மன்மத லீலையை வென்றார்!

திருக்கயிலையில் சிவபெருமான், ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். "அவர் தவத்தைக் கலைத்து, பராசக்தியை அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு செய்ய வேண்டும். இந்தத் தெய்வீகத் தம்பதியின் அம்சங்களோடு பிறப்பவரால் சூரபத்

திருக்கயிலையில் சிவபெருமான், ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். "அவர் தவத்தைக் கலைத்து, பராசக்தியை அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு செய்ய வேண்டும். இந்தத் தெய்வீகத் தம்பதியின் அம்சங்களோடு பிறப்பவரால் சூரபத்மன் உள்ளிட்ட அவுணர் குலம் அழியும்' என்று திட்டமிட்டனர் தேவர்கள். அப்போது அவர்களிடம், திட்டத்தை நிறைவேற்றும் தூதுவனாக சிக்கியவன் மன்மதன். தேவர்களை பகைத்துக் கொள்ள முடியாமல், அவர்கள் சொல்லுக்குப் பணிந்து பரமேஸ்வரன் மீது மலர்க் கணைகளை வீசி, அவரது தவத்தைக் கலைத்தான் மன்மதன். தன்னிடம் அபசாரப்பட்ட மன்மதனை நெற்றிக் கண் திறந்து பொசுக்கிவிட்டார் சிவபெருமான்.

ஸ்ரீதிருமூலநாத சுவாமி , ஸ்ரீ குங்கும செளந்தரி அம்பாள்

தனது கணவன் மன்மதனை பறிகொடுத்த துக்கத்தில் மனம் கலங்கிய ரதிதேவி, அவனுடைய உயிரை மீட்கும் பொருட்டு சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் புரிந்தாள். மன்மதன் இல்லாததால் படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் பிரம்மாவும் தவித்தார். உலகமே நிலை குலைந்தது. அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

இதனால் சாந்தமடைந்த சிவபெருமான், தவம் செய்து கொண்டிருந்த ரதி தேவியின் முன் ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராய்க் காட்சியளித்தார்; அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் வகையில் மன்மதனை உயிர்ப்பித்து அருளினார்.

அவ்வாறு ரதிதேவி தவம் புரிந்த இடமே "பூவாளூர்' திருத்தலமாகும். ரதி தேவியின் பதியாகிய மன்மதன் உயிர்த்தெழுந்த திருத்தலம் என்பதால், "மன்மதபுரம்' என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. அதேபோல் ஆதியில் இவ்விடம் முழுவதும் பூக்கள் நிறைந்த சோலை வனமாக இருந்ததால் "பூவாளியூர்' என்று அழைக்கப்பட்டதாகவும், பின்பு திரிந்து "பூவாளூர்' என்று தற்போது அழைக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். தனது பூங்கணைகளையே "வாள்'போல் மன்மதன் பயன்படுத்தியதால், இன்றைய "பூவாளூர்' என்ற பெயரும் பொருத்தமுடையதாகவே உள்ளது.

இத்தலத்தில் ஸ்ரீ குங்கும செüந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருமூலநாத சுவாமி கோயில்கொண்டு அருள்பாலித்து வருகிறார். சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவனை ரதி தேவியும், சூரியனும், சந்திரனும் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற முருகப் பெருமானின் சந்நிதி உடைய திருத்தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

பித்ரு தோஷ நிவர்த்தி

   பித்ரு தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாக பூவாளூர் விளங்குகின்றது. தென்புலத்தாரின் ஆன்மா சாந்தியடைய, அவர்கள் இறந்த நாளில் ஆண்டுதோறும் திதி கொடுக்க வேண்டும். ஏதேனும் காரணத்தால் திதி கொடுப்பது தவறிப் போனால், அமாவாசை நாள்களில் பூவாளூர் வந்து, அருகில் ஓடும் கயா பல்குனி (தற்போது இந்த ஆறு "பங்குனி ஆறு' என்று அழைக்கப்படுகிறது) ஆற்றில் நீராடி, திதி கொடுக்கலாம். பின்பு இக்கோயிலில் உள்ள வெள்ளை விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்தால், "பித்ரு தோஷம்' நீங்கும் என்பது ஐதீகம்.

   கயா பல்குனி ஆற்றில் குளிப்பது, கங்கையில் குளிப்பதற்கு ஈடான புண்ணியத்தை அளிக்கும் என்கின்றனர். எந்தக் காலத்திலும் வற்றாமல் இருப்பது இந்த நதியின் சிறப்பு ஆகும்.

நாக தோஷ நிவர்த்தி

   இவ்வாலயத்தில், தனிச் சிறப்புடைய "வெள்ளை விநாயகர் சந்நிதி' உள்ளது. இவர் வலம்புரி விநாயகர்.  நாகதோஷம் உள்ளவர்கள், "நாக சதுர்த்தி' தினத்தன்று இந்த விநாயகருக்கு அர்ச்சனை செய்து, "மோதகம் நிவேதனம்' செய்தால் நாகதோஷம் நீங்கும் என்கின்றனர் பெரியோர்கள்.

பரிவார தெய்வங்கள்

   இங்கு ஒரே கல்லால் ஆன ஆறு முகங்களைக் கொண்ட முருகப்பெருமானின் அற்புதக் கோலத்தை தரிசித்து மகிழலாம். இவர் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்.

    ஆலயத்தின் கோஷ்ட தெய்வங்களாக தட்சிணா மூர்த்தி, சண்டிகேஸ்வரர், பிரம்மா, கஜலட்சுமி, சிவ துர்க்கை, எட்டு கைகள் கொண்ட விஷ்ணு துர்க்கை, ஜேஷ்டாதேவி, பாலதண்டாயுதபாணி ஆகியோர் தனித்தனியே காட்சி தருகின்றனர். வடகிழக்கு மூலையில் நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. மேலும் அதன் அருகிலேயே சனீஸ்வர பகவானும், பைரவரும் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர்.

   இக்கோயிலின் தல விருட்சமாக "வில்வ மரம்' விளங்குகின்றது. கோயிலின் உள்ளேயே வற்றாத தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. இதிலிருந்து பெறப்படும் நீரிலிருந்துதான் இறைவன், இறைவிக்கு அபிஷேகங்கள் செய்விக்கப்படுகின்றன.

   இங்கு சுவாமியும், அம்பாளும் கிழக்கு நோக்கி தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். இவ்விருவரையும் தனித்தனியே சுற்றிவர முடியாது; சேர்த்தே பிரதட்சிணம் செய்ய முடியும் என்ற வகையில் சந்நிதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

   பிராகாரத்தில் மகாலட்சுமியும், ஜேஷ்டா தேவியும் அருகருகே இருப்பது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பு. இதனால் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய உகந்த திருத்தலமாகவும் பூவாளூர் விளங்குகிறது. கோயிலுக்கு வெளியே தனி சந்நிதியில் ஊர் கிராம தேவதையாக வாக்குவாளம்மன் (சட்ட மாதா) அருள்பாலித்து வருகிறார்.

திருமணத் தடை விலகும்

   ரதிதேவிக்கு மன்மதனை உயிர்பித்தருளி இறைவன் தம்பதி சமேதராக கல்யாண திருக்கோலத்தில் காட்சியளித்த திருத்தலமிது. ஆதலால் திருமணம் ஆகாதவர்கள் பெüர்ணமி தினங்களில் குங்கும செüந்தரி அம்பாளுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்தக் குங்குமத்தை எடுத்துச் சென்று தொடர்ந்து அணிந்து கொண்டால் திருமணத் தடைகள் விலகும்.

  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் வாங்கி இங்கு கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

அமைவிடம்

   திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது பூவாளூர்.

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து இங்கு வருவதற்கு நேரடி பேருந்து வசதி உண்டு. இல்லையேல் லால்குடி வந்து, அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊருக்கு வேறு பேருந்துகளில் வரலாம்.

- கலைதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com