அந்த பிரம்மன் படைத்தானா...?

நாம்  காணும் காட்சிகள் எல்லாம் மனத்திலே அழியாத, நிலையான இடத்தைப் பிடிப்பதில்லை. சில காட்சிகள் மட்டுமே நெஞ்சத்தின் ஆழத்தில் வேரூன்றிவிடுகின்றன.
அந்த பிரம்மன் படைத்தானா...?


நாம்  காணும் காட்சிகள் எல்லாம் மனத்திலே அழியாத, நிலையான இடத்தைப் பிடிப்பதில்லை. சில காட்சிகள் மட்டுமே நெஞ்சத்தின் ஆழத்தில் வேரூன்றிவிடுகின்றன. ஆனால், தாம் காணுகின்ற காட்சிகளைத் தம் உள்ளத்தில் மட்டுமின்றி, தாம் கண்டவற்றை, தம் உள்ளம் உணர்ந்தபடியே இலக்கியம் ஆக்குகின்றனர் சிறந்த புலவர்கள். அதற்கு உறுதுணையாக இருப்பது அவர்களது கற்பனையே!  


கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ஒரே மகனாகப் போற்றப்பட்ட அம்பிகாபதி, குலோத்துங்க சோழனின் மகள் அமராவதியைக் காதலித்து, அதனால் அவன் கொல்லப்பட்ட கதை அனைவரும் அறிந்தது. தன் காதலியை நினைத்துப் பாடிய  பாடலொன்றின் கற்பனைச் சிறப்பைக் காண்போம்.

அம்பிகாபதிக்குத் தன் காதலி அமராவதியின் அழகைப் பாட வேண்டும் என்று ஆசை வந்தது. அவளது முகத் தோற்றத்தை சந்திரனோடு ஒப்பிட விரும்பினான். எல்லாப் புலவர்களும் அதைத்தானே செய்திருக்கிறார்கள். அப்படியென்றால், தன் காதலியின் முக அழகும், மற்றைய புலவர்கள் வர்ணித்த நாயகிகளின் முக அழகும் ஒன்றாகிவிடுமே என்று யோசிக்கிறான். அப்படியென்றால் எதை ஒப்பிடலாம்? மீண்டும் சந்திரனை ஒப்பிடத்தான் அவன் மனம் எண்ணியது. இப்போது ஒரு புதுக் கற்பனையோடு தொடங்குகின்றான். இது வரையில் எந்தப் பெண்ணின் முகத்தோடும் ஒப்பிடப்படாத சந்திரன், என்று புதுமையான உவமானத்தைப் போட்டு "மைவடிவக் குழலியர்தம் வதனத்தை நிகரொவ்வா மதியை' என்று முதலடியைப் பாடத் தொடங்கினான். 

அவன் உவமிக்கின்ற சந்திரன், எல்லோராலும் காணப்படுகின்ற சந்திரன் அல்லாமல், அதை விடவும் அழகும், பிரகாசமும் கொண்டதாக, ஆகாய மண்டலத்தில் வேறு எங்கோ இருக்கும் சந்திரன். அதனால், அந்தச் சந்திரனை வேறு எந்தப் பெண்ணின் முகத்திற்கும், வேறு எந்த ஒரு புலவராலும் உவமித்திருக்க முடியாது என்று கற்பனை செய்து கொண்டு தொடங்குகின்றான்.

இருந்தும் அவனுக்குத் திருப்தியில்லை. பின்பு சொன்னான், "தெய்வப் பிறவியாக உன்னைப் படைத்தவன் யாராக இருப்பான்? சிவந்த நிறம், சிற்றிடை, முத்துப் போன்ற பற்கள், மூங்கில் தோள் இவற்றைக் கொண்ட என் காதலியை தெய்வமாகவே படைத்தவன் பிரம்ம தேவனா அல்லது வேறு யாருமா என்று வினா எழுப்புகிறான் அம்பிகாபதி. இறுதியாக அதற்கு அவனே விடையும் சொல்கிறான்.

"பிரமதேவன்தான் படைத்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், பிரமதேவன் அழகிய பல பெண்களை எல்லாம் படைத்துப் படைத்து நல்ல பயிற்சி பெற்று, தனது பயிற்சியை முடித்துக் கொண்டு மகாலட்சுமியைப் படைத்துப் பார்த்தான். மகாலட்சுமி பிரகாசமாக, பேரழகியாக ஜொலித்தாள். அப்போதுதான் பிரம்ம தேவனுக்கு நம்பிக்கை வந்தது. தன்னால் அமராவதியைப்  படைக்க முடியும்  என்று மகிழ்ச்சி கொண்டான். அதன் பின்புதான் அமராவதியைப் படைத்தான்' என்கிறான். தனிப்பாடல் திரட்டில் அம்பிகாபதி என்னும் தலைப்பின் கீழ் உள்ள அகத்துறைப் பாடல் இது. அற்புதமான கற்பனையல்லவா?

மைவடிவக் குழலியர்தம் வதனத்தை 
    நிகரொவ்வா மதியை மானைச்
செய்வடிவைச்  சிற்றிடையைத் திருநகையை, 
    வேய்த்தோளைத் தெய்வ மாக 
இவ் வடிவைப் படைத்தவடிவு எவ்வடிவோ 
    யானறியேன் உண்மை யாகக் 
கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
    படைத்தனன்நற் கமலத் தோனே.

புகழேந்திப் புலவர், நளனின் கதையை வெண்பாவிலே பாடினார். அது அற்புதமாக அமைந்தது. அது நளவெண்பா எனப் பெயர் பெற்றது.  நாயக்கர் காலத்தில் அதிவீரராம பாண்டியன் நளன் கதையை "நைடதம்' என்ற பெயரில் விருத்தப்பாவிலே பாடினார். "நைடதம் புலவர்க்கு ஒளடதம்' என்று போற்றப்பட்டபோதும் நளவெண்பாவின் சிறப்பையோ, புகழையோ அது பெறாமல்  போயிற்றென்றே கூறலாம். இருப்பினும் சிற்சில இடங்களில் நளவெண்பாவைவிட நைடதம் சிறந்து விளங்குவதைப் பலரும் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.

நளனின் முகத்தின் பேரழகையும் பிரகாசத்தையும் அதிவீரராம பாண்டியர் பாடிய முறை அவரது கற்பனைச் சிறப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

பிரமதேவன் நளமகாராஜனின் முகத்தைப் படைத்த பின்பு அந்த முகத்தின் பேரழகிலேயும் பிரகாசத்திலேயும் குளிர்ச்சியிலேயும் மனத்தைப் பறிகொடுத்து விட்டான். அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. அதனால், அந்த முகத்தைப் போல இன்னொரு முகத்தைப் படைக்கத் தொடங்கினான்.

தொடங்கி, பதினைந்து நாள்கள் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பூரணமாக்கிய பின் பார்த்தான். நளனின் முகத்துக்கு அது ஈடாகவில்லை. அதனால் அதனை அழிக்கத் தொடங்கினான். பதினைந்து நாள்கள் சென்றது அழித்து முடிய. மீண்டும் புதிதாகப் படைக்கத் தொடங்கினான். அதுவும் திருப்தியில்லை மீண்டும் அழித்தான்.

இன்று வரை நளனின் முகத்தைப் போல படைக்க நினைத்துக் கை வருந்தியதேயன்றி கண்ட பலன் ஏதுமில்லை. அது சரி, பிரமதேவன் எதைப் படைத்தானாம்? சந்திரனைத்தான். பூரண சந்திரன், தேய்பிறை, அமாவாசை, வளர்பிறை, மீண்டும் பூரண சந்திரன் இப்படியே தொடர்கின்றது என்கிறார் அதிவீரராம பாண்டியர்.

முருகுண் டுவண்டு பயில்தார்நளன் வான் முகத்தைப் 
பெருவெண் மதியம் நிகரெய்தப் பெறாமை யன்றோ
கருதுங் கமலத்துறை நாண்முகன் கைவ ருந்த 
வருதிங் கள்தோறும் புதிதாக வகுத்தல் செய்வான்!

அம்பிகாபதியின் கற்பனைக்கு இக்கற்பனை ஈடாக நிற்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com