செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது
நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும்
நாடுக, தான் செய்த நுட்பத்தைக் - கேளாதே
ஓடுக, ஊர் ஓடுமாறு! (பாடல்: 392)
தம்மை ஒரு சிலர் சார்ந்து இருக்கும் போது அவர்கள் துன்பம் அடையும்படி தனியே விட்டுப் பிரிந்து செல்லுதல் கூடாது. துறவியர் காட்டிய வழிகளை விட்டு விலகி நிற்க வேண்டாம்.
தானே ஆராய்ந்து கண்டுபிடித்த நுட்பத்தை ஒரு முறைக்குப் பலமுறையாக ஆராய்ந்து பார்த்திடுக. ஊரும் உலகமும் ஒத்துச் செல்லும் வழியில் கேள்வி கேட்டுக் கொண்டு நில்லாது ஊரோடு ஒத்து வாழ்க.