""ஆதி - அந்தமில்லாத முதல்வன், பரம்பொருள், விசாக நட்சத்திரத்திற்கு உரியவன்'' என்று தமிழ்க் கடவுள் முருகனைப் பாடுகிறார் அருணகிரிநாதர். ""உருவமற்றதாகவும், உருவம் பெற்றதாகவும், முதலற்றதாகவும், பல பொருளாகவும், ஒரு பொருளாகவும் விளங்கி நிற்கும் ஜோதிப் பிழம்பே ஒரு திருமேனி பெற்று ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு உலகம் உய்வதற்காகத் தோன்றியது'' என்று முருகனை கந்த புராணத்தில் வழிபடுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
அவதாரம்!
தேவர்களை சிறைப் பிடித்து, பல கொடுமைகளையும் அரங்கேற்றி வந்தான் சூர பத்மன். இதனால் மனம் வருந்திய தேவர்கள் சிவபெருமானை வழிபட்டனர். அவர்களின் இன்னல்களைக் களைவதற்காக முருகப் பெருமானைத் தோற்றுவித்தார் ஈஸ்வரன். வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில் நிகழ்ந்தது இந்த அவதாரம்.
குமரகுருபர சுவாமிகள் தனது கந்தர் கலிவெண்பாவில் முருகனுடைய அவதாரத்தை அழகாகக் குறிப்பிடுகின்றார்.
அசுரனின் துன்பத்தைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய ஈஸ்வரன், தனது ஐந்து திருமுகங்களோடு கீழ்நோக்கிய திருமுகம் ஒன்றையும் கொண்டு, ஆறு திருமுகங்கள் உடையவராய் ஆறு நெற்றிக் கண்களில் இருந்தும் நெருப்புப் பொறிகளை வெளியிட்டார். அவை உலகெங்கும் பரவின. தேவர்கள் அப்பொறிகள் அனைத்தையும் திரட்டி வாயுக் கடவுளிடம் எடுத்துச் சென்றனர். அதைப் பெற்றுக் கொண்ட வாயு பகவான், அக்னி பகவானிடம் கொடுக்க, அவரோ அவற்றை கங்கையில் சேர்த்தார்.
அந்த நெருப்புப் பொறிகளின் வெம்மையைத் தாங்க இயலாத கங்கை, அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தாள். அங்கே அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகளாய் அவதரித்தன. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டன. சிவபெருமான் பார்வதியிடம் அந்த சேய்களின் திருவுருவைக் காட்டினார். தேவியோ அந்த ஆறு திருவுருவங்களையும் எடுத்து ஒருசேர அணைக்க, அவை ஒன்றாக மாறி "கந்தன்' என்ற பெயர் ஏற்பட்டது. அதன் பின் சூர சம்ஹாரமும் நிகழ்ந்தது.
விசாகன்!
முருகனுக்கு கந்தன், சுப்ரமணியன், வேலவன் என்று பல திருப்பெயர்கள் உள்ளன. அதில் "விசாகன்' என்கிற பெயரும் ஒன்றாகும். "வி' என்றால் "பட்சி' என்றும், "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' என்றும் பொருள். எனவே "மயிலாகிய பட்சியில் சஞ்சரிப்பவன்' என்றும் கொள்ளலாம். அதேசமயம் "வி' என்றால் "இல்லாத' என்றும் "சாகை' என்றால் "கிளை' என்றும் தமிழ் உணர்த்துகிறது.
அதாவது "கிளை இல்லாத' என்று பொருள். ஈஸ்வரன் ஸ்தாணுவாகவும் (ஸ்தாணு என்றால் பல ஆண்டுகளைக் கடந்து கல் உருவம் பெற்ற மரம் என்று பொருள். சுசீந்திரத்தில் இறைவனுக்கு ஸ்தாணுமாலயன் என்று பெயர்), அம்பாள் அபர்ணாவாகவும் (இலையே இல்லாத நார் போன்ற கொடி என்று பொருள்) இருக்கும்போது முருகன் விசாகராக இருக்கிறார். அதாவது தந்தை பட்ட கட்டையாகவும், தாய் இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்போது குழந்தை முருகனும் கிளையே இல்லாத கீழக்கன்றாக உள்ளார். இது "வைராக்ய ஸ்வரூபம்' என்று காஞ்சி பரமாச்சாரியார் விளக்கமளித்துள்ளார்.
குமரன் கோயில்களில் விசாகம்!
குமரன் குடிகொண்டுள்ள கோயில்களிலெல்லாம் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி முதலிய தலங்களில் முருகனடியார்கள் பாத யாத்திரையாகச் சென்று முருகனை வழிபடுகின்றனர்.
அந்த வகையில் திருச்செங்கோட்டில் பதிமூன்று நாட்கள் வைகாசி விசாகம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் திருவிழாவன்று மலையிலிருந்து ஊருக்குப் பட்டினப் பிரவேசம் நடைபெறும். செங்கோட்டு வேலவர் மலையிலிருந்து கீழே இறங்கி வருவார்.
அவர் தனது தந்தையான சுவாமி கைலாசநாதரை தரிசித்துவிட்டு, மீண்டும் தனது இருப்பிடம் செல்லும் விழா காண வேண்டிய ஒன்றாகும். குரோம்பேட்டையில் உள்ள குமரன் குன்றம் சுவாமிநாத சுவாமி கோயிலிலும் மாதம் தோறும் விசாகத்தன்று திருப்புகழ் மன்றத்தினரால் படி பஜனை நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தில் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாமும் வைகாசி விசாகத்தன்று அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் செல்வோம். விசாகனை வழிபட்டால் வினை தீரும் என்பது உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உஜ்வாலா சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூர் கண்டனம்!

உஜ்வாலா திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை 4ஆக குறைப்பு!

புதுச்சேரி அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



