நிழல் கொடுத்த பறவைகள்

இயற்கையை போற்றிப் பாடிய சங்கப் புலவர்கள், பறவைகளையும் போற்றியதோடு தமது பாடல்களில் அன்னம், அன்றில், குருகு, வெண்குருகு, பசுங்கால் குருகு, வெண்பூக் குருகு, வெண்தலைக் குருகு, கருங்கால் குருகு
நிழல் கொடுத்த பறவைகள்

இயற்கையை போற்றிப் பாடிய சங்கப் புலவர்கள், பறவைகளையும் போற்றியதோடு தமது பாடல்களில் அன்னம், அன்றில், குருகு, வெண்குருகு, பசுங்கால் குருகு, வெண்பூக் குருகு, வெண்தலைக் குருகு, கருங்கால் குருகு, வெள்ளாங் குருகு, சிறுவெள்ளாங் குருகு, யானையங்குருகு, கொக்கு, செங்கால்நாரை, புறா, மாடப்புறா, மணிப்புறா, சிறிய திட்டுப்புறா, சாம்பல் புறா, பச்சைப் புறா (போகில்), குயில், கிளி, வங்கா, தூக்கணாங்குருவி, வானம்பாடி, கழுகு, பருந்து, சிறுகருங்காக்கை, அண்டங்காக்கை, நீர்க்கோழி, நீலக்கோழி, மனைக்கோழி, மனையுறைக்கோழி, கானங்கோழி, கம்புன்கோழி, சீரல் (மீன்கொத்திக் குருகு), ஆந்தை, ஊமன், வானம்பாடி, குரால், கூகை, எழால், குடுமி, கடுகு, எருவை, பாறு, பொகுவல், கிணர்துகள், பூமி (கெளதாரி), குறும்பூமி (காடை), காணர்துள் (ஆள் காட்டிக் குருவி) ஆகிய பறவைகளைப் பற்றிய செய்திகளையும் பதிவு செய்துள்ளனர்.

தொல்காப்பியம் பலவிதமான பறவைகளை ஒரே பெயரில் 'புள்' என்றும், அந்தப் புள் ஐயறிவு உடையது என்றும் சொல்கிறது. 

புள் என்கிற பறவைகள் தமிழ் இலக்கியத்தோடும் புராணங்களோடும் தொடர்புடையவை. இராமனுக்குக் கருடன் உதவியதாக இராமாயணம் சொல்கிறது. தன்னை எதிர்த்த சூரனை மயிலாகவும் கோழியாகவும் முருகன் கொண்டதாக முருக வரலாற்றில் காணப்படுகிறது. 

சிபிச் சக்கரவர்த்தி புறாவின் துன்பம் அகலத் தன் உடம்பை அரிந்து புறாவின் எடை அளவு தசையைப் பருந்துக்குக் கொடுத்தது வரலாறு. இதில் புறாவையும் காப்பாற்றிப் பருந்துக்கும் உணவு கொடுத்த சாதுரியத்தை நம்மால் காண முடிகின்றது. 

குளிரில் நடுங்கிய மயிலுக்கு பேகன் போர்வை போர்த்தியதை இலக்கியம் காட்டுகிறது. 

புறாக்களைப் பழக்கி சேதி சொல்லவும், தூது அனுப்பவும் பழந்தமிழர்களால் முடிந்தது.  இவற்றையெல்லாம் பார்க்கிறபோது பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான நட்புறவைக் காண முடிகிறது. இவற்றின் உச்சமாக ஒரு செய்தி அகநானூற்றில் இருக்கிறது. 

"வெளியன் வேண்மான் ஆஅய் எயினை' என்னும் குறுநில மன்னன் இரவலர்க்கு வழங்கும் வள்ளல் தன்மை உடையவன் என்பதோடு புள்ளினங்களையும் (பறவைகளைப்) பேணிய புரவலனாகவும் விளங்கியவன். அவன் மிஞிலி என்பவனோடு போரிட்டுக் களத்திலே காயம் பட்டு வீழ்ந்து உயிர் நீத்தான். 

உயிரற்ற அவன் உடலில் சூரியனின் கதிர்கள் வெம்மையைக் கொட்டாதிருக்கப் பறவைகள் வானத்திலேயே வட்டமிட்டுத் தம் சிறகுகளால் பந்தரிட்டு நிழல் செய்து காந்தன (புள் ஒருங்கு அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி நிழல்செய்து உழறல் காணேன்) என்பது வியக்கத்தக்க செய்தியாக இருக்கிறது. 

மனிதர்கள் பறவைகளுக்கு இரங்குவது இயல்பு ஆனால் பறவைகள் மனிதர்களுக்காக இரங்கி இறந்துபோன ஆயினனுக்காக அவன் உடலுக்கு நிழல் கொடுத்தது போன்ற நிகழ்வை நாம் வேறு எங்கும் காண முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com