இந்த வாரம் கலாரசிகன் - (18-09-2022)

சென்னையில்  குடியேறாமல், அவரவர் ஊரில் இருப்பதாலேயே பல தமிழ் ஆளுமைகள் போதிய கவனம் பெறாமலும், தகுதிக்கேற்ற மரியாதை பெறாமலும் போகிறார்கள்.
இந்த வாரம் கலாரசிகன் - (18-09-2022)

சென்னையில்  குடியேறாமல், அவரவர் ஊரில் இருப்பதாலேயே பல தமிழ் ஆளுமைகள் போதிய கவனம் பெறாமலும், தகுதிக்கேற்ற மரியாதை பெறாமலும் போகிறார்கள். கடந்த வாரம் சனிக்கிழமை, எனது பெருமதிப்புக்குரிய பேராசிரியர் ச. கணபதிராமன் ஐயா இயற்கை எய்தினார். திருநெல்வேலியிலிருந்து தனது சொந்த கிராமமான அய்யாபுரத்தில் குடியேறி இருந்த அவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுடன்தான் இருந்து வந்தார். 

பேராசிரியர் கணபதிராமன் ஐயா குறித்து நான் இதற்கு முன்பு சில முறை பதிவு செய்திருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே சில காலம் பணியிலும் இருந்தவர் அவர். தூத்துக்குடி காமராஜர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.

இவையெல்லாம் அவரது ஆசிரியர் பணிகள். தமிழாசிரியர் என்பதைவிட அவர் சிறந்த எழுத்தாளராகவும், இலக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய வரலாறு, நெல்லைப் பகுதியில் சிறு தெய்வ வழிபாடு உள்ளிட்ட 31 நூல்களை எழுதி இருக்கிறார். விடுதலைப் போராட்டத்தில் நெல்லையின் பங்கு குறித்து அவர் எழுதிய "பொங்கி எழுந்த பொருநை' மிகச் சிறந்த ஆவணப் பதிவு.

பேராசிரியர் கணபதிராமனின் வாழ்நாள் சாதனை என்று அவரது "கடையத்தில் பாரதி' நூலைத்தான் நான் கருதுகிறேன். தனது மனைவியின் ஊரான கடையத்தில் பாரதியார் வாழ்ந்த நாட்கள், தமிழுக்குப் பல வித்தியாசமான பாடல்களை வழங்கின என்பதை அந்தத் தொகுப்பு உணர்த்துகிறது. கடையத்தில் பாரதியார் இரு ஆண்டுகள் வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து அந்தக் கவிதைகள் எழுதப்பட்ட பின்னணியை ஆய்வு செய்து உருவாக்கிய படைப்பு "கடையத்தில் பாரதி'. 

"சொல்லின் செல்வர்' ரா.பி. சேதுப்பிள்ளையைத் தனது ஆசானாக ஏற்றுக்கொண்டவர் பேராசிரியர் கணபதிராமன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய அந்த குரு - சிஷ்ய உறவு, ரா.பி. சேதுப்பிள்ளையின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. அவரது கடைசிக் காலத்தில் பிள்ளைக்குப் பிள்ளையாக இருந்து அவருக்குப் பணிவிடைகள் செய்தது மட்டுமல்ல, அவர் இறந்த பின் இறுதிச்சடங்கு செய்து தனது நன்றிக்கடனை செலுத்தியவர் கணபதிராமன் ஐயா.

கணபதிராமன் ஐயா குறித்து நான் சொன்ன செய்திகளைக் கேட்ட திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத் தலைவர் டி.எஸ். தியாகராசன், அவருக்கு "கபிலவாணர் விருது' வழங்கி கெளரவித்ததும், 2017-இல் தமிழக அரசு அவருக்கு "பாரதி விருது' வழங்கி மரியாதை செலுத்தியதும் அந்தப் பெருமகனாரின் பங்களிப்புக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.

கடந்த 95 ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டாற்றி வரும், தமிழகத்தின் மிகப் பழைமையான தென்காசி திருவள்ளுவர் கழகத்தை அதன் தலைவராகக் கடந்த 20 ஆண்டுகளாக வழிநடத்தி வந்தவர் பேராசிரியர் கணபதிராமன் ஐயா. கொள்ளை நோய்த்தொற்று இடைபுகுந்து குழப்பம் விளைவிக்காமல் இருந்திருந்தால், "தினமணி'யின் "மகாகவி பாரதியார் விருது' வழங்கி அவரை சிறப்பித்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

---------------------------------------------------------

பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்குக் கதைகள் படிப்பதில் ஆர்வம் உண்டு. "ஆனந்தவிகடன்', "கல்கி' போன்ற வார இதழ்கள் அதற்குக் காரணம் என்பது நிஜம். பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்கு சென்றபோதும், சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகரித்த பிறகும் கூட கதை படிக்கும் பழக்கம் என்னை விட்டு அகலவில்லை. அவ்வளவு ஏன், இன்று வரை சிறுகதை படிப்பது என்பது எனக்கு சாக்லேட் சாப்பிடுவதுபோல...

கல்லூரிக் காலத்தில் ஜனரஞ்சக இதழ்கள் அல்லாமல், வித்தியாசமான புதிய இதழியல் முயற்சிகளில் ஒரு சில சக மாணவர்களைப் போலவே எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது வெளிவந்த, இப்போதும் பசுமையாக நினைவில் நிற்கும் பரீட்சார்த்த இதழியல் முயற்சிகள், "கசடதபற', "ஞானரதம்' இதழ்கள். "கணையாழி', "தாமரை' இதழ்களைப் படிப்பவர்கள்தான் மேம்பட்ட ரசனையுடையவர்களாக அப்போது கருதப்பட்டனர்.

திருநெல்வேலி ஜங்ஷனிலும், டவுனிலும் உள்ள ஓரிரு கடைகளில்தான் அப்போது "கணையாழி', "கசடதபற' இதழ்கள் கிடைக்கும். பாபநாசம் செந்தமிழ்க் கல்லூரியில் படிக்கும் நண்பர் ஒருவர் "ஞானரதம்' இதழுக்கு சந்தா செலுத்தி வரவழைப்பார். "அஃக்', "பிரக்ஞை' இதழ்கள் வெளிவந்தபோது நான் பரீட்சார்த்த இலக்கியத்திலிருந்து விலகி இருந்ததால் அவற்றைப் படித்ததில்லை.

புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது நாரணோ ஜெயராமன் எழுதிய "வாசிகள்' என்கிற புத்தகம். அவரது பெயர் ஏதோ பொறிதட்டியதுபோல நினைவை முட்டியது. புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். "பூட்சைக் கழற்றி' என்றொரு சிறுகதை. தலைப்பு பரிச்சயமானது; கதையும்தான். விறுவிறுவென்று படிக்கப் படிக்க, அரை நூற்றாண்டுக்கு முன்னர் கல்லூரி நாட்களில் நான் படித்த நினைவு தூசி தட்டப்பட்டது. அதேபோலத்தான் "வெளியே ஒருவர்' சிறுகதையும்.

அந்த இரண்டு கதைகளும் நான் ஏற்கெனவே படித்தவை. ஏனைய கதைகள் எனக்குப் புதியவை; ஆனால் காலத்தால் பழையவை. எழுபதுகளில் வெளிவந்தவை. "பிரக்ஞை', "ஞானரதம்', "அஃக்' இதழ்களில் பிரசுரமான அந்தக் கதைகள் இப்போது தேடி எடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நாரணோ ஜெயராமன் வித்தியாசமான கதை சொல்லி. எதார்த்தமான எழுத்து அவருடையது. எழுத்துக்கு சிரஞ்சீவித்தன்மை உண்டு என்பதற்கு "வாசிகள்' புத்தகம்  எடுத்துக்காட்டு. பாருங்களேன், அரை நூற்றாண்டுக்கு முன்னர் எழுதிய நாரணோ ஜெயராமனின் கதைகள் அவரது 76-ஆவது வயதில் புத்தக வடிவம் பெறுகின்றன. அதுவும், எழுதுவதையே அவர் எழுபதுகளில் நிறுத்திவிட்டார் என்றாலும்கூட...

---------------------------------------------------------

ஜப்பானியர்கள் பிறப்பு, வாழ்வு போலவே மரணத்தையும் ஒரு நிறைவான செயலாகவே கருதுகின்றனர். மரணத்தை ஓர் இலையின் உதிர்வு போன்றே ஏற்றுக்கொள்கின்றனர். பல கவிஞர்கள், தாங்கள் இறப்பதற்கு சற்று முன்னர் கவிதை எழுதி வைக்கிறார்கள். அவை "மரணக் கவிதைகள்' எனப்படுகின்றன.

பல்லவி குமார் தொகுத்திருக்கும் "உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்' கிழக்காசிய நாடுகளில் உள்ள கவிஞர்களின் மரணக் கவிதைகள் குறித்த ஆய்வை முன்னெடுக்கிறது. அதிலிருந்து ஒரு கவிதை இது - 
கடைசியாய் மனிதனின் ஆசை
அவன் புரிந்துகொள்கிறான்
காற்று

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com