நெல்விடு தூது

தமிழ் இலக்கிய மரபில் தூது இலக்கிய படைப்புகள் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன.
நெல்விடு தூது



தமிழ் இலக்கிய மரபில் தூது இலக்கிய படைப்புகள் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன. வடமொழியில் காளிதாசரின் மேகசந்தேசம் (மேகதூதம்) புகழ்பெற்ற தூது இலக்கியமாகும். இந்நூலின் காலம் கி.பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு என்பர்.

ஆனால், கி.மு. முதல் நூற்றாண்டிலேயே தொகுக்கப்பெற்ற புறநானூற்றில் பிசிராந்தையார் உறையூரில் திகழ்ந்த சோழனுக்கு "அன்னச் சேவல் அன்னச் சேவல்' என வானத்தில் பறந்து செல்லும் அன்னத்தை விளித்து தூதாக அனுப்பி, பரிசில் பெறப் பாடிய பாடலும், "நாராய் நாராய் செங்கால் நாராய்' என விளித்து நாரையைத் தூதாக அனுப்பும் சத்திமுத்தப் புலவரின் தனிப்பாடலும் தூது இலக்கியத்திற்கு அடிப்படையாக விளங்குபவையாகும். பின்னாளில் தமிழில் எண்ணற்ற தூது நூல்கள் மலர்ந்தன.

இராஜேந்திர சோழனின் வங்கதேசத்து படையெடுப்பின்போது சென்ற அவன் சேனைத் தலைவர்களில் சிலர் அங்கு தங்கி "சென்' என்ற அரச மரபைத் தோற்றுவித்தனர்.  அம்மரபில் தோன்றிய இலக்குமண சென் (லக்ஷ்மண சென்) (கி.பி. 1178 - 1207) என்பானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு "தோயி' எனும் வடமொழிப் புலவர் "பவனதூதம்' எனும் நூலை யாத்தார். 

அதில் தூது அனுப்பும் தலைவியோ, தமிழகத்துத் தென்பாண்டி நாட்டு "மலைய' மலையைச் சார்ந்தவள் என்பதும், அங்கிருந்து புறப்படும் தென்றல் காற்றை வங்கநாட்டுக்குத் தூதாக அனுப்புவதாக அவ்விலக்கியம் பகர்கின்றது. தமிழகம் பற்றிய பல வருணனைகள் அதில் உள்ளன.

தலைவன் தலைவிக்கும், அல்லது தலைவி தன் தலைவனுக்கும், புலவர்கள் வள்ளல்களுக்கும், பக்தர்கள் தெய்வத்திற்கும் தூது அனுப்புவது அவ்விலக்கிய வகையாகும். காற்று, மேகம், பறவை, விலங்கு, புகையிலை, சவ்வாது முதலிய பல பொருள்களைத் தூதாக அனுப்பிய நூல்கள் நம் தமிழகத்தில் மலர்ந்துள்ளன.

அவ்வரிசையில், நெல்லை ஒரு வள்ளலுக்குத் தூதாக அனுப்பிய இலக்கியம்தான் "நெல்விடு தூது' என்பதாகும். 

திருநெல்வேலி மாவட்டம் தென்காசிப் பகுதியில் திகழ்ந்த வடகரை செம்புலிக் குமாரதுரை சின்னணைஞ்சபூபதி என்ற பெரியசாமி துரையின் தானாதிபதியாக இருந்த வைத்தியநாத பிள்ளை என்பவருக்கே இந்த நெல் விடு தூது பாடப்பெற்றதாகும். இந்நூலைப் பாடிய புலவர் தன் பெயரினை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

"நெல் விடு தூது' என்ற நூலினை யாத்த அந்தப் பெரும்புலவர், தான் அறிந்த நாற்பத்தைந்து விதமான நெல் வகைகளைப் பட்டியலிட்டு உரைத்துள்ளார். அதில் ஒருவகை நெல் அவர்கள் வாழ்ந்த பகுதியின் தெய்வமான "திருக்குறுங்குடி நம்பியின்' பெயரால் அமைந்துள்ளது என்பது வியப்பளிக்கின்றது.

கோடைக்குறுவை, குளவாளை, செங்குறுவை, காடைக்கழுத்தான், கருங்குறுவை, மொட்டைக் குறுவை, நெடுவாற்குறுவை, குறுவைக் கிளையான், கட்டையன், மூக்கன் சம்பா, சிறிய முள்ளுச் சம்பா, காக்கைநிற கருஞ்சம்பா, தக்கான நேரிய சம்பா, புழுகுச் சம்பா, சீரக சம்பா, செஞ்சம்பா, தென்னரங்கன்சம்பா, குறுங்கை நம்பி சம்பா, புன்னைவனச் சம்பா, வன்னச்சம்பா, தனியானைக் கொம்பன், செம்பாளை, சிறகி, சிறுகுருவி, பாற்கடுக்கன், பனைமூக்கன், சிறுதி, வாலன் சிறை மீட்டான், பூசைப் பாடி வெள்ளை, மீளுஞ்சிறை மீட்டான், மலைமுண்டன், வாணன் கருஞ்சூரை, கருத்த நிக்கராதி, கனவெள்ளை திக்கராதி, பொலிவீரகஞ்சுகன், வெள்ளைமுத்து, சொரிகுறும்பை, முத்துவெள்ளை, போரிங்கல்மீட்டான், புழுதிபுரட்டி, சொக்கன்சம்பா, மாராசவாணன், வாள்சுறுணை, வாலன், சீராம பாணம் என நாற்பத்தைந்து விதமான நெல்மணிகளை தம் நெல்விடு தூதில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தென்னரங்கன்சம்பா என்பதும் குறுங்கை நம்பி சம்பா என்பதும் திருவரங்கத்து பெருமான் மீதும், திருக்குறுங்குடி நம்பி மீதும் கொண்ட பற்றால் பக்தியால் பெயரிடப்பட்ட நெல்மணிகளாகும்.

 "நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'  என்பது மோசிகீரனாரின் வாக்காகும். சங்க காலத்தில் யானை நின்றால் அது மறையும் அளவு தாளின் உயரமுடைய நெல் வகை இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. 

வெண்நெல், செந்நெல் என இருவகை நெல் இனங்களை  சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. மங்கல நிகழ்வுகளில் பூவொடு நெல் உகிர்ப்பது பழைய மரபு. "நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளியவென' என்ற காவிரிப் பூம்பட்டினத்துக் காரிகண்ணனாரின் வாக்கு என்றும் மெய்ப்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com