Enable Javscript for better performance
ஆசனங்கள் ஏழின் மேல் அமரர்க்கு அதிபதி!- Dinamani

சுடச்சுட

  

  ஆசனங்கள் ஏழின் மேல் அமரர்க்கு அதிபதி!

  Published on : 20th September 2012 05:46 PM  |   அ+அ அ-   |    |  

  v1

     " "வே தத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளுரே'' என்று திருஞானசம்பந்தர், வேளூர் வைத்யநாத சுவாமியைப் போற்றுவார். இத்தலமே இன்று, "வைத்தீஸ்வரன் கோயில்' என்றழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற உன்னதத் தலமாகும்.

  சம்பாதி என்னும் பறவை, மணலைச் சிவலிங்கமாக வைத்து வேத மந்திரங்களால் வழிபட்ட தலம் "வைத்தீஸ்வரன் கோயில்'. அருணனின் மகன் சம்பாதி. இவன் ஜடாயுவின் தமையன். ரிக்வேத மந்திரத்தால் சம்பாதி சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பெருமையுடைய வைத்தீஸ்வரன் கோயிலைப்போல மற்றொரு தலமும் சிறப்புடையது. இங்கு சாண்டில்ய முனிவர், ரிக்வேதத்தால் சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றார்.

  ரிக்வேதத்தின் முக்கியமான கொள்கை, "ஒளியே கடவுள்' என்பதாகும். இங்கு "ஒளி' என்பது புற ஒளி அல்ல! நம் இருதயக் குகையில் உள்ள "அக்ஞானம்' என்ற இருட்டையும் மீறி அவ்வப்போது ஒளிரும் தெய்வீக ஒளி. அந்தத் தெய்வீக ஒளியை நிரந்தரமாகப் பெறவும், அதனால் வையகத்தையே ஒளிமயமாக மாற்றவும், "சாட்டியக்குடி' என்ற தலம் அருள் புரியும்.

  சோழ நாட்டில், காவிரி நதியின் இரு கரைகளிலும், மற்றும் அதன் கிளை நதிகளின் கரைகளிலும் அற்புதமான பல நூறு திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூர்த்தி, தவம், தீர்த்தம் என்பனவற்றால் பாடல் பெற்ற பெருமையுடையவை.

   தற்போதைய நாகப்பட்டிணம் மாவட்டத்தில், கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள பெருமை மிக்க தலம் சாட்டியக்குடி. இத்தலம் நாகப்பட்டிணம்- திருத்துறைப்பூண்டி வழியில் அமைந்துள்ளது. திருவாரூர்- கீழ்வேளூர்- தேவூர் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்திற்கு அருகில் கீழ்வேளூர், தேவூர், கன்றாப்பூர், கச்சனம்,  கோளிலி, வலிவலம் முதலான பாடல் பெற்ற தலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

       

  வேத மந்திர வடிவங்கள்:

  கௌதமி நதியில் உதித்த சாண்டில்யர் என்னும் முனிவர், ரிக் வேதத்தால் வழிபட்டதால் இத்தல இறைவரின் திருநாமம், "ரிக்வேத நாதர்' என்றும், "வேதபுரீச்வரர்' என்றும் ஆயின. அம்பிகையின் திருப்பெயரும் "வேதநாயகி' ஆகும்.  இங்கு ஐயனும், அம்பிகையும் வேதமந்திர வடிவாகக் காட்சியளிப்பது குறிப்பிடத் தக்கது. "ஜாட்டியம்' என்றால் வெப்ப நோய் என்று பொருள். "ஜாட்டியம்' என்னும் ஜுர தேவதை, இங்கு சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதால் "சாட்டியக்குடி' என்ற பெயர் அமைந்ததாகக் கூறுவர். மேலும் சாண்டில்ய முனிவர் பூசித்ததால் "சாண்டியல்ய குடி' என்றழைக்கப்பட்டு, காலப் போக்கில் சாட்டியக்குடியாயிற்று என்று கருதுவாரும் உண்டு.

  கோயிலின் முன்புறம் "வேததீர்த்தம்' என்னும் புஷ்கரணி உள்ளது. பற்பாடகம், நில வேம்பு, பூலாங்கிழங்கு, நன்னாரி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி முதலான வெப்பம் தீர்க்கும் மூலிகைகள் இத்திருக்குளத்தைச் சுற்றி வளர்ந்துள்ளமை ஓர் அதிசய நிகழ்வு!

  இத்தீர்த்தத்தில் ஐப்பசி மாதப் பிறப்பு அன்றும், மாசி மாதப் பௌர்ணமியிலும், வைகாசி மாதப் பௌர்ணமியிலும், பௌர்ணமி, விசாக நட்சத்திரம் கூடிய நன்னாளிலும் முறைப்படி நீராடி, வேதபுரீச்வரரையும் வேதநாயகி அம்மையையும் வழிபாடு செய்வோர், நோய்நொடியின்றி ஆரோக்யத்துடன் திகழ்வர். இதில் நீராடி குஷ்டம் போன்ற கொடிய நோய் நீங்கியவர்கள் பலர்.

  ஒளி வழிபாடு :

  குளக்கரையில் அருள் பாலிக்கும் செல்வ விநாயகரை தரிசித்து கோயிலுக்குள் நுழையலாம். மேற்கு திசை நோக்கி அமைந்த இத்திருக்கோயிலின் முன்புறம், மூன்று நிலைக் கோபுரங்களுடன் அழகாகக் காட்சியளிக்கிறது. கோயிலில் நுழைந்தவுடன் தென் மேற்கில் கமல விநாயகர், வடமேற்கில் விச்வநாதர், வள்ளி தேவதேவ சேனா சமேத சுப்ரமண்யர், கஜலட்சுமி ஆகியோர் சந்நிதிகள் அமைந்துள்ளன. மகா மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறையில் உயரமான லிங்க பாணத்தில் "ரிக் வேதபுரீச்வரர்' அருட்காட்சி வழங்குகிறார்.

   கருவூர்த் தேவர் என்னும் சித்தர் வழிபட்டு திருவிசைப்பா என்னும் பாமாலை பாடி அருள் பெற்ற தலங்களில் சாட்டியக்குடியும் ஒன்றாகும். அவர் இத்திருக்கோயிலை ""ஏழ் இருக்கை'' என்றும், தலப்பெயரைச் சாட்டியக்குடி என்றும் குறிப்பிடுகிறார்.

  "இத்தலத்தில் அன்பர்களின் கண்களினின்று பெருக்கெடுத்து ஓடும் பக்திப் பரவசக் கண்ணீர் அருவி, இறைவனுக்குத் திருமஞ்சனமாக ஆகும் இடம்' என்றும், "இத்திருத்தலத்தில் வாழ்கின்ற மக்களின் மனமே திருக்கோயில் (கருவறை)' என்றும் அவர் போற்றியுள்ளது இறைவனது அருட் பெருமைகளை நமக்கு உணர்த்தும்.  

   ""இத்தலத்து மறையவர் வெண்ணெயை அப்போதைக்கு அப்போது உருக்கி, நெய்யைச் சொரிந்து வளர்க்கின்ற ஓமத் தீயினால் பிரகாசிக்கின்ற ஒளி விளக்கையுடையவர் ஏழிருக்கை ஈசர்'' என்று சிறப்பாகப் பாடுகிறார் கருவூர்த் தேவர். "இத்தலத்தில் பாடப்பட்ட தனது பத்து பாடல்களையும் சிந்தையில் பதித்த மனிதருக்கு உள் ஒளி பெருகும்; சிவலோகம் சித்திக்கும்' என்று கருவூர்த் தேவர் குறிப்பிட்டுள்ளது, ரிக்வேத ஒளி வழிபாட்டுடன் சிந்திக்கத் தக்கது.

  ஏழு ஆசனங்கள் :

  இறைவனது ஆவுடையார் பீடம் ஏழு ஆசனங்களை உடையது. அனந்தாசனம், சிம்ஹாசனம், யோகாசனம், விமலாசனம், பத்மாசனம், சிவாசனம், விமலாசன ஊர்த்துவம் ஆகிய ஏழு ஆசனங்களும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதால்தான் இத்திருக்கோயிலை "ஏழ் இருக்கை' என்று கருவூர்த் தேவர் பாடியுள்ளதாகச் சொல்வது பொருத்தமாகவே உள்ளது.

  வேதபுரீச்வரரை ஆனந்தமாக தரிசனம் செய்து கொண்டு பிரகாரத்தை வலம் வருகிறோம். வடக்கு திருச்சுற்றில் துர்க்கை, பிரம்மா, சண்டிகேச்வரரை வணங்குகிறோம். கிழக்குப் பிரகாரத்தில் நவகிரகம், பைரவர், சாண்டில்ய முனிவர், கருவூர்த் தேவர், சம்பந்தர், அப்பர், விநாயகர், சூரியன் ஆகியோரை தரிசிக்கிறோம். இத்தலத்தில் குபேரன், வேதபுரீச்வரரை வழிபட்டு அருள் பெற்றார். இங்குள்ள குபேரனது திருவுருவம் மிகவும் அழகாக உள்ளது.

  வேதநாயகி அம்மை, சுவாமிக்கு வலப்புறம் தனிக்கோயிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மிகவும் உயரமான அருமையான அமைப்பு, நம் கண்ணையும் மனத்தையும் ஈர்க்கிறது. அம்பிகையின் இருகரங்களும் அட்ச மாலையும், தாமரையும் ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் அபய வரதமாகக் காட்சியளிக்கின்றன. வேத நாயகியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு திரும்பவும் சுவாமிகோயில் திருச்சுற்றில், தென் கிழக்கில் உள்ள தல விருட்சமான வன்னிமரத்தை வலம் வருகிறோம். பல நூற்றாண்டுகள் பழமையான -முதிர்ந்த இந்த விருட்சத்தை வலம் வந்தால் வெப்ப நோய்கள் நீங்கும் என்பது பலரும் உணர்ந்த அனுபவம். இம்மரத்தடியில் தியானம் செய்வது மிகவும் பலனளிக்கும் என்கிறார்கள்.

  பல கல்வெட்டுகள் நிறைந்த இத்திருக்கோயிலின் 34 உற்சவ மூர்த்திகள், பாதுகாப்புக் கருதி திருவாரூர் திருக்கோயிலில் உள்ளதாக அறிய முடிகிறது. அதில் உஷா, பிரத்யுஷா சமேதரான சூரிய மூர்த்தி, திரிபுர சம்ஹாரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலான பஞ்சலோக விக்ரகங்கள் குறிப்பிடத் தக்கவை.

       தினமும் ஐந்து கால பூஜை நடைபெறும் இத்திருக்கோயிலில் பிரதோஷம், ஆடி, தை கிருத்திகை முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன. மாசி மக உற்சவம், முன்பு ஒரு காலத்தில் நடைபெற்றதாம். கருவூர்த்தேவரது சந்நிதியில் பௌர்ணமியன்று சிறப்பாக வழிபாடு செய்கிறார்கள்.

  திருப்பணி:

  சோழ மன்னர்கள் திருப்பணி செய்த இத்திருக்கோயில், மீண்டும் சீரமைக்கப் பெற்று, கடந்த ஜூன் 24 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சுவாமி கோயில் அக்னி மூலையில் (வன்னிமரம் அருகில்) கொஞ்சம் பகுதி மதில்சுவர் இன்றும் கட்டி முடிக்காததால் கோயிலுக்குப் பாதுகாப்பு இல்லை. மதில் சுவர் கட்டி, உற்சவர் பாதுகாப்பு அறை ஏற்படுத்தினால்தான் உற்சவ விக்ரகங்களை திருவாரூரிலிருந்து கொண்டு வந்து திருவிழாக்களை நடத்த இயலும் என்பது சிவாசாரியாரின் வேண்டுகோள்.

  அதைப் போல அம்பாள் கோயில் மதில் சுவர் முழுதும் கட்டப்பட வேண்டிய நிலையில் உள்ளது. வசந்த மண்டபத் திருப்பணியும் உடனே செய்ய வேண்டிய நிலை. ரிக் வேதத்தை பின்பற்றுபவர்களும், சாண்டில்ய கோத்திரத்தில் வந்தவர்களும், சகல சிவனடியார்களும் அவசியம் சென்று தரிசித்துப் பேறு பெற வேண்டிய ஒரு அரிய தலம் இது.

  திருப்பணிகள் நிறைவேற சிவநேயச் செல்வர்களது பொருளுதவியும் ஆதரவும் பெருமளவில் தேவை. திருப்பணிக்கு உதவி சிவபுண்ணியம் பெறுங்கள். தொடர்புக்கு: கருவூர்த் தேவர் வழிபாடு மன்றம், 1/140 சாட்டியக்குடி, கிள்ளுக்குடி அஞ்சல், கீழ்வேளூர் வழி,   நாகை மாவட்டம் 611109. போன்: 9442446077. (வங்கி மூலம் தொகை அனுப்ப விரும்புவோர்; இந்தியன் வங்கி, எட்டிகுடி கணக்கு எண்: 867701034)

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp