சந்திரனின் இயக்கத்தை வைத்துக் கணக்கிடப்படும் காலக் கணக்கு "சாந்திரமானம்' முறை எனப்படுகிறது. அதன்படி இன்றைய (15.7.2011) பௌர்ணமி தினம் ஒரு புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த தினம் வியாச பூர்ணிமா என்றும், குரு பூர்ணிமா என்றும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. தென்னாட்டில் இந்நன்னாளை "வியாஸ பூஜை' என்கிறார்கள்.
மழை பொழிந்தால் பின்னாளில் கோடை வரும். அந்த வகையில் வேதம் மிகவும் நன்றாக ஒரு காலத்தில் இருந்தால், கொஞ்சம் மங்கியிருக்கும் காலமும் உண்டு. அச் சமயத்தில் இறைவனால் சொல்லப்பட்ட வேதத்தை ரட்சிக்க வேண்டும். என்ன செய்வது? வியாச ரிஷி ஒரு நாள் சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
""கலியுகத்தில் மனிதனுடைய ஆயுள், அறிவாற்றல், வேத கர்மங்களில் ஈடுபடும் எண்ணம் முதலியவை குறைந்துவிடும். உலகில் அதர்ம இருள் பரவும். எனவே வேதத்தைக் காப்பாற்ற வேண்டும்'' என்பது அவருக்கு விளங்கியது. ஆல் போல் தழைத்து விரிந்த வேதத்தைப் பயில்வது, ஆற்றல் குறைந்த வேதியர்களுக்குக் கடினமாகி விடும்; ஆகவே வேதத்தை எளிதில் பயிலும் வகையில் நான்காகப் பிரித்தார் வியாச பகவான். நமது சநாதன தர்மத்தையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து பயன்படும்படிச் செய்தார் அந்த மகான். காதினாலே கேட்டு, வாக்கினாலே ஸ்வரத்தோடு பாராயணம் செய்து, பரம்பரை பரம்பரையாக வேதம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் நீண்ட வேதத்தை எளிமையாக்கினார் வியாசர்.
ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்கு பாகங்களாகப் பிரித்து ஸýமந்து, பைலர், ஜைமினி, வைசம்பாயனர் ஆகிய நான்கு ரிஷிகளுக்கும் ஒவ்வொரு வேதத்தை உபதேசம் செய்தார். அவர்கள் மூலமும், அவர்களுக்குப் பிறகு வந்த ரிஷிகள் மூலமும் அந்த சப்த ரூபமான வேதமந்திரங்கள் இன்றளவும் நம்மிடையே நிலைபெற்றுள்ளன என்றால் அதற்கு வேதவியாசர்தான் காரணம். எல்லோரின் வாழ்க்கைக்கும் பயன்படும் வகையில் மகாபாரதம், பிரம்மசூத்ரம் ஆகியவற்றையும்
அருளினார்.
தொன்மையான நூல்களுள் ஒரு சிலவேனும் இன்று நம்மிடையே உள்ளன என்றால் அதற்கும் காரணம் மகரிஷி வியாசரே ஆவார். பகவான் விஷ்ணுவே வியாஸர் உருவில் அவதரித்ததாகக் கருதப்படுகிறது. "முனிவர்களுள் வியாசராக இருக்கிறேன்' என்று கண்ணனே பகவத் கீதையில் கூறியுள்ளார் என்றால் வியாசரின் பெருமையை என்னவென்பது?
இவ்வாறு அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியைத் தந்த குருவிற்கு வந்தனமும், நன்றியும் செலுத்தும் விதத்தில் குரு பூர்ணிமா அமைந்துள்ளது. படிப்பையோ, மந்திரத்தையோ, ஞான மார்க்கத்தையோ கற்பித்த குருமார்களுக்கு நன்றி செலுத்துவதும் வியாச பூஜையின் சிறப்பு அம்சமாகும்.