Enable Javscript for better performance
குதிரை முகத்தோனுக்கு உணவளித்த குருமகான்!- Dinamani

சுடச்சுட

  

  குதிரை முகத்தோனுக்கு உணவளித்த குருமகான்!

  By எஸ். வெங்கட்ராமன்  |   Published on : 20th September 2012 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  9vm4

  மத்வ குருமார்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் வைத்துப் போற்றப்படுபவர் ஸ்ரீவாதிராஜர். கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், ஹீவினிகேரே என்னும் இடத்தில் அவதரித்தவர்.

  தனது 8வது வயதிலேயே துறவு வாழ்க்கையை மேற்கொண்ட வாதிராஜர், வாகீசதீர்த்தர் என்ற மத்வகுருவிடம் சீடனாக இருந்தார். கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற்று தன்னிகரற்ற மாணவனாகத் திகழ்ந்தார். 120 வயது வரை வாழ்ந்த இந்த மகான், சமஸ்கிருத மொழியிலும், கன்னட மொழியிலும் அசாத்திய பாண்டித்யம் பெற்றிருந்தார். சிறந்த கவிஞனாகவும் திகழ்ந்தார். இவர் இயற்றிய நூல்கள் கணக்கிலடங்காது. உடுப்பி கிருஷ்ணனிடம் அளப்பரிய பக்தி கொண்டிருந்தார். இன்றளவும் உடுப்பி கிருஷ்ணன் ஆலயத்தில் ஸ்ரீவாதிராஜர் வகுத்த சம்பிரதாயங்களே பின்பற்றப்படுகின்றன.

  மத்வ சித்தாந்த கொள்கைகளை பரப்பியதில் பெரும் பங்கு வகித்தவர் ஸ்ரீவாதிராஜர். தனது தீர்த்த யாத்திரையின்போது சங்கீத பிதாமகன் புரந்தரதாஸரை சந்தித்து அளவளாவினார். திருப்பதிக்கு சென்றபோது அவர் கண்களுக்கு திருமலை சாலிக்கிராம கற்களால் ஆன மலையாகத் தெரிந்ததால் கால்களை மடக்கி முழங்கால்களினாலேயே மலையைக் கடந்து திருவேங்கடமுடையானை தரிசித்தவர். தன் வாழ்நாட்களில் பல முறை தீர்த்த யாத்திரை மேற்கொண்டு பல இடங்களில் ஆலயங்களையும், மத்வ மடங்களையும் நிறுவியவர் ஸ்ரீவாதிராஜர்.

  பல அற்புதங்களை நிகழ்த்திய இவர், திருமாலின் ஹயக்ரீவ ரூபத்தை, தனது உபாசனை தெய்வமாகக் கொண்டவர். அவரது நித்ய ஆராதனைகளில் ஹயக்ரீவ பெருமானுக்கு நைவேத்தியம் படைக்கும் தருணத்தில் அந்தப் பெருமானே அதை அங்கீகரித்து உண்பாராம். ஒருசமயம் இவரது நடவடிக்கைகளில் சந்தேகம்கொண்ட சில மடத்து அன்பர்கள், சிறிதளவு விஷத்தை ஹயக்ரீவருக்கு அளிக்கும் பிரசாதத்தில் கலந்து வைத்துவிட்டனர். அன்று தனது பக்தனைக் காப்பாற்றும் பொருட்டு ஹயக்ரீவப் பெருமான் அனைத்து உணவையும் சாப்பிட்டு விட்டாராம். அவ்வாறு செய்ததன் காரணத்தை வாதிராஜரின் கனவிலும் தோன்றி தெரிவித்தாராம்.

  ஸ்ரீவாதிராஜர் உயிருடன் பிருந்தாவன பிரவேசம் செய்த இடம், கர்நாடக மாநிலம், சீர்ஸி என்னுமிடத்திற்கு அருகில் உள்ள சோதே ஆலயம். மிகவும் புண்ணியமான இந்தத் தலத்தில் ஸ்ரீவாதிராஜ தீர்த்தரின் ஆராதனை பூஜை மார்ச் 11ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்று விசேஷ வழிபாடுகளும் நடக்கின்றன.

  இங்குள்ள "தவளகங்கா' புனித தீர்த்தத்தில் நீராடி, பூதராஜன் என்று அழைக்கப்படும் ஸ்ரீவாதிராஜரின் சீடர் சந்நிதியையும், மகானின் பிருந்தாவனத்தையும் தரிசித்தால் குருவருளுடன், ஹயக்ரீவப் பெருமான் அருளையும் பெறலாம்.

  மேலும் தகவலுக்கு 08384-279685.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai