சிலம்புகழி நோன்பு

சிலம்புகழி (சிலம்புகழீஇ) நோன்பு என்கின்ற ஒரு சடங்கு பற்றி சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலியவற்றில் விரிவாக பேசப்படுகிறது.

சிலம்புகழி (சிலம்புகழீஇ) நோன்பு என்கின்ற ஒரு சடங்கு பற்றி சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலியவற்றில் விரிவாக பேசப்படுகிறது. சிலம்பு என்பது பெண்கள் காலில் அணியும் ஒலி தரக்கூடிய ஓர் அணிகலன். கழி என்றால் நீக்குதல் என்று சொல்லலாம். 

சிலம்பு என்பதை மலையின் பெயர்களுள் ஒன்றாக திவாகர நிகண்டு குறப்பிடுகிறது. தொல்காப்பியர் கழி என்கிற சொல்லை,
கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்.சொல்.நூ.17)
என்று உரியியலில் குறிப்பிடுகின்றார். கூர், கழி என்கிற இரண்டு உரிச்சொல்லும் தான் உணர்த்துகின்ற பொருளின் மிகுச்சிறப்பை உணர்த்தும் எனலாம்.  

சிறப்புஞ் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓரா யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்லென நோவல் யானே 
(அகநா. 369)

அகநானூற்றில் நக்கீரரால் பாடப்பட்ட இப்பாடல் செவிலித்தாயின் புலம்பலாக 
அமைகிறது. 

பாலைத்திணைப் பாடலான இதில் கூறப்பட்டுள்ள செய்தி கவனிக்கத்தக்கது. அதாவது, நல்ல மதிப்பும் உயர்வும் இல்லாமல் சிறிய ஊரில் வறுமையுற்ற பெண்கள் வசிக்கின்றனர். அவர்களின் வீடுகள் புல்வேய்ந்ததாக இருக்கின்றது. ஒரேயொரு பசு மட்டும் கட்டக்கூடிய சிறிய இடத்தில் ஒற்றைத் தூண் மட்டுமே உள்ள முகப்பினைக் கொண்டுள்ளது. பொருத்தமில்லாத வறுமை உடைய மனையில் சிலம்பு கழித்து பின் தலைவனைத் திருமணம் செய்துகொண்டாளோ எம் மகள் என்று புலம்புகின்றாள் செவிலி. 

வறுமையுற்றோர் இல்லத்தில் நடக்கும் சிலம்புகழி நோன்பிற்கும் வளமை உடையோர் இல்லத்தில் நடக்கும் சிலம்புகழி நோன்பிற்கும் பெருத்த வேறுபாடு இருந்திருக்கின்றது. அதாவது, இச்சடங்கு திருமணத்திற்கு முன்பு பெண் வீட்டில் நிகழ்த்துவது.   

சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் சிலம்பு எனும் சொல் இடம்பெற்றுள்ளது. அது மலை, ஓசை, காற்சிலம்பு என்கிற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது. சிலம்பு கழி நோன்பு என்பதில் வரும் சிலம்பு என்பது பெண்கள் அணியும் அணிகலன் என்பது தெரிகிறது. பெண் குழந்தை பிறந்தவுடன் அணிவித்து அவள் பெரியவளாகி திருமணம் ஆகும் வரை அணிந்திருக்கும் ஓர் ஆபரணம். அதனைக் (நீக்குதல்) கழட்டுதலைச் சடங்காகச் செய்யவேண்டிய அவசியம் என்ன? அதுவும் வறுமையான குடும்பத்திலும் வளமையான குடும்பத்திலும் நிகழ்தலுக்கான காரணம் என்ன? 

இந்த இரண்டு கருத்தாடல்களுக்கும் ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கவேண்டும். சொத்துடைச் சமூகமாக்கத்திற்கும் பெண்ணிற்குக் கற்பைத் திணித்ததற்கும் சிலம்பு கழி நோன்பு எனும் சடங்கிற்கும் இணைவு இருக்கவே வாய்ப்புள்ளது. தன் மகள் திருமணம் ஆகின்ற வரை கற்புடைவளாக இருக்கிறாள் என்பதை ஊரே அறியவேண்டும் என்னும் நோக்கம் இதில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com