சேக்கிழார் காட்டும் ஒளிநெறி

தெய்வச் சேக்கிழார் தம்முடைய பெரியபுராணத்தில் நான்கு நெறிகளைச் சுட்டுகிறார்.
சேக்கிழார் காட்டும் ஒளிநெறி

தெய்வச் சேக்கிழார் தம்முடைய பெரியபுராணத்தில் நான்கு நெறிகளைச் சுட்டுகிறார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நான்கு நெறிகளில் நின்று ஒழுகியவர்கள் 63 நாயன்மார்கள். இவ்வடியார்கள் வழிபடும் ஆண்டவனைச் சுட்டுகிறபோது, ஒளியாக இறைவனைச் சுட்டுகிறார் தெய்வச் சேக்கிழார். சோதியாக இறைவன் ஒளிர்வதைக் குறிப்பாகச் சில இடங்களில் எடுத்துரைக்கிறார்.

இறைவனின் உருவம், 1. அவனின் அறிவு வடிவமாகிய சோதி (ஒளி) 2. திருவடியாக ஒளிரும் அச்சோதியின் அளவிலா அளவு 3. அலகில் சோதி 4. ஆண் - பெண் இரண்டும் கடந்த நிலை 5. அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாது கோடி சூரியப் பிரகாசமான அற்புத வடிவம் 6. அணுவுள் அமைந்துள்ள உயிராகிய சிவப்பிரகாசம் 7. அதுவே பரசிவம் 8. நம் ஊனுடம்பிற்குள் உள்ள தில்லைச் சிற்றம்பலமாகிய இருதயகமலத்துள் இடையறாது ஆடும் சிவம். 9. அற்புதக் கோலத்தோடு ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் பரஞ்ஜோதி 10. அந்த ஜோதியின் பொன்னார் திருவடிகளைக் கண்டு கண்டு போற்றுவோம் என்கிறார் தெய்வச் சேக்கிழார்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என சோதி வடிவாகிய இறைவனை வணங்கிப் போற்றுகிறார் தெய்வச் சேக்கிழார்.

இறைவனின் "ஆடும்பாதம்', "அறிவெனும் பாதம்", "அழகிய பாதம்' "தூக்கிய பாதம்', "செந்தாமரைப் பூம்பாதம்' எனப் பல்வேறு பெயர்களால் அருளாளர்கள் போற்றி வணங்கும் இடது பாதமாகிய அம்மையின் திருவடிகளுக்கு வணக்கம், வணக்கம் என மேற்சுட்டிய பாடலில் போற்றி உரைக்கிறார் தெய்வச் சேக்கிழார்.

அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாகவும் தான் நிராதாரமாகவும் - ஏகன் ஆகவும் அனைத்து உலகங்களும், உயிர்களும் இயங்குவதற்கு அச்சாணியாக -ஆதாரமாக ஊன்றி நிற்கும் பாதமாகிய சிவத்தையும் - இவையனைத்தையும் இயக்கும் திருவருள் வீழ்ச்சி எனப்பெறும் தூக்கிய பாதமாகிய சக்தியையும் (இவ்விரு இணையார் திருவடிகளை) கண்ணாரக் கண்டு உருகி உருகி வழிபடுவதே பத்திமை நெறி.

இந்த நிலையை அடையத் தன்னை இழந்த நலத்தால் தொண்டு செய்ய வேண்டும். இதுவே பெரியபுராணத்தின் பிழிவு. இத்தொண்டு செய்வோரே தம்முள் பிரம்மப் பிரகாசமாக ஒளிரும் நமச்சிவாயமாகிய திருவடிகளைக் காணமுடியும். இத்திருவடிகளே நம்முள் பிரம்மப் பிரகாசமாக ஒளிரும் நமசிவாயம். இமைக்கும் நேரம்கூட நம்மைவிட்டு நீங்காமல் நம்முள் ஒளிரும் சோதியே அது.

இந்த ஜோதி சுயம் பிரகாசமானது. இதன் தன்மையை வடலூர் வள்ளற் பிரானார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
இந்த ஜோதியே நம்முள் பேரொளிப் பிழம்பாக ஒளிர்கிறது.
சோதியாகிய - திருவடியாகிய சிவசக்தியைக் கண்டு களிப்பவரே சித்தர், முத்தர், பத்தர், ஞானி, யோகி ஆகிய எல்லாம். சிவசக்தியாகிய கண்ணார் திருவடிகளை அடைவதற்காக அனைத்தையும் இழந்தவர்களே துறந்தவர்களே நாயன்மார்கள்.
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா
அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய
பொருளும் ஆகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய்
ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம்
போற்றி போற்றி எனும் இப்பாடலில், "ஆதிப்பொருளாகவும், நடுவில் அமர்ந்திருக்கும் பொருளாகவும், பதி, பசு, பாச, ஞானங்களால் அறியவொண்ணாத ஜோதி வடிவமாகவும், தோன்றிய பொருளாகவும், ஏகமாகியும், ஆணுமாகியும் பெண்ணுமாகியும் இவ்விருவரும் கலந்த நிலையில் அம்மையப்பராகவும் தில்லையில் நடனமாடும் இறைவன் திருக்கூத்திற்கு வணக்கம்' என்று போற்றி துதி செய்கிறார் தெய்வச் சேக்கிழார்.

மேலும்,
கற்பனை கடந்த சோதி கருணையே
உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின்
மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள்
நின்று
பொற்புடன் நடம்செய்கின்ற பூங்கழல்
போற்றி போற்றி என்று, கற்பனை கடந்த சோதியாகவும், கருணையின் வடிவமாகவும் அந்தப் பொருள் விளங்குகிறது.

அரிய மறைகளின் உச்சிப் பொருளாகவும் உபநிடதங்களால் உணர்த்தப் பெறுகின்ற ஞானப் பெருவெளியாகவும் அப்பொருள் திகழ்கிறது. திருச்சிற்றம்பலத்தில் அழகுடன் நடனமாடுகின்ற மலர்க்கழல்களைப் போற்றிப் போற்றி வணங்குகிறேன் எனத் துதி செய்கிறார் தெய்வச் சேக்கிழார்.

பெருஞ்சோதிப் பெருந்தெய்வமாகப் பரம்பொருள் விளங்குகிறது. இந்தச் சிவப் பரம்பொருளைப் பரஞ்சுடர் என்றும் பிரம்மப் பிரகாசம் என்றும் போற்றுகின்றனர். இந்த ஜோதியினை, "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி' என்றும், "கேழில் பரஞ்ஜோதி' என்றும் "சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே' எனவும் மாணிக்கவாசகர் போற்றி வணங்குகிறார்.
இந்தப் பெருஞ்ஜோதி தெய்வ வழிபாட்டை மேலும் விளக்கமாக தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

வானாகி நிலனாகி அனலுமாகி
மாருதமாய் இருசுடராய்
நீருமாகி
ஊனாகி உயிராகி
உணர்வுமாகி
உலகங்கள் அனைத்துமாய்
உலகுக்கப்பால்
ஆனாத வடிவாகி நின்றார்.......
(திருஞானசம்பந்தர் புராணம்: 563)

இந்தப் பெருஞ்ஜோதிப் பெருந்தெய்வமே சூரியனாகவும் நிலவுமாகவும் இருசுடர்களாய் விளங்குகிறது. வானமும் மண்ணும் தீயும் காற்றும் இருசுடர்களாகவும் இறைவன் திகழ்கிறான். நீரும், ஊனும், உயிரும், உணர்வுமாகியும், உலகங்கள் எல்லாம் ஆகியும் விளங்குகிறான். உலகங்களுக்கு அப்பாற்பட்ட கேடில்லாத வடிவாகி நின்ற அத்தகு இறைவனின் சிவந்த திருவடிகளைத் துதித்துப் போற்றுகிறார் தெய்வச் சேக்கிழார்.

மேற்சுட்டிய பாடல்களில், இறைவனின் பேருருவத்தை மிக அற்புதமாக தெய்வச் சேக்கிழார் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இறைவனின் வடிவம் அலகில் ஜோதி வடிவினது. அந்தப் பெருஞ்ஜோதி ஆதியாக இருக்கிறது. நம் உடம்பிற்குள்ளே நடுவில் (புருவ நடு) அமைந்திருக்கிறது. அந்த ஜோதிப் பொருள் அளக்க முடியாத அளவாக, அளவிலா அளவாகவும் இருக்கிறது. அது தொடக்கமும் முடிவும் அற்ற பெருஞ்சோதிப் பெருந்தெய்வமாக இருக்கிறது. இந்தப் பெரும்பொருள் செயலுக்கு வரும்போது அருட்பெருஞ்ஜோதியாக விளங்குகிறது என அருட்பிரகாச வள்ளலார் குறிப்பிடுகிறார்.

இந்த ஜோதி நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அறிவால் அளக்க முடியாதது. நம் ஊனுடம்பிற்குள்ளே சிற்பரமாக விளங்கக்கூடிய திருச்சிற்றம் பலத்தில் நின்று ஆடுகிறது. இந்த ஜோதியே திருவடி. இந்த திருவடியில் இருந்து ஒலி ஒளி (நாத விந்து) ஆகிய இரண்டும் வெளிப்படுகின்றன. இந்தப் பேருண்மைகளை மேலே சுட்டிய தெய்வச் சேக்கிழாரின் பாடல்கள் உணர்த்துகின்றன.

இந்த ஜோதி சொரூபத்தை உணர்ந்து, உருகி, உருகிப் போற்றினால் தெய்வம் நம் முன்னால் வந்து காட்சி தரும்; நம்மோடு பேசும். "கண்ணால் யானும் கண்டேன் காண்க' என மாணிக்கவாசகர் போல் நாமும் கண்ணாரக் கண்டு களிப்படையலாம்.

அலகில் ஜோதியனைக் கண்டு ஆனந்தம் உறுவோம்; அளப்பிலா உணர்வு பெறுவோம்; ஆதியாகிய ஜோதியோடு இணைவோம். அதுவே ஜீவப் பிரம்ம ஐக்கியம் ஆகும்.

கட்டுரையாளர்:

தமிழ் மொழித்துறையின் மேனாள் தலைவர்
சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com