இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

News image

ராமாயணம்

Updated On :14 ஜூன் 2026, 5:22 pm IST

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும். இந்த இரண்டையும் வழியொட்டி பல்வேறு படைப்புகள் பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் நாடெங்கிலும் தோன்றின. அவை கூறும் நன்னெறிகள் நாட்டில் நிறைந்துள்ள பலகோடி மக்களை இன்னும் நல்வழியில் வாழவைக்கின்றன என்பது மறுக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதனால்தான் மகாகவி பாரதியும் "புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும்... அவைதான்' என்றார்.

நல்வழியை கற்றோர்களும் உற்றோர்களும் சான்றோர்களும் எடுத்துரைத்தால் கருதிப்பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுக்கப்படும் முடிவால் குலமும், வளமும் காக்கப்படும். பிடிவாதத்துடன் நற்கருத்துகளைப் புறந்தள்ளினால் அழிவு வந்து சேர்வது உறுதி என்பதைப் பல வகைகளில் உலக மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர் படைப்பாளர்கள்.

இராமாயணத்தில் ராமனின் மனைவியான சீதையைக் கவர்ந்து நன்னெறிக்கு எதிராக நடந்த இராவணனிடம் பலர் புத்தி கூறி புரியவைக்க முயன்றனர். மயக்கத்தில் இருந்த இலங்கை வேந்தனின் மூளைக்குள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உவந்து உரைத்தது எதுவும் செல்லவில்லை.

குறிப்பாக, சீதையை விடுவித்து ராமனிடம் ஒப்படைத்து மன்னிப்பு வேண்டி, உன் தம்பியருடன் சுற்றம் மகிழ்ந்து வாழலாம் அல்லது வரிசை வரிசையாக நம் படைகளை அனுப்பி அவை அழிவதைக் கண்டு நீ இங்கிருந்து தேம்பி அழவேண்டிவரும் என சாதக - பாதகங்களை கும்பகர்ணன் எடுத்துரைத்தது உலகம் உற்று நோக்க வேண்டியது.

தையலை விட்டு, அவன் சரணம்

தாழ்ந்து, நின்

ஐயறு தம்பியோடு அளவளாவுதல் 

உய் திறம் அன்று எனின்....

பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை

சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்

மந்திரம் அன்று'

-கம்ப ராமாயணம்.

இதைக் கேட்டு சினந்த இராவணன், அற்ப மனிதர் இருவரை வணங்கி, அந்த கூனுள்ள

குரங்கைக் கும்பிட்டு உயிர் பிச்சைப் பெற்று வாழும் மானமில்லாத வாழ்க்கை உனக்கும் உன் தம்பிக்கும்தான் பொருந்தும்.

நான் ஒருபோதும் அந்த இழிசெயலைச் செய்ய மாட்டேன், நீ எழுந்து செல் என்று

கும்பகர்ணனிடம் கடுமையாகக் கூறுகிறான். முடிவில் தம்பியர், மகன் உள்ளிட்ட படைதனை இழந்து தாமும் அழிந்து போகிறான்.

மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்

கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு,

உய் தொழில்

ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;

யான் அது புரிகிலேன்; எழுக போக...

-கம்ப ராமாயணம்.

மகாபாரதத்தில், கண்ணன் தூதுப்படலத்தில் கண்ணன் எடுத்தியம்பியதாவது: புகழ்ச்சொல்லை விரும்பும் தன்மையுள்ள பாம்புக் கொடியோனே! உனது துணைவர்களான பாண்டவர்களை அழைத்து கூடியமட்டிலும் சில நாடுகளைக் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வாயானால் உன் சத்திய உறுதித்தன்மையைக் கண்டு

உன்னோடு நட்பு கொண்டு பல அரசர்கள்

உன்னைப் புகழ்வர். இதற்கு மறுப்பு தெரிவித்தால் அறமும் ஆண்மையும் உன்னைப் புகழாது இகழும் என்று இனிதாக துரியோதனனனுக்கு

எடுத்துரைக்கிறார் கண்ணன்.

கண்ணனின் எவ்வித வேண்டுகோளையும் ஏற்காத துரியோதனன், அனைத்துக் கோரிக்கை

களையும் நிராகரித்ததுடன், தூதாக வந்த கண்ணனின் குலம் குறித்தும் அவர் தொழில் குறித்தும் இகழ்ந்து பேசி அவமதித்தான்.

சொல் அவாவு உரக துவச! நின் உரிய

துணைவர் தங்களை அழைத்து நீ

......

அல்ல ஆம் என மறுத்தியேல், அறமும்

ஆண்மையும் புகழும் அல்லவே

- வில்லிபாரதம்

கேடுதரும் சூதாட்டம்தனை விரும்பச் செய்து, சூழ்ச்சியால் வஞ்சனையால் பாண்டவர் ஐவரையும், அவர்தம் நாடு, நகரம், மாடு, மனை

உள்ளிட்ட சொத்துகளையும் அவர்தம் மனைவி

யாகிய திரெளபதியையும் அடிமையாகக் கொண்டனர், இது பாரதப் போருக்கு அடிப்படைக் காரணமாய் அமைந்ததை யாவரும் அறிவோம். நீதி நெறி, தர்ம சாத்திரங்களில் இணையற்றவராக விஞ்சி நின்ற விதுரன் துரியோதனனுக்கு சிறிய தந்தை என்ற முறையிலும், நாட்டின் நலம் பேணும் அமைச்சர் என்ற முறையிலும் அறிவுரை பகர்கின்றார். செவிமடுக்க பொறுமையின்றி அவரை ஏளனம் செய்து அவ்விடம் விட்டு அகலச் செய்கிறான் துரியோதனன்.

பாண்டவர்களிடம் இருந்து எவை எவற்றையெல்லாம் பறித்தாயோ, அவற்றை மீண்டும் அவர்களிடமே வணங்கி ஒப்படைத்து அவர்கள் நாட்டிற்குச் செல்ல விடு!. இதனால், உன்மீது விழுந்த பழியிலிருந்து நீ மீண்டுவர வாய்ப்புள்ளது. இதை நீ செய்யாவிடில் மகாபாரதப் போர் வரும். அதில் நீங்கள் அனைவரும் அழிந்து

போவீர்கள் என்று எச்சரிக்கை செய்தார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துரியோதனன் அவர்மீது வெறுப்பை உமிழ்ந்தான். பின்னாளில், விதுரன் கூறியது போலவே துரியோதனாதிகள் அனைவரும் அழிந்து

பட்டனர்.

பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற்

கொண்டதெலாம்

மீண்டவர்க்கே ஈந்துவிட்டு, விநயமுடன்,

ஆண்டவரே, யாங்கள் அறியாமை

யால்செய்த

.......

மாபா ரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்

- பாஞ்சாலி சபதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.