும், மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றுபவர்களும், ஓய்வூதியம் பெறும் விருதாளர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்'' என்கிறது அந்த அரசுச் செய்திக் குறிப்பு.

"கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாகப் பத்து விருதாளர்களுக்கு மட்டும்தான் வீடுகள் வழங்கப்பட இருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அதென்ன, பத்து "கனவு இல்லம்' மட்டுமே என்கிற வரைமுறை?

சொந்த வீடு உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது எப்படி "கனவு இல்லம்'? அது "போனஸ்' இல்லம்.

விருது பெற்ற அதிகாரிகளுக்குத் தமிழ் எழுத்தாளர்களுக்கான ஒதுக்கீட்டில் எதற்காக வீடு வழங்கப்பட வேண்டும் என்பது புரியவில்லை. ஆண்டுதோறும் வழங்க இருப்பது வெறும் பத்தே பத்து வீடுகள். அதில் ஏற்கெனவே வீடு வைத்திருப்பவர்களுக்கும், விருது பெற்ற அதிகாரிகளுக்கும் வழங்கிய பிறகு, ஏழை எழுத்தாளர்களுக்குப் போனால் போகிறது என்று ஒன்றோ, இரண்டோ கிடைக்கப் போகிறதா? அதற்குக் "கனவு இல்லம்' என்று பெயர் வைப்பானேன்?

சாகித்திய அகாதெமி, ஞானபீட விருதுகள் பெறும் பிற மாநிலத்தவர்களுக்குத் தமிழக எல்லைக்குள் அமையும் வகையில் வீடு வழங்கப்படும் என்றால், ஒடிஸா, குஜராத்தி, ஹிந்தி, வங்க
மொழி எழுத்தாளர்களுக்கு, அங்கே கிடைக்காத கனவு இல்லத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் இங்கே வழங்கப் போகிறாரா? இதென்ன தேவையில்லாதகுழப்பம்?

தமிழக அரசு ஆண்டுதோறும் பாரதியார், பாரதிதாசன், கபிலர், கம்பர், ஒளவையார், இளங்கோவடிகள், திரு.வி.க. போன்ற இலக்கியச் சான்றோர்களின் பெயரில் விருது வழங்கி எழுத்தாளர்கள் பலரை கெளரவிக்கிறது. அந்த விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு "கனவு இல்லம்' திட்டத்தில் வீடு பெற வாய்ப்பில்லையா? அதுபற்றி அரசு செய்திக் குறிப்பில் எதுவுமே சொல்லப்படவில்லை.
வாடகை வீட்டில், வாடகை கட்ட முடியாமல் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான கவிஞர்களும், எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர்கள். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி "கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் ஆதரவு வழங்குவதை விட்டுவிட்டு, வெளி மாநிலத்தவர்களுக்கும் வீடு வழங்குவது எந்த வகையிலான "சமூக நீதி' என்று தெரியவில்லை.

தமிழ் மீதும், தமிழ் எழுத்தாளர்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசின் பொறுப்பில் இருக்கும் தமிழ் வளர்ச்சித் துறையில், இப்படியொரு குறைநேரலாமா?

-----------------------------------------

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், மார்ச் 30-ஆம் தேதி நடைபெற இருக்கும் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. பேராசிரியர், டாக்டர் குறிஞ்சிவேந்தனின் அன்புக் கட்டளையைத் தட்டுவது எங்ஙனம்?
அந்த அழைப்பிதழைப் பார்த்ததும் நண்பர் லெட்சுமணன் அனுப்பித் தந்திருந்த பாரதியார் புத்தகம் குறித்த நினைவு வந்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்த கே.லெட்சுமணன் என் நெருங்கிய நண்பர். அவருக்கு நெருங்கிய நண்பர் இராஜ முத்திருளாண்டி. அதனால் அவர் எழுதிய "பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்' என்கிற புத்தகத்தை, என் நண்பர் லெட்சுமணன் மூலம் எனக்கு அனுப்பித் தந்திருந்தார்.

பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி குறித்து நான் சில விவரங்களைக் குறிப்பிட்டாக வேண்டும். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது, அதன் துணைவேந்தர் மணி சுந்தரத்தின் வலதுகரமாக விளங்கியவர் அவர். அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராக இருந்து, பல்கலைக்கழக விதிமுறைகளை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.

""தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை நேர் செய்யலாம் என்ற முனைப்பில் ஈடுபட்டு நிற்கும் எனக்குச் சிறுகதைத் துறையில் தக்க காரணங்களின்றி பாரதிக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்த எண்ணம் மனவெளியில் அணையாக் கனலாகக் கிடந்துவர, பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில் பாரதிக்கு அஞ்சலியாக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நினைவு முளைவிட்டது'' - என்கிற இராஜ முத்திருளாண்டியின் பதிவு, இந்தப் புத்தகத்தை அவர் எழுதியதற்கான காரணத்தை எடுத்துரைக்கிறது.

பாரதியின் 11 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒவ்வொரு சிறுகதைக்கும் "தோரணம்' என்கிற பெயரில் ஆய்வுக் குறிப்பு வழங்கியிருப்பது புதியதொரு பார்வை. வித்தியாசமான எழுத்து பாணி. இது முதல் தொகுப்பு என்று அவர் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அடுத்த தொகுப்பு தயாராகிறது என்பது தெரிகிறது. அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

----------------------------------

கிராமப்புறங்களில் ஒரு நம்பிக்கை (மூட?) உண்டு. நாய் ஊளையிட்டால் அந்தப் பகுதியில் ஏதாவது ஒரு வீட்டில் துக்கம் விழும் என்பார்கள். பட்டணத்தில் எந்தத் தெருவாக இருந்தாலும் தினந்தோறும் நாய்கள் ஊளையிடுகின்றன என்பது வேறு சங்கதி.

"ஏமாற்றம்' என்கிற தலைப்பில் திருமாளம் எஸ். பழனிவேல் எழுதிய கவிதையைப் படித்ததும் அக்கவிதையில் வரும் தாத்தாவைப் போல நாமும் சிரித்து விடுகிறோம்.

ஏமாற்றிவிட்டது
தெருக்கோடியில் அழுத நாய்!
நம்பிக்கையோடு
காத்திருந்தவர்களைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறார்
தாத்தா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com