இந்த வாரம் கலாரசிகன் - (29-01-2023)

நேற்று திருவனந்தபுரத்தில் கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலாவின் இரண்டாவது மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தேன்.
இந்த வாரம் கலாரசிகன் - (29-01-2023)

நேற்று திருவனந்தபுரத்தில் கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலாவின் இரண்டாவது மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ரமேஷ் சென்னிதலா. 

அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்திலிருந்து எனது நண்பர். தனது பழைய நண்பர்களை ஒருவர் விடாமல் நினைவில் வைத்துத் தனது மகன் திருமணத்துக்கு அழைத்தபோது, அதில் பங்கு பெறாமல் இருக்க மனம் ஒப்பவில்லை. 

கேரள அரசியல்வாதிகளின் பண்பும், நாகரிகமும் வியக்க வைக்கிறது. அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து அவர்கள் தனிப்பட்ட முறையில் பழகும் விதத்தையும், நட்புறவுடன் செயல்படும் நாகரிகத்தையும், தமிழகத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதை அங்கே சென்றபோது நான் உணர்ந்தேன். காங்கிரஸ் தலைவர் ஒருவரின் குடும்ப நிகழ்வில், அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் இடதுசாரி கட்சித் தலைவர்கள் பலர் குடும்ப நண்பர்களைப் போல உறவாடும் அதிசயத்தை என்னவென்று சொல்ல?

முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்தினருடன் வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ஏ.கே. அந்தோணியும், உம்மன் சாண்டியும் வாழ்த்த வந்திருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வந்தது மட்டுமல்ல, அவரைச் சுற்றி ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே சூழ்ந்து கொண்டிருந்தது. பொறுமையாக அனைவருக்கும் வணக்கம் செலுத்துவதும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதுமாக இருந்தார் அவர்.

அரசியல் ரீதியாக ஆளுநருக்கும், பினராயி விஜயன் அரசுக்கும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள், பிரச்னைகள். ஆனால், பொதுவெளியில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரும், எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்குக் கொடுக்கும் மரியாதையும், அவருடன் அளவளாவியதும், புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததும் எனக்குத் தலைசுற்றலை ஏற்படுத்தியது.

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானை 1987 முதல் எனக்குப் பரிச்சயம். அதனால் திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரை சந்திக்க ராஜ் பவன் சென்றேன். அங்கே போனால் இன்னொரு வியப்பு - கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஷம்சீர் தனது மனைவி, மகனுடன் ஆளுநரை சந்திக்க வந்திருந்தார்.
அண்டை மாநிலத்தில் காணப்படும் அரசியல் முதிர்ச்சி நம்மிடையே இல்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.

-----------------------------------------------------

சென்ற வாரமே எழுத வேண்டும் என்று நினைத்து எழுதாமல் விட்டதை இந்த வாரம் பதிவு செய்கிறேன். கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட எழுத்தாளர் அ. முத்துலிங்கம் விருது பற்றி எழுதி இருந்தேன். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் குறித்து ஒருசில வரிகள் எழுத முடிந்ததே தவிர, அவரது படைப்புகள் குறித்து எதுவும் பதிவு செய்ய இயலவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் முயற்சி இது.

எழுத்தாளர் ஜெயமோகனின் மனைவி அருண்மொழி நங்கையை நான் அறிமுகப்படுத்த முனைவது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கும். "சுபமங்களா'விலிருந்து தொடங்கி நீண்ட வரலாறு அவரது எழுத்துக்கு உண்டு. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் என்கிற அடையாளங்களைத் தாண்டி ஒரு சிறந்த வாசகர் என்கிற இன்னொரு பரிமாணமும் அவருக்கு உண்டு என்பதை அவரது மணவாழ்க்கை ஏற்கெனவே உறுதிப்படுத்தி இருக்கிறது.

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின், தனக்குப் பிடித்த 13 தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தொகுத்து அருண்மொழி நங்கை வெளிக்கொணர்ந்திருக்கும் நூல் "நடுவே கடல்'. அருண்மொழி நங்கை தனது என்னுரையில் குறிப்பிடுவது போல, எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தை ஈழப் படைப்பாளிகளில் வரிசையிலும் வைக்க முடியாது; 

தமிழக படைப்பாளிகளின் வரிசையிலும் அவர் இல்லை. ஏனென்றால், அவரது களம் பெரிது. விரிந்து பரந்தது. "உலகளாவிய பொதுமை அவரது நுண்ணறிவுக்கு மட்டுமே புலப்படுகிறது. அதனாலேயே முத்துலிங்கம் மிகமிக தனித்துவம் பெற்ற படைப்பாளியாகிறார்' என்பதில் எனக்கு முழுக்க முழுக்க உடன்பாடு உண்டு.

"நடுவே கடல்' தொகுப்பில் அருண்மொழி நங்கை தேர்ந்தெடுத்திருக்கும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக் களம் சார்ந்தது. முற்றிலும் மாறுபட்ட சூழலில் புனையப்பட்ட வேறுபட்ட கதை கருவில் அமைந்தவை. முதல் கதையான "திகட சக்கரம்' எடுத்த எடுப்பிலேயே உள்ளே இழுத்து விடுகிறது. வீரசோழியத்தையும், கச்சியப்பரையும், திகட சக்கரத்தையும் நவீன புனைவின் அடித்தளமாக்கிய அந்த சாதுரியம் வியப்பை ஏற்படுத்துகிறது.

அதற்குப் பிறகு என்ன, பாதாம் ஹல்வாவில் விரலை வைத்துக் கொஞ்சம் சாப்பிட்ட பிறகு, மீதியைப் பிறகு சாப்பிடலாம் என்று யாராவது வைத்துவிட்டுப் போவார்களா? மற்ற வேலைகள் கிடக்கட்டும் என்று, ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா என்று அவரது சிறுகதைகளுடன் உலகம் சுற்றக் கிளம்பி விடுகிறோம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. ஆனால், சுவாரஸ்யம் மட்டும் ஒரே மாதிரி...

அ. முத்துலிங்கத்தைப் பாராட்டுவதா, இல்லை தேர்ந்தெடுத்துத் தொகுத்த அருண்மொழி நங்கையைப் பாராட்டுவதா, தெரியவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். அ. முத்துலிங்கத்தின் எழுத்துக்கு "நடுவே கடல்' அந்த ஒரு சோறு!

-----------------------------------------------------

புத்தகக் காட்சி அரங்குகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது, விழிகள் பதிப்பக அரங்கில் நுழைந்தேன். விழிகள் தி. நடராசன் தனது "வெளிர் வானம்' கவிதைத் தொகுப்பை என்னிடம் நீட்டினார். அங்கேயே படிக்கத் தொடங்கினேன் நான். அதிலிருந்து ஒரு ஹைக்கூ -
எங்கெங்கும் வேர்கள்
குத்திக் கிழித்தாலும்
காயமடையவில்லை பூமி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com